‘தியேட்டருக்குப் போனோமா, ஜாலியா சிரிச்சி ரசிச்சி ஒரு படத்தைப் பார்த்துட்டு வந்தோமான்னு இருக்கணும்’. – திரைப்படங்களுக்குச் செல்வது குறித்து சிலர் மனதில் இருக்கும் அபிப்ராயம் இது.
இதற்கு ஏற்றாற்போல கலகலவென நகரும் திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் அவ்வப்போது வெளியாகும்.
அந்த வரிசையில் இணையத் துடித்திருக்கிறது சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பாலசரவணன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கியிருக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம்.
படம் எப்படியிருக்கிறது?
ஜமீனில் தொடங்கும் கதை!
வெற்றிவேல் (சந்தானம்) திருமண வயதில் இருக்கும் ஒரு இளைஞர். வீடு வாங்கிய வகையில், அவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது. அதனைத் தருவதாகச் சொல்லும் பெண் வீட்டாரைத் தேடி அலைகிறார்.
ஒரு திருமணத் தரகர் (மனோபாலா) மூலமாக, அவர் ரத்தினபுரிக்குப் பெண் பார்க்கச் செல்கிறார். அங்கு ஜமீனாக இருக்கும் விஜயகுமாரின் (தம்பி ராமையா) மகள் தேன்மொழியைச் (பிரியாலயா) சந்திக்கிறார்.
பெண் பார்க்கச் சென்ற வெற்றிவேல், தனக்குத் தேன்மொழியைப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார்.
‘உடனடியாகத் திருமணத்தை நடத்திவிடுவீர்களா’ என்ற பேச்சு எழ, அடுத்த நொடியே வெற்றிவேலையும் தேன்மொழியையும் திருமண மேடையில் அமர்த்துகிறார் விஜயகுமார். இருவருக்கும் திருமணம் இனிதே நடைபெறுகிறது.
அடுத்த நொடியே அந்த ஜமீன் வீடே வெறுமையாகிறது. அப்போதுதான் விஜயகுமாருக்குப் பத்து கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருப்பது தெரிய வருகிறது.
அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மனைவி, மாமனார், மச்சினன் பாலா சகிதமாகத் தன் வீட்டுக்குச் செல்கிறார் வெற்றிவேல்.
‘எங்கும் கலாட்டா எதிலும் கலாட்டா’ என்றிருக்கும் மாமனாரையும் மச்சினனையும் சமாளிக்க முடியாமல் அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்.
அந்த நேரத்தில், வெற்றிவேலுக்குப் பணம் கொடுத்த அவரது அலுவலக மேலாளர் அமல்ராஜ் (விவேக் பிரசன்னா) அதனை வசூலிக்க வீட்டுக்கு வருவதாகக் கூறுகிறார்.
அபார்ட்மெண்ட் வாசலில் நிற்கும் விஜயகுமாரும் அவரது மகன் பாலாவும், அமல்ராஜ் என்று நினைத்து அவரை மாதிரியே தோற்றமளிக்கும் ஒரு தீவிரவாதியை வெற்றிவேலிடம் அழைத்து வருகின்றனர்.
சென்னையில் சில இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்த அவர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக வெற்றிவேல் வீட்டில் மின்கசிவால் அவர் மரணமடைகிறார்.
வெற்றிவேல், அவரது மனைவி, மாமனார், மச்சினன் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இரண்டு விலைமாதர்கள் ஒன்றிணைந்து அந்த தீவிரவாதியின் சடலத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்கின்றனர்.
அந்த நேரத்தில், அந்த தீவிரவாதியின் உயிரோடு அல்லது பிணமாகப் பிடிப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு என்று காவல் துறை தெரிவிக்கிறது.
‘எல்லாவற்றையும் பிரச்சனை இல்லாமல் முடித்தாகிவிட்டது’ என்ற எண்ணத்தோடு அனைவரும் வீடு திரும்ப, வெற்றிவேல் வீட்டுக்குள் அமல்ராஜ் அமர்ந்திருக்கிறார்.
