தமிழ்நாட்டின் அரசியலை அதிகம் பாதித்தவையென இரண்டு பிரச்சனைகளை சுட்டிக்காட்டலாம். ஒன்று – ஈழத்தமிழர் பிரச்சனை; இன்னொன்று – காவிரிப் பிரச்சினை. ஈழப் பிரச்சினையை விட காவிரிப் பிரச்சனைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன, ஆட்சி மாற்றங்களுக்கு அடித்தளம் இட்டிருக்கின்றன.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இந்த இரு பிரச்சனைகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளும் விதத்தில் தமிழில் ஒரு சில நூல்கள் இருக்கின்றன என்றாலும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லையென்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக இந்து ஆங்கில நாளேட்டின் மூத்த இணை ஆசிரியராகப் பணிபுரியும் திரு டி.ராமகிருஷ்ணன் 2017 ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை குறித்து தமிழில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.
இப்போது காவிரிப் பிரச்சனை குறித்து ஆங்கிலத்தில் Cauvery – A long- winded dispute (THG Publishing private limited, Chennai, pages 180, Price 499/-) என்ற நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
காவிரி நதியைப் பற்றிய அறிமுகம், காவிரி ஆற்று நீரைப் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்திற்கும் எழுந்த பிரச்சனைகளின் துவக்கம்; அதன் பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தம்; அந்த ஒப்பந்தத்தை முன்வைத்து எழுந்த மோதல்; பேச்சுவார்த்தையின் முதல் கட்டம், இறுதிக்கட்டம்; நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட வரலாறு; காவிரி தொடர்பான சட்டப் போராட்டங்கள்;
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்த ஆலோசனைகள் என இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் சுருக்கமாக, தரவுகளோடு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறியிருக்கும் திரு ராமகிருஷ்ணன் தற்போது மேகேதத்து திட்டம் குறித்து எழுந்துள்ள சிக்கல் வரை இதில் ஆராய்ந்திருக்கிறார்.
காவிரிப் பிரச்சனையில் முக்கியமான நிகழ்வுகள் எந்தெந்த ஆண்டுகளில் நடந்தன என்ற அட்டவணை சில நிமிடங்களில் இந்தப் பிரச்சனையின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
காவிரிப் பிரச்சனை தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நூலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக இந்து ஆங்கில நாளேட்டில் 1972 ஆம் ஆண்டு முதல் வெளியான 10 தலையங்கங்கள் இந்த நூலின் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
இந்து ஆங்கில நாளேடு எப்படி நடுநிலை தவறாமல் இந்தப் பிரச்சனையை அணுகி உள்ளது என்பதற்குச் சான்றுகளாக அந்தத் தலையங்கங்கள் திகழ்கின்றன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மைசூர் மாகாணத்திற்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையில் 1924 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மைசூர் மாகாணத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டும், சென்னை மாகாணத்தில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டன.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு 1931 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது 1.2 லட்சம் ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிப்பதற்காக அது கட்டப்பட்டது. 1926 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மேட்டூர் அணைக்கட்டுத் திட்டம் 1934 இல் நிறைவு பெற்றது.
இந்த அணைக்கட்டுகளின் காரணமாக 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் பேசு பொருளானது. இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரமும், அதற்குப் பிறகு மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கமும் இந்தப் பிரச்சினையைத் தீவிரப் படுத்தின.
1950 களிலும் 1960 களிலும் கர்நாடகாவும் தமிழ்நாடும் தத்தமது விளைநிலப் பரப்பை அதிகரித்தன. தமிழ்நாட்டில் 1955 – 58 ஆகிய ஆண்டுகளில் பவானிசாகர், அமராவதி அணைகள் கட்டப்பட்டன.
கர்நாடகத்தில் கபினி, ஹாரங்கி, சுவர்ணாவதி, ஹேமாவதி அணைகள் 1955 க்கும் 1979க்கும் இடையில் கட்டப்பட்டன.
புதிதாகக் கட்டப்பட்ட அணைகள் இந்தப் பிரச்சனையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை நூலாசிரியர் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
செல்வி ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற அடுத்த நாளே காவிரிப் பிரச்சனையில் இடைக்காலத் தீர்ப்பு வெளியானது. அது மிகப் பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகத் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் வெடித்தது. இரண்டு மாநிலங்களிலும் மாநில அரசுகளின் ஆதரவோடு முழு அடைப்புகள் நடத்தப்பட்டன.
இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியது. இடைக்காலத் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டுமென வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அப்படி அரசிதழில் வெளியிடும் வழக்கம் இல்லை என்று கூறினார். இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடத் தாமதித்ததைக் காரணம் காட்டி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சராக இருந்த வாழப்பாடி கே.ராமமூர்த்தி தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
ஒன்றிய அரசு இந்தப் பிரச்சனையை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. அதை எதிர்த்து கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.
