’இந்த நாயகனும் நாயகியும் தான் காதலிக்கப் போறாங்க’ என்று கதையைச் சொல்லிவிட்டு எந்தப் படமும் தொடங்குவதில்லை. அதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிந்த ரசிகர்களும் கூட, இயக்குனர் அப்படியொரு கதை விளக்கம் அளிக்கும்போது தெறித்துவிடுவார்கள். ‘குஷி’ படத்தின் தொடக்கத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அப்படியொரு முயற்சியை நிகழ்த்தியபோதும் அதுவே நிகழ்ந்தது.
ஆனால், ‘இதுதான் கதைன்னு சொல்லிட்டா அப்புறம் சீன்ல என்ன சுவாரஸ்யம் இருக்கும்’ என்று அலட்சியம் அடைந்தவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் அப்படத்தின் திரைக்கதை இருந்தது.
‘குஷி’ வெளியாகி தற்போது 24 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போதும் அப்படம் சுவாரஸ்யம் தரும் வகையில் இருப்பது எப்படி?
காதலுக்குத் தடையான ‘ஈகோ’!
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சிவா (விஜய்). அவரது பெற்றோர் (நிழல்கள் ரவி – பீனா பானர்ஜி) இருவரும் கலப்புத் திருமணம் செய்தவர்கள்.
திருநெல்வேலி அருகே குற்றாலத்தைச் சேர்ந்தவர் ஜெனி எனும் செல்வி (ஜோதிகா). இவரது பெற்றோர் (விஜயகுமார் – ஜானகி சபேஷ்) கிராமத்தில் அமைதியான வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயதாக இருக்கையில், இவர்களது பெற்றோர்கள் சென்னை வருகின்றனர். அப்போது ஒரு கடையொன்றில் சிவாவும் ஜெனியும் முதன்முறையாகச் சந்திக்கின்றனர்.
இளங்கலை பயிலும் வயதில், வெளியூர் சென்று மேற்படிப்பு பயில விரும்புகிறார் ஜெனி. ஆனால், அவரது தந்தை அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு மேற்கொள்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை தான் காதலித்த பெண்ணோடு சென்றுவிட, திருமணம் தடைபடுகிறது.
அதன்பிறகு, ஜெனி சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் முதுகலைப் படிப்பு மேற்கொள்கிறார். வெளிநாடு சென்று படிக்கத் திட்டமிட்ட சிவா, கொல்கத்தாவில் ஒரு விபத்தில் சிக்குகிறார்.
அப்போது, ஜெனி அளித்த ரத்த தானம் அவரது உயிரைக் காக்கிறது. பிறகு, ஜெனி பயிலும் அதே கல்லூரியில் சிவாவும் சேர்கிறார்.
ஜெனியின் தோழியும் சிவாவின் தோழனும் காதலர்கள். அதனால், இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அப்போது தொடங்கும் பழக்கம், இருவரையும் நட்பு கொள்ள வைக்கிறது. மெல்ல அது காதலாகிறது.
ஆனால், இருவருக்குமிடையே உள்ள காதலுக்கு அவர்களது ஈகோவே தடை போடுகிறது. தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்று ஜெனி எதிர்பார்க்க, அவ்வாறே நினைக்கிறார் சிவா. அந்த தவறான புரிதல் விரிசலை அதிகப்படுத்துகிறது.
இறுதியில் இருவரும் காதலில் ஒன்றுசேர்ந்தார்களா இல்லையா என்று சொல்கிறது ‘குஷி’யின் மீதி.
நிச்சயமாக இது புதிய கதை இல்லை தான். ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்கு ஏற்பச் சுவாரஸ்யமாகக் காட்சிகளை கோர்த்த விதத்தில் புதியதொரு காட்சியனுபவத்தைத் தந்திருந்தார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அதுவே இப்படம் பெருவெற்றியைச் சுவைக்கக் காரணமானது.
சுவையான காட்சிகள்!
குழந்தையாக இருக்கும் ஜெனியையும் சிவாவையும் காட்டி திரைக்கதையைத் தொடங்கியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அவர்கள் இடையேயான சந்திப்பு நம்மையும் குழந்தைகளாக மாற்றும்.
