ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!

கிராமங்களில் திருவிழா என்றாலே தனி சந்தோஷம்தான். பொங்கல், கரகம், நாடகம், பாட்டு என்று ஊர் முழுக்க திருவிழா உற்சாகம் பரவிக்கிடக்கும்.

பண்ணைப்புரத்தில் பங்குனி மாதத்தில் நடக்கும் திருவிழாவில் கேரளாவில் கங்காணியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ராமசாமியும் வந்து கலந்துகொள்வார். நாடகங்களில் நடிப்பார். பாடுவார்.

ராமசாமிக்கு ஊரில் தனி மரியாதை. காரணம் அந்தக் காலத்திலேயே காரைக்குடி வீடு மாதிரி பெரிய தூண்கள் வராண்டாக்களுடன் பண்ணைப்புரத்தில் வீடு கட்டினவர் அவர்.

கேரளாவில் வெள்ளைக்காரத் துரையுடன் நெருக்கமாகிப் பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு மாறிப் பெயரை ராமசாமி டேனியல் என்று மாற்றிக் கொண்டாலும், அவரது குடும்பத்தினர் மாறவில்லை.

ராமசாமிக்கு அப்போதே ஏலக்காய்த் தோட்டம் எல்லாம் இருந்தது. அவரது மனைவி சின்னத்தாய்க்கு ஆறு குழந்தைகள்: வரதராஜன், கமலா, பத்மா, பாஸ்கர், ராசய்யா, அமர்சிங் என்று நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள்.

கொஞ்சம் எஸ்டேட், பெரியவீடு என்றிருந்த வசதி எல்லாம் ராமசாமி இறந்ததற்குப் பிறகு மாறிவிட்டது.

மூத்த பையன் வரதராஜனுக்குப் பாடுவதில் நல்ல தேர்ச்சி. பாடல்களை இயற்றும் திறமையும் இருந்தது.

கம்யூனிஸக் கூட்டங்களில் சிறிது சிறிதாகப் பாட ஆரம்பித்து பாவலர் வரதராசன் என்கிற பெயர் பிரபலமாகிவிட்டது. 

வீட்டிலேயே அதற்கான ஒத்திகையெல்லாம் நடக்கும்.

பக்கத்திலிருந்த தனியார் பள்ளிக் கூடத்திற்குப் போய் வந்தபடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தம்பிகள் மூன்று பேரும்.

பாஸ்கரும், கடைக்குட்டியான அமர்சிங்கும் எப்போதும் கலகலப்புடனிருக்க, சத்தமில்லாமல் எந்த வம்புக்கும் போகாத சிறுவனாக ‘ராசய்யா’ பவுடர் டப்பாவில் நடுவில் ஒரு கம்பியை மாட்டி தம்புரா மாதிரி மீட்டிப் பார்த்திருக்கிறார். கம்பி அதிர்ந்து உருவான சத்தம் பிடித்திருந்தது. 

பிள்ளைகள் படுகிற நிலைமையைப் பார்த்துக் கிராமங்களில் ஜோசியம் பார்க்கவரும் சந்தனமுத்து வள்ளுவனைக் கூப்பிட்டு தாயார் சின்னத்தாயி கேட்டார்.

“என்னப்பா… இப்படிக் கஷ்டமா இருக்குது..” “கொஞ்சநாள்தான். அப்புறம் காரு பங்களான்னு உசந்துருவீங்க” சொன்ன ஜோசியரைக் கிண்டல் செய்தார்கள் பிள்ளைகள்.

“ராசய்யாவும், தம்பிகளும் தொடர்ந்து படிக்க முடியலை. அண்ணன் பாவலர் வரதராசன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாட ஆரம்பிச்சிருந்த நேரம். அப்போ கேரளாவில் மூணாறுப் பகுதியில் இடைத்தேர்தல் நடக்குது.

தமிழர்கள் அதிகமுள்ள அந்தப் பகுதியில் பாவலரைக் கூட்டியாங்கன்னு ஜனங்க சொன்னதும் அவரைக் கூட்டிக்கிட்டு கிராமம் கிராமமாகப் போனேன். வரதராசனுக்கு நல்ல குரல். மைக் இல்லாமலேயே உச்சஸ்தாயியில் பாடுவார்.

தேர்தல் முடிந்ததும் நிலைமை கஷ்டமாயிருக்கேன்னு வரதராஜன் சொன்னதும் ஒரு குழுவாக இருந்தால் ஊர் ஊராக அனுப்ப வசதியாயிருக்கும்னு சொன்னதும் தம்பிகளை வைச்சுக்கிட்டு உடனே ஒரு குழுவைத் தயார் பண்ணிட்டார்.

பாஸ்கர், ராசய்யா, அமர்சிங் எல்லாம் பாடவும் செய்வார்கள். இசைக்கருவியும் வாசிப்பார்கள். பெரும்பாலும் நாட்டுப்புறப்பாட்டுதான் பாடுவார்கள். ராசய்யா (இளையராஜா) பெண் குரலில் பாடுவான். அவனுக்கு மகரத்தொண்டை வந்து குரல் கட்டிக்கிட்டபோது அமர்சிங் (கங்கை அமரன்) பாடினான்.