அதன்பிறகு என்னவானது? தீவிரவாதியின் சடலத்தைக் கைப்பற்ற வெற்றிவேல் கும்பல் முயற்சி செய்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
ஜமீனுக்கு வெற்றிவேல் பெண் பார்க்கச் செல்வதாகக் கதை தொடங்கினாலும், முக்கால்வாசி திரைக்கதை வேறொரு ஏரியாவில் புழங்குகிறது.
அதனை வெற்றிவேலாக நடித்த சந்தானம் வசனமாகச் சொல்லுமாறு திட்டமிட்ட வகையில், ரொம்பவே நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஆனந்த் நாராயணன்.
நோ லாஜிக்!
‘இங்க நான் தான் கிங்கு’ என்று வசனம் ஏதும் பேசாமல், வெறுமனே நாயகனாக வந்து போயிருக்கிறார் சந்தானம். வழக்கமான கலாய்த்தல் பாணி ஒன்லைனர்களை கூட, இப்படத்தில் அளவுடன் அள்ளியிறைக்கிறார்.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பினால், இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கலாம்.
போலவே, அப்படம் போலவே இதிலும் உடன் நடித்தவர்கள் ஸ்கோர் செய்ய வாய்ப்பு தந்திருக்கிறார்.
தம்பி ராமையாவும் பால சரவணனும் ஏற்ற பாத்திரங்கள் புதிதென்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் நடித்திருக்கும் விதம் பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கும். குறிப்பாக, குழந்தைகள் அவர்களது காட்சிகளுக்குச் சிரித்து மகிழ்கின்றனர்.
பிரியாலயா இந்த படத்தின் நாயகி. ‘என்னைய ஏன் ஹீரோயினா நடிக்க வச்சாங்க’ என்பது போலவே, படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.
முனீஸ்காந்த், கூல் சுரேஷ், லொள்ளு சபா மாறன், சுவாமிநாதன் மற்றும் மறைந்த சேஷு, மனோபாலா போன்றோர் இரண்டொரு காட்சிகளுக்கு வந்து போயிருக்கின்றனர். அந்தக் காட்சிகளில் சிரிக்கும்விதமாக இருப்பதுதான் சிறப்பான விஷயம்.
டி.இமான் இசையில் ‘மாலு மாலு’, ‘குலுக்கு குலுக்கு’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கும் ரகம். ஒரு நகைச்சுவை படத்திற்கு எத்தகைய பின்னணி இசை தர வேண்டும் என்பதை உணர்ந்து, அதனைத் தந்திருக்கிறார்.
இடைவேளையிலும் கிளைமேக்ஸிலும் இரண்டு பெரிய ‘சேஸிங்’ காட்சிகளில் அதுவே பக்கபலமாக விளங்குகிறது.
ஒரு கலர்ஃபுல்லான கமர்ஷியல் படம் பார்த்த எபெக்டை உண்டுபண்ணுகிறது ஓம் நாராயணனின் ஒளிப்பதிவு. டி ஐ பணியின் பங்கும் அதில் அதிகம்.
படத்தொகுப்பாளர் எம்.தியாகராஜன் ரொம்பவே செறிவாகக் காட்சிகளை அடுக்க முனைந்திருக்கிறார். ஆனால், தொடக்கத்தில் வரும் பத்து பதினைந்து நிமிடங்களை எப்படி வடிவமைப்பது என்பதில் தடுமாறியிருக்கிறார்.
சக்தி வெங்கட்ராஜ் இப்படத்தில் கலை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். ரத்தினபுரி ஜமீன் வீட்டுக் கல்யாணம், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளில் அவரது பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த படத்தில் எழுத்தாக்கத்தை எழிச்சூர் அரவிந்தன் கையாண்டிருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவத்தில், இதிலும் ’நோ லாஜிக் ஒன்லி காமெடி மேஜிக்’ என்று செயல்பட்டிருக்கிறார்.