பதின்ம பருவத்தில் இருவரும் மீண்டும் சந்திக்கும் காட்சி அதன்பிறகு இடம்பெற்றிருக்கும். அப்போதும் கூட, இருவரும் நேருக்குநேராகச் சந்திக்காத வகையில் அதனை வடிவமைத்திருந்தார் இயக்குனர்.
தொடர்ந்து, வெவ்வேறு திசைகளில் இருக்கும் இருவரும் ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தது எப்படி என்பதற்கான விளக்கத்தைக் காட்சிகளில் சேர்த்திருப்பார்.
கோயிலில் மாற்றுத்திறனாளி ஏற்றிய தீபம் அணையப்போகும்போது சிவாவும் ஜெனியும் ஓடிவந்து கையை வைத்து அதனைக் காக்கும் காட்சி சட்டென்று நம் மனம் கவரும். போலவே, ஒரு காதல் கடிதத்தை எடுத்துவரும் சிவாவிடம் ‘அது என்ன’ என்று கேட்காமலேயே ஜெனி வார்த்தைகளைக் கொட்டுமிடமும் நம்மைக் குதூகலத்தில் ஆழ்த்தும்.
இடைவேளைக்குப் பிறகு, மது போதையில் தனது புகைப்படத்தை சிவா கிழிப்பதைப் பார்த்துவிட்டு ஜெனி ஆத்திரமடையும் காட்சி இன்னொரு உதாரணம். இப்படிச் சுவையான காட்சிகள் பல இதிலுண்டு.
ஒரு காட்சியில், தற்செயலாக ஜெனியின் தந்தை பாத்திரம் சிவாவைச் சந்தித்துப் பேசும். அப்போது, ஜெனி பற்றி அவரிடமே சில தகவல்களைச் சொல்வார் சிவா. அடுத்த நிமிடமே, இருவரும் ஜெனியை நேரில் பார்ப்பார்கள்.
‘தம்பி காதலிக்குற பொண்ணு ஒண்ணு அகம் பிடிச்ச கழுதையா இருக்குதாம்’ என்று ஜெனியிடம் அவரது தந்தை சொல்வார். அப்போது, ஜெனியை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார் சிவா.
அக்காட்சியைப் பார்க்கும்போது, ‘மௌனராகம்’ படத்தில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்று கார்த்திக், ரேவதி, சங்கரன் இடையேயான காட்சி நினைவுக்கு வரும். அதன் நீட்சி போலவே அக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
’குழந்தையா இருந்த ஹீரோயின் வளர்ந்துட்டாங்கறதை காட்ட ஒரு ‘இண்ட்ரோ’ கொடுக்கறோம். அவளைத் தேடி அப்பா வீட்டுல காத்துகிட்டிருக்காரு. ட்ரெயின்ல அவ வரலைன்னு சொல்றாரு வேலைக்காரர். ஆனா, அப்பா அவ வந்துட்டான்னு தெரிஞ்சுக்கிறாரு. ஏன்னா, அங்க இருக்குற ஒரு மாட்டுக்கு கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருக்கா அவரோட பொண்ணு. அப்புறம் அந்த பொண்ணை கேமிராவுல காட்டுறோம். அந்தப் பொண்ணு ஓடுறா. அவ காலை பாலோ பண்ணிகிட்டே போகுது கேமிரா. வயல்வெளி, மலை, கரடுமுரடான பாதை தாண்டி, ஒரு குன்று மேலே ஏறுறா. அதுல இருந்து குதிக்கிறா. அருவியில இருந்து நீர் பாய்ஞ்சு வருது. அதுல மூழ்கி எந்திரிக்கிறா ஹீரோயின். அப்போ ஒரு பாட்டு போடுறோம்’ என்று மிக சினிமாத்தனமான காட்சியொன்றை இயல்பான ஒன்றாக இதில் காட்சிப்படுத்தியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா.
அதுவே இப்படம் முழுக்க விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் உள்ளிட்ட கலைஞர்களை அவர் எப்படிப் பயன்படுத்தினார் என்பதைச் சொல்லிவிடும்.
