குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியை ஈட்டிய ஒரு கமர்ஷியல் திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடப்படுமா? இந்த கேள்விக்குப் பதில் சொல்வது கடினம்.
ஏனென்றால், அந்த திரைப்படம் பார்வையாளர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பொறுத்து அது அமையும்.
சரியாகச் சொன்னால், திரும்பத் திரும்ப அப்படம் குறித்த நினைவுகளை அசைபோடச் செய்தால் அது நிகழும்.
சுந்தர்.சி தனது இயக்குநர் நாற்காலியை மடக்கி ஓரமாக வைத்துவிட்டு நடிகராகக் களமிறங்கிய ‘தலைநகரம்’ படம் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்கது.
சுராஜ் இயக்கிய இப்படம் இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிக்கப்படுகிறது. இப்படம் வெளியாகிப் பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு ரவுடியின் கதை!
‘ஒரு ரவுடின்னா இப்படித்தான் இருப்பான்’ என்று சொல்லும்விதமான கதைகள் ‘நாயகன்’ காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றன.
ஆனால், அக்களத்தை மட்டுமே சுற்றி வந்த கதைகள் வெகு குறைவு. அந்த வகையில், சுப்பிரமணியம் எனும் ரவுடி ரைட் எவ்வாறு தனது எதிரிகளைக் கொன்று வஞ்சம் தீர்த்தார் என்பதே ‘தலைநகரம்’ படத்தின் கதை.
ரைட் என்ற பெயரை அடைந்து, அதன்பிறகு அவர் என்னென்ன செய்தார் என்பது ஒரு பக்கம் காட்சிகளாக விரியும்.
கூடவே, அது தொடர்பான நினைவுகளை யோசித்துக்கொண்டே இன்றைய தினம் தனது எதிரிகளை நோக்கி அவர் பாய்வது இன்னொரு பக்கம் நகரும்.
இவ்விரண்டுக்கும் நடுவே நாயகி திவ்யாவின் என்ட்ரி, அவரது மாமனாக வரும் நாய் சேகரின் அலப்பறைகள் என்று திரைக்கதை செல்லும்.
நாயகனின் கதையைத் தனியாகவும், நாய் சேகர் ட்ராக்கை தனியாகவும் பார்க்கும் மனநிலையைப் பார்வையாளர்கள் தியேட்டரில் அடைந்ததே இப்படத்தின் வெற்றி.
ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், த்ரில் என்று அனைத்து வகைமையும் கலந்துகட்டிய திரைப்படங்களுக்கு அன்றிருந்த வரவேற்பே அதற்குக் காரணம்.
வடிவேலுவின் ஒன்லைனர்கள்!
’நானும் ரவுடிதான்..’, ‘த்ரிஷா இல்லேன்னா திவ்யா’, ‘பில்லா பயங்கர கருப்பா இருப்பான், நீ கருப்பா பயங்கரமா இருக்கே’ என்பது உட்பட வடிவேலுவின் ட்ராக்கில் இடம்பெறும் பல நகைச்சுவைகள் இன்றும் ரசிக்கும்படியாக இருக்கும்.
அவற்றின் தாக்கத்தில் சில படங்களுக்கு டைட்டில் வைக்கப்பட்டன. அதிலிருந்தே வடிவேலுவின் நகைச்சுவை எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டது என்பது தெரிய வரும். இன்றளவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது, அக்காட்சிகளின் மீது பார்வையை மேயவிடாமல் நம்மால் இருக்க முடியாது.
ஜோதிர்மயி, கே.எஸ்.ரவிக்குமார், பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட், ஜூடோ ரத்னம், புவனேஸ்வரி, மனோபாலா, டெல்லி கணேஷ், சஷிகுமார், சோனியா, மயில்சாமி, விச்சு என்று நடிப்புக் கலைஞர்களின் எண்ணிக்கை இப்படத்தில் அதிகம்.
டி.இமான் தந்த ’ஏதோ நினைக்கிறேன்’ பாடல் இப்போதும் புதியது போன்று ரசிக்கப்படுகிறது.
சுந்தர்.சி வருமிடங்களில் கேங்க்ஸ்டர் ஆக்ஷன் படம் போல அமைந்த ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் நகைச்சுவை காட்சியில் முற்றிலும் மாறுபட்ட பார்வையனுபவத்தைத் தரும்.