‘துறுதுறுன்னு ஏதாவது பண்ணிட்டு திருதிருன்னு முழிக்கிறதே உன் வேலையா போச்சு’ என்பது போன்ற ஒன்லைனர்கள் ஆங்காங்கே சிரிப்பூட்டுகின்றன.
இதுபோன்ற நகைச்சுவை படங்களில் வசனங்களுக்குத் தரும் முக்கியத்துவம் காட்சியாக்கத்திற்கு இருக்காது.
2கே கிட்ஸ் அதனை விரும்புவதில்லை என்றறிந்து, ஆக்ஷனையும் காமெடியையும் த்ரில்லையும் மிகச்சரியாகத் திரையில் கலந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த நாராயணன்.
அவரது திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொஞ்சம் அபாயகரமானது; ஆனாலும், அதற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
கிளைமேக்ஸ் காட்சியில் தீவிரவாதிகளின் கும்பலோடு சந்தானம் மோதும் காட்சி அதற்கொரு உதாரணம்.
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம்!
பரபரப்பாகப் படம் நகர வேண்டும் என்பதற்காகச் சந்தானம், தம்பி ராமையா, பாலசரவணன் மற்றும் நாயகி பிரியாலயா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நறுக்கப்பட்டிருக்கின்றன. அது, மையப் பாத்திரங்களோடு ரசிகர்கள் ஒன்றுவதை தள்ளிப்போடுகிறது.
மாறன், சேஷு, சுவாமிநாதன், முனீஸ்காந்த் ஏற்ற பாத்திரங்களும் அவற்றின் பெயர்களும் நம் கவனத்தைக் கவர்வதாக உள்ளன. போலவே, சக்கர நாற்காலியில் உடலசைவற்று உட்கார்ந்திருப்பதாக வரும் பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்தானம், பிரியாலயா இடையே கவர்ச்சி கலாட்டா நடப்பது போன்று இரண்டு காட்சிகள் படத்தில் உண்டு. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
போலவே, இரண்டு விலை மாதர் பாத்திரங்களும் படத்தில் இருக்கின்றன.
அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், வசனங்கள் சில படத்தில் ‘கட்’ செய்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. அதனைச் செய்தவர்கள், துருத்தலாகத் தெரியும் மீதமுள்ள இடங்களையும் நீக்கியிருக்கலாம்.
ஏனென்றால், கோடை விடுமுறையில் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இப்படத்தைப் பெற்றோர்கள் காண வாய்ப்புகள் அதிகம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கும்பல்கள் ஒரு விஷயத்திற்காக அடித்துக் கொள்வதென்பது தொண்ணூறுகளில் வந்த பல நகைச்சுவை படங்களில் பிரதானமாக இருக்கும்.
அந்த வகையில், இந்தப் படமும் ‘90’ஸ் கிட்ஸ்களை ஈர்க்கக்கூடியது. அதேநேரத்தில், அவற்றை அவ்வப்போது ‘கிரிஞ்ச்’ என்று சொல்லிக் கிண்டலடிப்பதன் மூலமாக 2கே கிட்ஸ்களையும் அரவணைக்க முயன்றிருக்கிறது இப்படம்.
கதையைப் பெரிதாகக் கருதாமல், சில பாத்திரங்களை நயமுடன் வடிவமைத்து, அவற்றுக்கு இடையேயான முரண்கள் மூலமாகத் திரைக்கதையில் சுவாரஸ்யமூட்ட முயன்றிருக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’.
‘டைம்பாஸுக்கு ஒரு படம் பார்க்கலாம்’ என்பவர்கள் மட்டும் இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம்!
– உதய் பாடகலிங்கம்
#இங்க_நான்_தான்_கிங்கு_விமர்சனம் #சந்தானம் #பிரியாலயா #தம்பி_ராமையா #பாலசரவணன் #விவேக்_பிரசன்னா #Inga_Naan_Thaan_Kingu_Review #priyalaya #thambi_ramaiah #balasaravanan #vivek_prasanna