ஸ்டார் – எண்பதுகளை நினைவூட்டும் ‘மெலோட்ராமா’!

இருபதாண்டுகளுக்கு முன்னர், நாற்பதாண்டுகளுக்கு முன்னர் என்ற எழுத்துகளுடன் அக்காலகட்டத்தை முன்னிறுத்தும் திரைப்படங்கள் எளிதாக ரசிகர்களைக் கவரும்.

காரணம், அதன் வழியே கடந்தகாலத்திற்கு சென்று வந்தது போன்று மனதில் எழும் உணர்வு. அதனாலேயே, ‘பீரியட் பிலிம்’ என்ற பெயரில் கடந்த கால வாழ்க்கையை, வரலாற்றைச் சொல்லும் படங்கள் கவனிப்பைப் பெறுகின்றன.

இளன் இயக்கத்தில் கவின், அதிதி பொகங்கர், மீரா முகுந்தன், லால், கீதா கைலாசம், பாண்டியன், தீப்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படம் சமீபத்தில் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

சரி, இப்படம் எப்படிப்பட்ட வரவேற்பை நம்மிடத்தில் பெறுகிறது?

காதலும் லட்சியமும்!

குழந்தைப் பருவம் முதலே திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதே தனக்கான இலக்கு என்று ஆணித்தரமாக நம்புகிறார் கலையரசன் (கவின்). அதற்கேற்ப நிஜ வாழ்விலும் தன்னை ஒரு நாயகனாகவே உருவகப்படுத்திக் கொள்கிறார்.

தந்தை பாண்டியன் (லால்) அந்த கனவுக்கு நீருற்றி வளர்க்கிறார். அவர் ஒரு புகைப்படக் கலைஞராகச் செயல்படுகிறார்.

பாட்டி, சகோதரி (நிவேதிதா ராஜப்பன்) கலைக்கு ஆதரவளித்தாலும், தாய் (கீதா கைலாசம்) மட்டும் மகன் சமூகத்தில் ஒரு பாதுகாப்பான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அதற்கு அணை போடுகிறார்.

கல்லூரிக் காலத்தில் கலையரசன் மீரா மலர்க்கொடியைச் (மீரா முகுந்தன்) சந்திக்கிறார். பார்த்தவுடன் அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார்.

பல சந்திப்புகள், நிகழ்வுகளுக்குப் பிறகு மீராவும் கலையைக் காதலிக்கிறார். அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி அந்தக் காதல் தொடர்கிறது.

மும்பையில் நடிப்புப் பயிற்சி பெறச் செல்லும் கலை, அங்கு தனது பணத்தைப் பறிகொடுக்கிறார். அந்த கல்வி நிறுவன உரிமையாளரும் அவரைத் திறமையற்றவர் என்று கூறி நிராகரிக்கிறார்.

அந்தச் சூழலிலும், தனக்குத் தெரிந்த வேலைகளைச் செய்து அங்கு வாழ்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்கிறார் கலை. ஒருவழியாக அந்த நிறுவன உரிமையாளரின் நன்மதிப்பைப் பெற்று, நடிப்புப் பயிற்சியை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

அப்போது, ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்திற்காகக் கலையரசனை ‘புக்’ செய்கிறது. நல்லதொரு பாத்திரம் கிடைத்த திருப்தியில், அந்த படப்பிடிப்புக்கு மகிழ்ச்சியுடன் கிளம்புகிறார். செல்லும் வழியில் ஒரு விபத்தில் சிக்கி, அவர் படுகாயமடைகிறார்.

கோமா நிலையில் இருந்து மீண்டாலும், அவரது முகத்தில் இருக்கும் தழும்பு நடிப்பாசையைக் குலைத்துப் போடுகிறது. தன்னம்பிக்கையை அடியோடு முடக்குகிறது.

கலையரசன் வெறுமைக்குள் ஆழ, அதிலிருந்து அவரை மீட்டெடுக்க வழி தெரியாமல் பிரிந்து செல்கிறார் மீரா.

அந்த காலகட்டத்தில், சுரபி (அதிதி பொகங்கர்) கலையரசன் வாழ்வில் வருகிறார். கல்லூரிக் காலம் முதல் ஒருதலையாக அவரைக் காதலிப்பதாகக் கூறுகிறார். மெல்ல மெல்ல கலையின் மனதை மாற்றி, அவரது குடும்பத்தில் ஒருவராகவே மாறுகிறார்.

சுரபி தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் படும் கஷ்டங்களை அறிந்து, ஒரு வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார் கலை. அந்த பணியை வெற்றிகரமானதாகவும் மாற்றிக் கொள்கிறார்.

எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில், அவரது அலுவலத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கலைக்குக் கிடைக்கிறது. இந்த முறை மீண்டும் முகத்தில் இருக்கும் தழும்புக்காக நிராகரிக்கப்படுகிறார். ஆனால், இம்முறை அவர் கோபத்தில் வெகுண்டெழுகிறார்.

