சவுக்கு சங்கர் கைதும் தொடரும் சர்ச்சையும்!

அண்மையில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன. அரசியல் இயக்கங்களிலும் இதுகுறித்த விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இதனிடையே சமீபத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது, கையில் கட்டுபோட்ட நிலையில் அவர் வந்திருந்தது ஊடகக்காரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை சவுக்கு சங்கர் முன்வைத்திருந்தாலும் கூட, அதற்கு எதிர்வினையாக கஞ்சா வழக்கை அவர் மீது  போட்டிருக்க வேண்டுமா என்பதுதான் பல நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இது ஒருவிதத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது, அவரை விமர்சித்தவர்களுக்கு அல்லது அவருக்கு எதிராக எழுதினவர்கள் மீது கஞ்சா வழக்கு போட்டதை நினைவுபடுத்துவதாகவும் ஊடகம் சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், எந்த யூடியூபில் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசினாரோ அதே யூடியூபில் அவரிடம் நேர்காணல் செய்தவரான அந்த யூடியூப் நிறுவனத்தை நடத்தும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். 

சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஊடகவியலாளரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டிருப்பது ஊடகக்காரர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்கள் மத்தியிலும் சில எதிர்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டிருப்பது கருத்து சுதந்திரம் குறித்த வெவ்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த கைதுகள் மேலும் சில சர்ச்சைகளை வலுப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

– யூகி

You might also like