1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் சரியாக வழங்கப்படாத காரணத்தால் அதை வலியுறுத்தி 1993 ஜூலை மாதத்தில் செல்வி ஜெயலலிதா நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
இது தொடர்பாக இரண்டு கமிட்டிகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரசிம்மராவ் உத்தரவாதம் அளித்ததை ஏற்று ஜெயலலிதா உண்ணாவிரதத்தை முடித்தார். ஆனால் அந்த கமிட்டிகள் அமைக்கப்படவில்லை.
இவ்வாறு தொடர்ந்து கொண்டே போன இந்தப் பிரச்சனை 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இது தொடர்பாகத் தனது இறுதித் தீர்ப்பை அளிக்கும் வரை அவ்வப்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக வெடித்துக் கொண்டுதான் இருந்தது.
2018 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் அளவு குறைக்கப்பட்ட போதிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக அப்போது இருந்த அதிமுக அரசு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பதை நூல் ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை அமைப்பையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் ஒன்றிய அரசு அமைக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தது.
அதை வலியுறுத்தி 2018 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி காவிரி உரிமைப் பயணத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்றைய செயல் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கினார். அதில் சிபிஐ, சிபிஐ (எம்), விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த நடை பயணத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அது மிகப் பெரிய அரசியல் அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக் கொடுத்தது.
அதன் விளைவாக ஒன்றிய பாஜக அரசு அந்த இரு அமைப்புகளையும் அமைத்து அறிவிப்பு வெளியிட்டது. அந்தச் செய்தியையும் இந்நூலில் பதிவு செய்திருக்கலாம்.
நூலின் பத்தாவது அத்தியாயத்தில் மேகேதத்து பிரச்சினை பற்றி ராமகிருஷ்ணன் விவரித்து இருக்கிறார்.
தொடர்ந்தும் காவிரிப் பிரச்சனை நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதையும் அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அத்துடன் காவிரி நீர் மாசுபடுத்தப்படுவதையும், அதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் கர்நாடகத்துக்குள் 67.16 டி.எம்.சி நீரைத் தேக்கிவைக்கும் திறன்கொண்ட அணை ஒன்றை காவிரியின் குறுக்கே மேகேதத்துவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் இந்த அணை கட்டப்படுவதாக கர்நாடகம் சொல்வது உண்மையல்ல.
அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது எனத் தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும்கூட ஒன்றிய அரசின் நீர்வளத் துறையின் திட்ட மதிப்பீட்டு இயக்குநரகம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு 28.11.2018 அன்று அனுமதி வழங்கியது.
இந்த அனுமதிக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது. 06.12.2018 அன்று அதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேகேதத்து அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேகேதத்து அணை கட்டப்பட்டால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். எனவே, புதுச்சேரி அரசும் தமிழ்நாட்டைப்போலவே உடனடியாக இந்தப் பிரச்சனையில் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
மேகேதத்து அணை கட்டப்பட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். அந்த உண்மை புதுச்சேரி அரசுக்குத் தெரிந்திருந்தும் அதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமலே உள்ளது.
இந்த ஆண்டு (2024) இதுவரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை. தமிழ்நாடு வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி மே மேதத்துக்கு 2.5 டி.எம்.சி தண்ணீரைக் கொடுக்குமாறு காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என சில நாட்களுக்கு முன்பு (01.05.2024, The Hindu) தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் திரு துரைமுருகன் கூறியிருக்கிறார்.
பெங்களூருவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து இந்த சிக்கல் மேலும் அதிகரிக்காமல் இயற்கையே இதற்குத் தீர்வு காணுமா? அல்லது மீண்டும் ஒரு பெரிய பிரச்சினையாக இது வெடிக்குமா? என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
சட்ட நுணுக்கங்களும், புள்ளி விவரங்களும் அதிகம் கொண்ட ஒரு பிரச்சனை குறித்த நூலை சரளமாகப் படித்து முடிக்கும்படி அழகாக வடிவமைத்திருக்கும் எஸ்.டி.கார்த்திக் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள அரிய புகைப்படங்களும், அழகிய புகைப்படங்களும் நூலின் சிறப்பைக் கூட்டுகின்றன. நூலாசிரியர் ராமகிருஷ்ணன் தமிழிலும் நன்றாக எழுதக்கூடியவர் என்பதால் இந்நூலின் தமிழ்ப் பதிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
நன்றி: துரை.ரவிக்குமார் எம்.பி முகநூல் பதிவு