பல நாட்களாகப் பொத்தி வைத்த விரக்தியும் இயலாமையும் தாண்டவமாட, அந்த இடத்தில் கத்திக் கூச்சலிடுகிறார் கலை. வீட்டுக்கு வெறுமையுடன் திரும்புகிறார்.

தன்னைச் செல்லமாகச் சீண்டும் சுரபியிடமும் அதே கோபத்தை வெளிப்படுத்துகிறார். தன்னை விட்டுப் போய்விடுமாறு கூறுகிறார். தன் மனதில் இருக்கும் வெறுமையை மறைத்து அனைவரிடமும் போலியாக நடித்து வருவதாகச் சொல்கிறார்.

அதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, தான் கர்ப்பமுற்றிருப்பதை உணர்ந்து அதனைக் கலையிடம் தெரிவித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார் சுரபி. அதைக் கலையிடம் சொல்வதற்குள் அந்த களேபரம் நிகழ்ந்து முடிகிறது.

அதன்பிறகு என்னவானது? சுரபி அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தாரா? கலையரசன் ஒரு நடிகராக வெற்றி பெற்றாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

லட்சியத்தை அடைய முடியாத விரக்தியில் ஒரு மனிதன் தனது காதலைத் தூக்கியெறிவது சரியா என்ற கேள்வியை எழுப்புகிறது ‘ஸ்டார்’.

கூடவே, ஏதேதோ காரணங்களுக்காகத் தனது மனதில் ஆசைகளைப் புதைத்துவிட்டுச் சக மனிதர்களுக்காக இன்னொரு வாழ்வை மேற்கொள்பவர்களின் மன வலியை உரக்கப் பேசுகிறது.

அசுரத்தனமான உழைப்பு!

கலையரசனாக இதில் கவின் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஹீரோயிசம் காட்டும் காட்சிகள் சில உண்டு. அதையும் மீறி, ஒரு ‘மெலோட்ராமா’வாக மலர்ந்து நிற்கிறது ‘ஸ்டார்’.

எண்பதுகளில் இது போன்ற பல கதைகளுக்கு மோகன், நிழல்கள் ரவி, சந்திரசேகர் உள்ளிட்ட பல கலைஞர்கள் உயிர் தந்திருக்கின்றனர். அந்த வகையில், ‘ட்ராமா’ வகைமை கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் வழக்கத்தைக் கவின் வரும் காலத்திலும் தொடர வேண்டும்.

ஏனென்றால், இன்றிருக்கும் பல புதுமுகங்கள் ‘ஸ்ட்ரெயிட்டா ஆக்‌ஷன் ஹீரோ, அப்புறம் அரசியல் தான்’ என்றே தங்களது லட்சியங்களை வார்த்து வருகின்றனர்.

மீரா முகுந்தன் முதல் பாதி முழுக்க வருகிறார். கல்லூரிப் பெண் என்று சொல்லும் அளவுக்கு இளமை பொங்கி வழிகிறது அவரது முகத்தில். ஆனால், குளோஸ் அப் ஷாட்களில் அவருக்கான இரவல் குரல் வினோதமாகத் தெரிகிறது.

அதிதி பொகங்கர் இதில் இரண்டாம் பாதியில் வந்திருக்கிறார். ’இப்படியல்லவா ஒரு வாழ்க்கை துணை வேண்டும்’ என்று இளைஞர்கள் விரும்பும் ஒரு பெண்ணாகத் தோன்றியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளே, இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் விழுந்த பள்ளத்தைச் சரிப்படுத்துகின்றன.

நாயகனை ஏற்கனவே தனக்குத் தெரியும் என்று அதிதி சொல்லும் காட்சியில், மீண்டும் பழைய காட்சிகளில் அவர் இடம்பெறும் ஷாட்கள் ‘இண்டர்கட்’டில் வரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

லால் இதில் நாயகனின் தந்தையாக நடித்துள்ளார். அவரது மலையாளம் கலந்த வசன உச்சரிப்பு நம்மை அப்பாத்திரத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. அதற்கும் சேர்த்து வைத்து, தனது இருப்பால் அனைத்து குறைகளையும் சரிப்படுத்துகிறார் கீதா கைலாசம்.

இவர்கள் தவிர்த்து பாண்டியன், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா என்று பலர் இதிலுண்டு. ‘டபுள் டக்கர்’ நாயகன் தீரஜ் வைத்தி இதில் சிறு பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். கவின் நண்பராக வரும் தீப்ஸ் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

வில்லன் என்று இப்படத்தில் எவருமில்லை. அதே நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அந்த இடத்தைப் பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, நாயகனின் தவறான புரிதலே திரையில் கோணங்கித்தனத்தை விதைக்கிறது. ஆனால், அதனைத் துல்லியமாகக் காட்டாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் இளன்.

மீரா பாத்திரம் நாயகனை விட்டுப் புரியக் காரணம் நாயகனின் மனக்கோளாறே. அதற்கேற்ப, நாயகனிடம் தான் பிரச்சனை என்பதை நாம் புரிந்துகொள்ளும் வகையில் இதில் காட்சிகள் அமைக்கப்படவில்லை.