அந்த வித்தியாசம் எப்போது நிகழ்ந்தது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு மாயாஜாலம் செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ்.
மு.காசி விஸ்வநாதன் பல்வேறு இடங்களுக்குத் தாவும் காட்சிகளை ஒரே வரிசையில் அடுக்கியிருப்பார்.
தெரிய வந்த உண்மை!
‘தலைநகரம்’ படத்தை சுந்தர்.சியிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுராஜ் இயக்கியிருந்தார். அதற்கு முன்னர் ‘மூவேந்தர்’ படத்தை இயக்கியிருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் மீண்டும் அவர் இணை இயக்குனராகப் பணியாற்றியிருந்தார்.
’தலைநகரம்’ படத்தில் கிடைத்த வெற்றி சுந்தர்.சியை ஒரு நடிகராகவும், சுராஜை ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஆகவும் அடையாளப்படுத்தியது.
தெலுங்கில் ‘நகரம்’ என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஜெகபதிபாபு, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
‘தலைநகரம்’ வெற்றியின் பாதிப்பில் ‘நகரம் மறுபக்கம்’ என்ற படத்தை சுந்தர்.சி எழுதி இயக்கினார். வடிவேலுவின் காமெடி ட்ராக் ஒருபுறம் இருக்க, சுந்தர்.சியின் நாயக பாத்திரத்திற்கான காட்சிகள் தனியாக அப்படத்தில் இடம்பெற்றன. ஆனாலும், ‘தலைநகரம்’ மேஜிக்கை அது நிகழ்த்தவில்லை.
கடந்த ஆண்டு வி.இசட். துரை இயக்கத்தில் ‘தலைநகரம் 2’ வெளியானது. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல், சுந்தர்.சி ஏற்ற ரைட் பாத்திரத்தின் ரவுடியிச பின்னணியை மட்டும் அது மையப்படுத்தியது.
அக்காட்சியாக்கம் இதுவரை பார்த்த தமிழ் படங்களில் இருந்து வேறுபட்டது என்றபோதும், ரசிகர்கள் அதனை ஆதரிக்கவில்லை. அதுவே, ‘தலைநகரம்’ படத்தின் வெற்றியில் வடிவேலுவின் நகைச்சுவை எத்தகைய பங்கு வகித்தது என்பதைப் புரிய வைத்தது.
அதே நேரத்தில், அதே பாணியில் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை அமைத்தால் இன்று பார்வையாளர்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதையும் அப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டிருந்தார் சுந்தர்.சி.
இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட ‘தலைநகரம்’ குறித்து, சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.
அப்போது, மலையாளத்தில் வெளியான ‘அபிமன்யு’ படத்தின் தழுவலே இப்படம் எனக்குக் கடந்த ஆண்டுதான் தெரிய வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒருநாள் அவரது தாய் மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அதனைக் கவனித்தபோது, ‘இது அவருடைய படத்தின் ரீமேக்’ என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.
அதன்பிறகே இரண்டு படங்களின் கதைகளும் ஒரேமாதிரியாக இருந்ததைத் தான் கண்டறிந்ததாகச் சொல்லியிருந்தார்.
‘அது பத்தி சுராஜ்கிட்ட கேட்டீங்களா’ என்ற கேள்விக்கு, ‘இனி கேட்டு என்ன ஆகப்போறது’ என்று சொல்லி சிரித்திருந்தார் சுந்தர்.சி.
அதே பேட்டியில் மோகன்லால், மம்முட்டி நடித்த மலையாளப் படங்களைச் சிறு வயதில் தான் தொடர்ச்சியாக ரசித்ததாகவும் சொல்லியிருந்தார்.
அப்படிப்பட்ட சுந்தர்.சியே அந்த விஷயத்தைக் கவனிக்கவில்லை என்றால், ‘தலைநகரம்’ படத்தில் சுராஜின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் அதனை மறக்கடித்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ரைட், திவ்யா, நாய் சேகர் என்று ‘தலைநகரம்’ படத்தில் இடம்பெற்ற பாத்திரங்களின் வெற்றியாகவும் அதனைக் கருத வேண்டும்..!
– உதய் பாடகலிங்கம்