பரபரப்பு நிறைந்ததாக மாறிவிட்டது உலகம். நிதானமாக வேலைகளை செய்து முடிக்கக்கூட பலருக்கும் அவகாசம் இல்லை. அதனால், ஒரு நாள் முழுக்க தேவையான நிதானத்தையும், ஆற்றலையும் நமக்கும் அளிக்கும் வகையில் காலைப் பொழுதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதற்கு காலை நேரத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்…
1 லிட்டர் தண்ணீர்
இரவு முழுவதும் நாம் தூங்குவதால் தண்ணீர் குடிக்காமல் இருந்திருப்போம். அதனால் நம் உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும் இதை ஈடுகட்ட காலையில் எழுந்ததில் இருந்து 8 மணிக்குள் 1 முதல் 2 லிட்டர் தண்ணீரையாவது அருந்துவது அவசியம்.
முடிந்தால் அந்த தண்ணீரில் எலுமிச்சம் பழச் சாற்றையோ அல்லது தேனையோ கலந்து குடிக்கலாம். ஒரேயடியாக அந்த நீரைக் குடிக்கவேண்டும் என்றில்லை. அரைமணி நேரத்துக்கு ஒருமுறையோ அல்லது கால் மணி நேரத்துக்கு ஒருமுறையோகூட குடித்து முடிக்கலாம்.
செல்ஃபோனுக்கு தடை:
இப்போதெல்லாம் பெரும்பாலும் நாம் காலையில் எழுந்ததும் முதலில் செல்போனைத்தான் தேடுகிறோம்.
வாட்ஸ் அப்பில் யாராவது நமக்கு மெசேஜ் செய்திருக்கிறார்களா? மிஸ்ட் கால் ஏதாவது இருக்கிறதா. ஃபேஸ்புக்கில் ஏதாவது நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதா என்று தேடுவோம்.
ஆனால் மன ஆரோக்கியத்துக்கு அது நல்லதல்ல என்கிறார்கள் டாக்டர்கள். தினமும் காலையில் எழுந்த பிறகு 2 மணி நேரமாவது செல்போன் பார்ப்பதைத் தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.
இதனால் தேவையில்லாத மன உளைச்சல்களை தவிர்க்கலாம் என்கிறார்கள். எனவே நீங்கள் 6 மணிக்கு எழுபவராக இருந்தால், குறைந்தது காலை 8 மணிவரை செல்போனை தவிருங்கள்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம்:
நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால் உடலுக்கு காலையில் கொஞ்சம் பயிற்சி அவசியம். அதனால் நடைப்பயிற்சி அல்லது சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சியுடன் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தியானம் போன்ற பயிற்சிகளையும் செய்தால் கூடுதல் நன்மை. இது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.
லட்சியத்தை எழுதி நிர்ணயியுங்கள்:
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். காலையில் எழுந்ததும் ஒரு டைரியையோ அல்லது ஒரு நோட்டையோ எடுத்து அன்று என்னவெல்லாம் செய்ய திட்டம் போடுகிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள்.
முடிந்தால் ஒவ்வொரு நாள் இறுதியிலும், காலையில் நாம் செய்ய நினைத்த வேலைகளை செய்து முடிக்க முடிந்ததா என்று பரிசீலித்துப் பாருங்கள்.
உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும், சுய பரிசோதனை செய்துகொள்ளவும் இது உதவும்.
புத்தகம் படியுங்கள்:
தொலைக்காட்சியும் ஓடிடியும் வந்த பிறகு புத்தகங்களைப் படிக்கவே பலருக்கும் நேரமில்லாமல் இருக்கிறது.
தினமும் காலையில் ஏதாவது புத்தகங்களை எடுத்து சில பக்கங்களையாவது படியுங்கள். இது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துவதுடன் புதிய சிந்தனைகளையும் உங்களுக்குத் தரும்.
நிதானமாக ஒரு குளியல்:
குளியல் என்பது உடலில் உள்ள அழுக்கைப் போக்கும் விஷயம் மட்டுமல்ல. அது உங்களை ரிலாக்ஸ் செய்யக்கூடியது. உங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது.
அதனால், அரக்கப் பரக்க காக்காய் குளியல் போடாமல் நிதானமாக ஒரு குளியலைப் போடுங்கள். அது கொடுக்கும் உற்சாகம் மாலை வரை உங்களுக்கு கைகொடுக்கும்.
– ரெஜினா சாமுவேல்