தமிழகம் முழுக்கப் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கிராமம் கிராமமாக விதைச்சதில் பாவலர் சகோதரர்களுக்குப் பெரும் பங்குண்டு” எண்பது வயதானாலும் தளர்ச்சி இல்லாமல் சொல்கிறார் மதுரையில் இருக்கிற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஐ.மாயாண்டி பாரதி.

கிராமம் கிராமமாகப் போனபோது பயணச் செலவு, சாப்பாட்டுச் செலவு போக ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பாவலர் சகோதரர்களுக்குக் கிடைத்த பணம் அறுபதிலிருந்து நூறு ரூபாய்தான்.

சமூகப் பிரச்சினைகளைப் பாடலிடையே சொல்வதுதான் பாவலரின் தனிச்சிறப்பு.

திருச்சியில் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி. துவங்குமுன்பு கட்சித்தோழர்கள் வந்து அங்கிருந்த கலெக்டரைப் பற்றிப் புகார் சொன்னார்கள்.

மேடையிலேயே இசை நிகழ்ச்சியில் கலெக்டரை கடும் விமர்சனம் செய்து பாவலர் சொன்னார் “மக்கள் மன்றம் இதை மன்னிக்காது.”

சொல்லி நிகழ்ச்சி முடிந்து மதுரைக்குப் போனதும் பாவலர் வரதராசனைக் கைது செய்துவிட்டார்கள். மக்களைத் தூண்டி விட்டதாக அவர் மீது புகார். ஜெயிலிருந்த பாவலரைக் கட்சிகூட கவனிக்கவில்லை.

“அதில் நொந்து போய்விட்டார் பாவலர். ஜெயிலிலிருந்து வெளியே வந்து தி.மு.கவில் கொஞ்சகாலம் இருந்தார். சிறிது சிறிதாக மனசு உடைந்து அவர் இறந்தபோது கட்சிக்காரர்கள் யாரும் அதிகம் போகலை.

இவரை (மாயாண்டி பாரதி) போன்ற சிலர் மட்டும் உடல் அடக்கத்திற்குப் போயிட்டு வந்தாங்க. இந்தச் சம்பவம் ராசய்யாவையும், அவரது தம்பிகளையும் ரொம்பப் பாதிச்சிருச்சு” என்கிறார் மாயாண்டி பாரதியின் மனைவியான பொன்னம்மாள்.

அந்தச் சமயத்தில் தேனி அல்லி நகரத்திலிருந்து மலேரியா இன்ஸ்பெக்டராக வந்த சின்னசாமிக்கும் (பாரதிராஜா) சகோதரர்களுக்கும் தொடர்பு.

சிவாஜி மாதிரி நடிக்க முயன்று கொண்டிருந்த சின்னச்சாமிக்கு இருந்த சினிமாக் கனவு இவர்களுக்கும் தொற்றிவிட்டது. சினிமா பார்த்துவிட்டு எப்போதும் அதே பேச்சு.

“பக்கத்து ஊர்கள் என்பதால் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாடகம் போட்டுக்கிட்டிருந்த சின்னசாமியுடன் சேர்ந்து தேனியில் ‘ஊர் சிரிக்கிறது’ என்கிற நாடகம் போட்ட போது அதற்கு இசை ராசய்யா சகோதரர்கள். அப்போது அவர்களின் ஒரே ஆர்வம் எப்படியும் சினிமாவுக்குள் புகுந்து சாதித்துவிட வேண்டும் என்பதுதான்” என்று அசை போட்டார் தேனியிலிருக்கிற பாரதிராஜாவின் தங்கையின் கணவரான முத்தையா.

சின்னச்சாமியான பாரதிராஜா சென்னைக்கு நடிப்பு ஆசையில் வந்து நடிக்க முடியாமல் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டு ராசய்யாவும் சகோதரர்களுடன் சென்னைக்கு வந்துவிட்டார்.

சென்னைக்கு வந்து இன்னும் கஷ்டமான நிலை. சில நாடகக் குழுக்களுக்குப் பின்னணி இசையமைத்திருக்கிறார்கள். பாட்டுக் கச்சேரியில் வாசித்தார்கள். ஜெயகாந்தன் உட்பட பலரைப் போய் பார்த்து ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்று வழி தேடினார்கள்.

ஒரு வழியாக விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் உதவியாளராக இருந்து தனித்து இசையமைக்க ஆரம்பித்திருந்த ஜி.கே.வெங்கடேஷின் குழுவில் சேர்ந்து விட்டார்கள்.

அதற்குள் நாட்டுப்புறப்பாடல்களில் ஆர்வம் கொண்டிருந்த சியாமளா பாலகிருஷ்ணனுக்கும் ராசய்யா சகோதரர்களுக்கும் பரிச்சயம் ஏற்பட்டு ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்கிற பாட்டு அடங்கின கேஸட்டைக் கொண்டு வந்தார்கள். சகோதரர்களின் முதல் கேஸ்ட் முயற்சி கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது.

