சுழன்றடிக்கும் வெப்ப அலை – தற்காத்துக்கொள்வது எப்படி?

முன்பெல்லாம் மழைக்காலத்தில்தான் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள். வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்வார்கள்.

ஆனால், இப்போது வெயில் காலத்திலும் மக்களுக்கு அலர்ட் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 108 டிகிரி, 110 டிகிரி என்று வெயில் கொளுத்தி வருவதே இதற்கு காரணம்.

வெயிலுக்கு புகழ்பெற்ற, மழையே பெய்யாத துபாயில் இப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. மழையால் வெள்ளம் ஏற்பட விமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஆனால் தமிழகத்திலோ, குளிருக்கு பேர்போன ஊட்டியில்கூட 80 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. ஊட்டியிலேயே இப்படியென்றால் திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் எல்லாம் கேட்கவே வேண்டாம்.

எல்லா ஊரிர்களிலும் அனல் அடிக்கிறது. ‘தீ’ மழை பெய்கிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு வெயில் உருக்குகிறது.

வெப்ப அலை இருக்கும் என்ற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் அடிக்கடி விடுத்து வருகிறது. இப்போதுகூட அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை என்றால் என்ன?

சமவெளியில் ஒரு இடத்தில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் (அதாவது 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல்) வெயில் அடித்தால், அதை அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையாக அறிவிக்கிறது.

அதேபோல மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை (86 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல்) தாண்டினால்.. கடலோர பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் தாண்டினால் அதை வெப்ப அலை என்று குறிப்பிடுகிறோம்.

உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது மக்களுக்கு உடலில் நீரிழப்பு ஏற்படும். இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் உடல் பலவீனமாவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, வியர்வை, சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு உடலநலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

வெப்ப அலையின்போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியது என்ன?

வெயில் உக்கிரமாக இருக்கும் நேரத்தில், அதாவது பகல் 12 மணிமுதல் 3 மணிவரை வெலியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

வெயில் உச்சத்தில் இருக்கும்போது வெட்ட வெளியில் வேலை செய்வதை தவிருங்கள். உங்கள் வேலைகளை காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்குள் முடித்துவிடுங்கள்.

அந்த நேரத்தில் வெளியில் சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லவேண்டும்.

முடிந்தவரை கையில் ஒரு குடையை எடுத்துச் செல்வது நல்லது. அது அசௌகரியம் என்று கருதினால் தலையில் தொப்பியை வைத்துக்கொண்டு செல்லலாம்.

வெளியில் செல்லும் நேரத்தில் ஒரு பாட்டில் குடிநீரை உங்கள் கைப்பையில் எடுத்துச் செல்வது உபயோகமாக இருக்கும்.

தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலில் இருந்து நீர்ச்சத்து குறைவதைக் கட்டுப்படுத்தும்.

தேநீர், காப்பி மற்றும் மதுவகைகளை குடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளையோ அல்லது உங்கள் செல்லப் பிராணிகளையோ வெளியில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள கார் போன்ற வாகனங்களில் விட்டுச் செல்லாதீர்கள்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட பழரசங்கள், லஸ்ஸி, கஞ்சித் தண்ணீர் போன்றவற்ரை அடிக்கடி குடியுங்கள்.

திரைச்சீலைகளைப் போட்டு உங்கள் வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் ஜூன் மாதம் வரை அடிக்கடி வெப்ப அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்புடன் இருப்போம்.

– ரெஜினா சாமுவேல்

#Indian_Metrological_Department #IMD #வெப்ப_அலை #ரெட்_அலர்ட் #ஆரஞ்ச்_அலர்ட் #உலக_வானிலை_ஆய்வு_அமைப்பு #வெயில்  #தமிழ்நாடு #வானிலை_எச்சரிக்கை #தற்காப்பு

You might also like