‘மல்டி ஸ்டார்’ எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஆயுத எழுத்து!

‘ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும்’ என்ற பழமொழியை ஆயுதங்களைத் தினசரி பயன்படுத்துபவர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்களோ, நமக்குத் தெரியாது. ஆனால், தமிழ் சினிமாவில் இருப்பவர்களிடம் அது பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதனை உதாரணம் காட்டியே, ஒரு படத்தில் நாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் வழக்கம் வெகு காலமாக இருந்து வருகிறது. இன்றும் கூட அந்த நிலையில் பெரிய மாற்றமில்லை. ஆனால், வகுக்கப்படாத அந்த நியதியை மீறி மிகச்சில ‘மல்டிஸ்டார்’ படங்கள் ரசிகர்களை ஈர்த்திருக்கின்றன. ‘ஊமை விழிகள்’ மாதிரியான படங்கள் அதற்கான சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. மணி ரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படம் கூட, அந்த வரிசையில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

மூன்று நாயகர்கள்!

மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நாயகர்கள். அவர்களது பாத்திரப் பின்னணி கூட ஒரேமாதிரியானதாக இருக்காது. அவர்களது பொதுப்பார்வையும் கூட ரொம்பவும் வேறுபட்டிருக்கும். அப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மூன்று பேர் ஒரு புள்ளியில் இணையும் கதையைச் சொன்னது ‘ஆயுத எழுத்து’. அதன்பிறகு என்னவானது அவர்களது வாழ்க்கை என்று விவரித்தது.

இதில் மைக்கேலாக சூர்யா, அர்ஜுனாக சித்தார்த், இன்பசேகராக மாதவன் ஆகியோர் நடித்தனர். மூன்று பேரோடு ஜோடி சேரும் நாயகிகளாக இஷா தியோல், த்ரிஷா, மீரா ஜாஸ்மின்  நடித்திருந்தனர். பாரதிராஜா எதிர்மறை பாத்திரத்தில் தோன்றியிருந்தார். அவர்கள் தவிர்த்து பெரும்பட்டாளமே திரையில் தலை காட்டியிருந்தது.

இதில் சூர்யாவின் பாத்திரம் முன்னிறுத்தப்பட்டாலும், மூன்று நாயகர்களுக்குமான முக்கியத்துவத்தில் பெரிய வேறுபாடில்லை. அதனாலேயே, அவர்களது ரசிகர்களிடம் சலசலப்பு ஏற்படவில்லை. அதேநேரத்தில், அதற்கு முன்னர் வெளியான ‘இணைந்த கைகள்’, ‘வெற்றி விழா’, ‘தளபதி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘சின்னதம்பி பெரியதம்பி’ மாதிரியான கொண்டாட்ட மனநிலையை திரையரங்குகளில் உருவாக்குகிற விதமாக ‘ஆயுத எழுத்தின்’ உள்ளடக்கம் அமையவில்லை.

அரசியல் களத்தில் இளையோரின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்று சொன்னது இப்படம். அதேநேரத்தில் புரட்சிகரமான அரசியல் கருத்துகள் இதில் இல்லை. வெறுமனே சமகால அரசியல் கட்சிகளுக்கான எதிர்க்குரலாக மட்டுமே இருந்தது இப்படத்தின் பலவீனமான அம்சம்.

இளமையின் துள்ளல்!

மணி ரத்னம், ரவி.கே.சந்திரன், ஸ்ரீகர் பிரசாத், சாபு சிரில், ஏ.ஆர்.ரஹ்மான் என்று இப்படத்தை உருவாக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது துறையில் உச்சம் தொட்டவர்கள்.

2004, மே 21 அன்று ‘ஆயுத எழுத்து’ வெளியானது. அந்த காலகட்டத்தில் இவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதைக் கடந்து வந்திருந்தனர் என்பதே உண்மை. ஆனால், அது சற்றும் திரையில் தெரியாதவாறு அவர்களது உழைப்பும் பங்களிப்பு அமைந்திருந்தது. அதுவே, இன்றும் ‘ஆயுத எழுத்து’ படத்தை நாம் நினைவுகூரக் காரணமாக உள்ளது.

‘யாக்கை திரி’ பாடல் இன்று வரை கிளப் டான்ஸ் பாடல்களை விரும்புவோரின் முதன்மை விருப்பமாக விளங்குகிறது. ‘நீ யாரோ’ பாடலில் சித்தார்த்தும் த்ரிஷாவும் காதலில் திளைக்கும் காட்சிகளும், கடற்கரையில் ஓடிப்பிடித்து ஆடுவதும் இளமைத் துள்ளலை நம் இதயத்தில் விதைக்கும். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, கலை வடிவமைப்பு என்று பலவற்றில் இளமை கூடியிருந்தது. அதுவே திரையில் ஒளிர்ந்து, இன்றும் அப்படத்தை மனதை விட்டு நீங்காமல் இருக்க வைத்துள்ளது.

திராவிட அரசியல் இயக்கங்களை எதிர்க்கும் விதமாக, ‘ஆயுத எழுத்து’ படத்தின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டிருக்கும். வெளிப்படையாக வசனங்களில் இல்லாவிட்டாலும், அதனைப் பார்ப்பவர்களால் உணர முடியும். பட வெளியீட்டு காலகட்டத்தில், அதுபோன்று பல விஷயங்கள் எதிராக முன்வைக்கப்பட்டன. அனைத்தையும் கடந்து ரசிகர்களை திரையரங்குகளில் திரள வைத்தது ‘ஆயுத எழுத்து’. ஆனால், அதே நேர்த்தியை அதன் இந்தி பதிப்பான ‘யுவா’ தரவில்லை.

மீண்டும் ‘மல்டிஸ்டார்’ படங்கள்!

‘ஆயுத எழுத்து’ வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போதும் இளமை துள்ளும் பாடல்கள், நடிப்புக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இன்ன பிறவற்றுக்காக ‘ஆயுத எழுத்து’ கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில், இது போன்ற ‘மல்டிஸ்டார்’ படங்களே தமிழ் திரையுலகுக்குத் தேவை.

அதற்குச் சக நடிகர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடிக்கப் பிரபல நட்சத்திரங்கள் தயாராக இருக்க வேண்டும். அதனைச் செய்யத் தொடங்கினால், ஆயிரம் கோடி வசூலைத் தாண்டக்கூடிய படங்கள் தமிழிலும் தயாராகும். தொடர்ந்து வெற்றிகளை ஈட்டும். எப்போது அது நிகழும்?!

– மாபா

#சூர்யா #சித்தார்த் #மாதவன் #இஷா_தியோல் #த்ரிஷா #மீரா_ஜாஸ்மின் #மணி_ரத்னம் #ரவி_கே_சந்திரன் #ஸ்ரீகர்_பிரசாத் #சாபு_சிரில் #ஏ_ஆர்_ரஹ்மான் #ஆயுத_எழுத்து #surya #siddharth #madhavan #isha_dhiyol #trisa #meera_jasmin #manirathnam #ravi_k_chandren #srikar_prasath #saabu_sril #ar_rahman #Aaytha_Ezhuthu_   Movie

You might also like