இதனால்தான் ஜெயிக்கின்றன மலையாளப் படங்கள்!

மலையாளத் திரைப்படங்களின் பொற்காலம் என்று 2024-ம் ஆண்டைச் சொல்லலாம். ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ’ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’ என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 670 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீசில் குவித்திருக்கின்றன மலையாள படங்கள்.

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் தமிழ்ப் படங்கள் காற்று வாங்க, மலையாளப் படங்கள் தரும் ஆக்சிஜனால் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன தியேட்டர்கள்.

கொரோனா வைரஸ் மற்றும் ஓடிடியின் ஆதிக்கத்தால் பொதுவாகவே கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தியேட்டர்களுக்கு நேரம் சரியில்லை. ரசிகர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட, வேறு வழியில்லாமல் பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்பிளக்ஸ்களாகவும் மாறி வருகின்றன.

ரிலீஸான பல படங்களை ஓடிடியில் மறு ரிலீஸாகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மக்கள் காத்திருக்க, அவை வந்த வேகத்திலேயே படப்பெட்டிக்குள் சுருண்டுகொள்ளத் தொடங்கின.

கொரோனா மற்றும் ஓடிடியின் இரட்டைத் தாக்குதலில் இருந்து மலையாள சினிமாவும் தப்பவில்லை.

இந்த ஆண்டுக்கு முன்புவரை மலையாள சினிமாவுக்கும் நேரம் சரியில்லாமல்தான் இருந்துள்ளது.

2023-ம் ஆண்டு மலையாள சினிமாவுக்கு மிக மோசமான ஆண்டாக இருந்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 114 படங்கள் தியேட்டர்களில் வெளியானது.

ஆனால் அந்த படங்களில் ‘2018’, ’ரோமாஞ்சம்’ ஆகிய இரு படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன. மற்றவை எல்லாம் நஷ்டத்தை எதிர்கொண்டன.

2022-ம் ஆண்டும் இப்படித்தான். இந்த ஆண்டில் 176 படங்கள் வெளியாக அதில் 16 படங்கள் மட்டுமே நஷ்டத்தில் இருந்து தப்பியுள்ளன. இந்த சூழலில்தான் மலையாளத் திரையுலகின் பொற்காலமாக இந்த 2024-ம் ஆண்டு மாறியிருக்கிறது.

தமிழ், இந்தி உள்ளிட்ட மற்ற திரையுலகங்கள் தடுமாறிக்கொண்டு இருக்க, மலையாள சினிமா, மட்டும் எப்படி இந்த அளவில் வெற்றிகளை குவிக்கின்றன என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள மலையாள நட்சத்திர நடிகரான ஃபகத் ஃபாசில், “மற்ற திரையுலகங்களுக்கு ஓடிடியின் ஆதரவு அதிகமாக உள்ளது.

ஒரு படத்தின் பூஜையைப் போடும்போதே அந்த படத்தை வாங்குவதற்கு ஓடிடிக்கள் தயாராக இருக்கின்றன.

ஆனால் மலையாளப் படங்களை மட்டும், அவை வெற்றி பெற்றால்தான் வாங்குகின்றனர்.

அதனால் ரசிகர்களைக் கவர வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டிய சூழலுக்கு மலையாள இயக்குநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதனால் அவர்கள் வித்தியாசமான கதைகளை யோசிக்கிறார்கள். இது அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.

மலையாள சினிமாவின் எழுச்சிக்கு மற்றொரு  முக்கிய காரணமாக  புதிய அலை  இயக்குநர்களைச் சொல்லலாம்.

‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரமும், ‘பிரம்மயுகம்’ படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவனும், மிக வித்தியாசமான கதைக் கருக்களை ரசிகர்கள் முன்பு படைத்துள்ளனர்.

இந்த புதிய பார்வை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

மலையாள சினிமாவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் தயாரிப்பு செலவு. தமிழகத்தில் இருப்பதுபோல் மலையாள சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் அதிகம் இல்லை.

அம்மாநிலத்தின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் மோகன்லாலே ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 17 கோடி ரூபாயைத்தான் வாங்குகிறார்.

தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள ஃபகத் ஃபாசில் ‘புஷ்பா’ படத்தில் நடிக்க வாங்கிய  சம்பளம் 3.5 கோடி ரூபாய்.

சம்பளம் வாங்குவது மட்டுமல்ல, மற்ற செலவு விஷயத்திலும் மலையாள நடிகர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். தமிழ், இந்தித் திரையுலகில் இருக்கும் கேரவன் கலாச்சாரம் அங்கே இல்லை.

அப்படி சிலர் கேரவன்களை பயன்படுத்தினாலும் அதற்கான செலவை தயாரிப்பாளர்களின் தலையில் கட்டுவதில்லை.

ஷூட்டிங்கின்போது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லவேண்டி இருந்தால் ஒரே வாகனத்தை 4 அல்லது 5 பேர் ஷேர் செய்துகொள்கிறார்கள்.

அடுத்த விஷயம் திட்டமிடுதல். தமிழ்ப் படங்களை சிலர் ஆண்டுக்கணக்கில் தயாரிக்க, மலையாளப் படங்கள் சராசரியாக 2 மாதங்களுக்குள் எடுத்து முடிக்கப்படுகின்றன. அதற்கு காரணம் சரியான திட்டமிடல்.

இதனாலேயே ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படத்தை அவர்கள் 20 கோடி ரூபாய்க்கு எடுக்க முடிந்தது.

இப்படி படங்களை வெற்றிகரமாக தயாரித்து வசூலில் சாதனை படைக்க, மலையாளப் படங்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. கற்றுக் கொண்டால் நல்லது.

– ரெஜினா சாமுவேல்

You might also like