கலை வடிவமைப்புக்கு தோட்டா தரணி, ஒளிப்பதிவுக்கு ஜீவா, படத்தொகுப்புக்கு லெனின் – விடி விஜயன், இசைக்கு தேவா என்று சிறப்பானதொரு தொழில்நுட்பக் கூட்டணியையும் இதில் அமைத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. தேவாவின் பாடல்கள் ஹிட் என்பதோடு, விஜய் – ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளில் தந்திருந்த பின்னணி இசை ரசிகர்களைக் காதல், நகைச்சுவை, ஆக்ஷன் மழையில் நனைய வைத்தது.
ஷில்பா ஷெட்டிக்கு ‘மாக்கரீனா’ பாடல், மும்தாஜுக்கு ‘கட்டிப்புடிடா’ பாடல் என்று கமர்ஷியல் நோக்கோடு திரைக்கதையை அணுகியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. போலவே விவேக்கின் நகைச்சுவை ‘காலேஜ் கல்ச்சுரஸ்’ சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அன்றைய இளவட்டங்களைச் சுண்டியிழுப்பதாக இருந்தது.
இன்றைய தலைமுறைக்கு ‘குஷி’ ஒரு ‘க்ரிஞ்ச்’ ஆக தெரியலாம். ஆனால், ‘கில்லி’ போன்று இதுவும் மறுவெளியீட்டில் அவர்களை ஈர்க்கக்கூடும். காரணம், அவர்களது வெறுப்பைச் சுலபமாகத் தவிடுபொடியாக்கும் வகையில் இப்படத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்.
ஆச்சர்யத் தகவல்கள்!
ஒரு பேட்டியொன்றில், ‘குஷி’ படத்தில் முதலில் பிரபுதேவா நடிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.
விஜய்யை நாயகனாக வைத்து படம் தயாரிக்கும் நோக்கோடு அவரை அணுகியதாகவும், அப்போது ‘வாலி’ பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை இருக்கிறதா என்று தன்னைக் கேட்கச் சொன்னதாகவும் அதில் கூறியிருந்தார். அந்த நேரத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், பிரபுதேவாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கும் தகவலை அறிந்து, அதனை விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார் பி.எல்.தேனப்பன்.
விஜய்யை வைத்து அவரால் படம் தயாரிக்க முடியவில்லை. ஆனால், ‘குஷி’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் என்பதில் இருந்து, பிரபுதேவா நடிக்கவிருந்த பாத்திரத்தில் விஜய் நடித்தார் என்ற முடிவுக்கு நம்மால் வந்துவிட முடியும். அது சரியா தவறா என்பதற்கு எஸ்.ஜே.சூர்யா மட்டுமே விளக்கமளிக்க முடியும்.
அதே பிரபுதேவா இயக்கத்தில் ‘போக்கிரி’, ‘வில்லு’ படங்களில் நாயகனாக நடித்தார் விஜய். தற்போது ‘கோட்’ படத்தில் அவருடன் பிரபுதேவாவும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாமறிந்த தகவல்.
ஒரு படம் முழுமையாகத் தயாராகும்போது, அதில் பலருடைய உழைப்பு பொதிந்திருக்கும். இறுதியாக, மிகச்சிலருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், அதில் பணியாற்றிய அனைவரும் திருப்தியடையும்படியான ஏதோ ஒன்றை அப்படம் அவர்களுக்கு வழங்கியிருக்கும். அவர்களது நினைவலைகளில் நீங்காத இடத்தைப் பிடிக்கும். அது நிகழ்ந்தால் மட்டுமே, அப்படம் என்றென்றைக்குமானதாக மாறும். ‘குஷி’ அப்படியொரு படம் என்று தாராளமாகச் சொல்லலாம்!
– மாபா
#குஷி #இயக்குனர்_எஸ்_ஜே_சூர்யா #விஜய் #நிழல்கள்_ரவி #பீனா_பானர்ஜி #ஜோதிகா #விஜயகுமார் #ஜானகி_சபேஷ் #விவேக் #மும்தாஸ் #தேவா #kushi_movie #director_sj_surya #vijay #nizhagal_ravi #jothika #vijayakumar #vivek #mumtaj #deva