“ரொம்பவும் கஷ்டப்பட்ட நேரத்தில் கூட அமைதியா இருக்கும் தம்பி (ராசய்யா). அதோட சுபாவமே அப்படி. கடுமையா உழைக்கும் அந்தத் தம்பி. சென்னைக்குப் போனதும் ஹிந்தி, சமஸ்கிருதம் கத்துக்கிட்டிருச்சு.

விடியற்காலை நாலு மணிக்கு எந்திரிச்சு எதையாவது கத்துக்கிட்டிருக்கும். சின்னவயசிலே ஜாதகம் பார்த்தப்பவே என் மகள் ஜீவாவை ராசய்யாவுக்குத்தான் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருந்தோம். அதன்படியே பண்ணைப்புரத்தில் எங்க வீட்டில் எளிமையா இவங்க திருமணம் முடிந்தது.

அதன் பிறகு கார்த்திக் ராஜா பிறந்ததும்தான் தம்பிக்குப் பட சான்ஸ் வந்தது. கிராமத்துக்கே உரிய மொழியில் தனது தம்பி இளையராஜாவைப் பற்றிப் பாசத்துடன் சொல்கிறார் பண்ணைப்புரத்தில் வசிக்கும் கமலாம்பாள்.

அப்போது கிராமிய மணத்துடன் செல்வராஜ் எழுதிய கதையைப் படமாக்க முனைந்து கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலத்திடம் தங்களது கேஸட்டைப் போட்டுக் காண்பித்தார்கள்.

புதுப்புது கிராமிய மெட்டுக்களை வாசித்துக் காண்பித்தார்கள் ராஜாவும், அவரது சகோதரர்களும்.

அந்த கேஸட்டிலிருந்த வரியே படத்தலைப்பானது. ‘அன்னக்கிளி’ படம் வெளிவந்தது 1976ல். ராசய்யா இளையராஜாவாகி இசையமைத்திருந்த பாடல்கள் ஹிட்டாகி பல தயாரிப்பாளர்கள் இளையராஜாவைத் தேடினார்கள். தொடர்ந்து பத்ரகாளி, பதினாறு வயதினிலே வந்ததும் தவிர்க்க முடியாத இடம் இளையராஜாவுக்கு.

மாஸ்ட்ரோ, இசைஞானி, டாக்டர் என்கிற அடைமொழிகள் சேர்ந்தாலும் பண்ணைப்புரத்துக்காரர் என்கிற அந்நியோன்யம் விட்டுப் போய்விடவில்லை ராஜாவிடம்.

பத்து வருஷங்களுக்கு முன்பு பண்ணைப்புரத்திற்கு அருகில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெரியாற்றுப் படுகையில் ஆறு வந்து வளைகிற அந்தப் பசுமையான இடம் பிடித்துப்போய் அதை வாங்கியிருக்கிறார்.

ஐந்து ஏக்கர் பரப்பில் தோட்டம் மாதிரி பூத்துக் குலுங்கும் இடத்தில் 90-ல் இறந்த தனது தாயை அடக்கம் செய்து கோவிலாக எழுப்பியிருக்கிறார்.

“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.

தாயாரின் சமாதி அருகே உட்கார்ந்து தியானம் பண்ணுவது அவருக்குப் பிடிக்கும், சின்ன வயசிலிருந்து அவரைப் பார்க்கிறோமே.

சினிமா உலகத்திலே இருந்தாலும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. எப்பப் பார்த்தாலும் இசைதான்.

அவர்கிட்ட உள்ள அமைதியான மனநிலை எந்தச் சந்தர்ப்பத்திலும் மாறலை. அதே சமயம், எதை எடுத்துக்கிட்டாலும் முழுமூச்சா அதில் ஈடுபடுற அவரோட உழைப்புதான் அவரை முன்னுக்குக்குக் கொண்டு வந்திருக்கு” குரலில் பாசம் மிளிரச் சொல்கிறார் இளையராஜாவின் சகோதரி கமலாம்பாளின் கணவரான முனியாண்டி.

கிராமத்து நாற்று மாதிரியான இசைக்குச் சர்வதேசத் தரம் கிடைக்கக் காரணமாக இருந்தது சகோதரர்களின் சலியாத உழைப்புதான்.

– எழுத்தாளர் மணாவின் நதிமூலம் நூலிலிருந்து.

 

 

#இளையராஜா #கமலாம்பாள் #ராஜா #பண்ணைப்புரம் #மாஸ்ட்ரோ #இசைஞானி #சின்னத்தாய் #கார்த்திக்_ராஜா #யுவன்_சங்கர்_ராஜா# ilayaraja #kamalambal #raja #pannayarpuram #mastro #isaigani #chinnathai #karthick_raja #yuvan_shankar_raja #isaignani_ilayaraja

You might also like