முக்கியமாக, இரண்டாம் பாதியில் சுரபியுடன் கலை மகிழ்ச்சியாக வாழ்வதாகக் காட்டும் காட்சிகளில் அந்த முரண் கண்டிப்பாக உணர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

இயக்குனர் அதனைச் சிறிதளவும் செய்யவில்லை.

ஒரு ரசிகன் ‘ஸ்டார்’ படம் பார்த்துக் குழம்புமிடமும் அதுவே. அப்படியொரு பெருங்குறை இருந்தபோதும், இப்படத்தைப் பார்க்க மக்கள் முண்டியடிப்பது ஏன்?

காரணம், ‘ஸ்டார்’ படத்தில் கொட்டப்பட்டிருக்கும் பலரது அசுரத்தனமான உழைப்பு. கவின் முதல் அனைத்து நடிப்புக்கலைஞர்களும் காட்டியிருக்கும் சிரத்தை.

எழில் அரசு இதில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஐரோப்பியப் படங்கள் போல, ஒவ்வொரு காட்சியையும் ‘டீட்டெய்லாக’ செறிவுடன் காட்ட வேண்டுமென்ற இயக்குனரின் எண்ணத்திற்கு அவர் உயிர் தந்திருக்கிறார். போலவே, ரங்காவின் டிஐ பணியும் சிறப்பாக அமைந்துள்ளது.

வினோத் ராஜ்குமாரின் கலை வடிவமைப்பு, தொண்ணூறுகளில் சென்னை மாநகரம் என்பதைத் திரையில் உருவகப்படுத்த உதவியிருக்கிறது. அந்த மெனக்கெடல் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம்.

படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் முன்பாதியை நேர்த்தியாகத் தந்துள்ளார். இரண்டாம் பாதியில் கதை சீராகத் திரையில் விரிவதை உறுதிப்படுத்தத் தவறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை எப்போதுமே பெரிதாகக் கொண்டாடப்படும். அந்த வரிசையில் உடனடியாக இணைந்து விடுகிறது ‘ஸ்டார்’. போலவே, ‘பட்டர்பிளை’, ‘ஷுட்டிங் ஸ்டார்’, ‘விண்டேஜ் லவ்’ பாடல்களும் சட்டென்று நம்மை ஈர்க்கின்றன.

‘பியார் பிரேமா காதல்’ படத்திற்குப் பிறகு, நாயகனாகத் துடிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் வலியையும் வேதனையையும் திரையில் காட்ட விரும்பியிருக்கிறார் இயக்குனர் இளன்.

இது போன்ற கதைகள் கமர்ஷியல் திரைப்படத்திற்கு ஆகாது என்று கருதப்படும் காலத்தில் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டதற்குப் பாராட்டுகள்!

தெளிவுபடுத்தியிருக்கலாம்!

ராதாமோகன் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நாயகன் ரவி கிருஷ்ணா தனது முகத்தில் இருக்கும் தழும்பால் தன்னம்பிக்கை குறைவோடு சக மனிதர்களை எதிர்கொள்வது சொல்லப்பட்டிருக்கும்.

‘ஸ்டார்’ திரைப்படத்தில் அந்த அம்சம் பின்பாதியில் பிரதான இடத்தைப் பிடிக்கிறது. ஆனால், நாயகனை அவரது நலம்விரும்பிகள் தாழ்வாக நோக்கவில்லை என்பதோ, தனது மனதிலிருக்கும் ஆறாக் காயத்திற்கு மட்டுமே நாயகன் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதோ திரைக்கதையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

அதனால், படம் முடிந்ததும் வெறுமையுணர்வு நம்மைத் தொற்றுகிறது.

கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சி ஒரே ஷாட்டில் படம்பிடிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், அந்த காட்சி ரியலா, ரீலா என்ற சந்தேகத்தை இயக்குனர் தீர்க்கவில்லை.

வழமையான கதை, வழக்கமான காட்சிகள் என்று இதில் ‘கிளிஷே’ சதவிகிதம் மிக அதிகம். அதனை மீறிச் சில காட்சிகள் ‘ப்ரெஷ்’ஷாக உணர வைக்கின்றன.

பாண்டியன் முன்னால் அதிதியிடம் கலை தனது காதலை வெளிப்படுத்தும் காட்சி அந்த வகையில் சேரும்.

இது போன்ற காட்சிகளே ‘ஸ்டார்’ படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் சேர்வதற்குக் காரணம். அதற்கு மதிப்பு கொடுத்து, இன்னும் செறிவான திரைக்கதையையும் காட்சியாக்கத்தையும் இயக்குனர் இளன் ஆக்கியிருக்கலாம்.

அது நிகழாத காரணத்தால், ‘சிறப்பானதொரு முயற்சி’ என்ற எண்ணத்தோடு ‘ஸ்டார்’ படம் ஓடும் தியேட்டரில் இருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது.

– உதய் பாடகலிங்கம்

You might also like