என்.என்.ஸ்ரீராமின் மாயாதீதம் – கதையில் பல்வேறு அடுக்குகள்!

- எழுத்தாளர் ஜா. தீபா

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்கள் எழுதிய மாயாதீதம் வாசித்தேன். படித்ததும், அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியினை அவருடைய அனுமதியுடன் தந்திருக்கிறேன்.

மாயாதீதம் வாசித்தேன். சிறிய புத்தகம் என்பதால் அல்ல, வாசிப்பு சுவாரசியம் தந்ததாலேயே ஒரே வீச்சில் படித்து முடிக்க முடிந்தது. உங்களுடைய எழுத்துகளில் பிரமிக்கத்தக்க விஷயமாக நான் எப்போதும் பார்ப்பது, நீங்கள் நிலத்தினை சொல்லும் விதம்.

மிக ஆடம்பரமாக வர்ணிக்காமல், நேர்த்தியாக அந்த நிலத்தை அதன் விளைச்சலாலும், அதில் உலாவுகிற விலங்குகள் வழியாகவும் காட்டிக் கொண்டே இருப்பீர்கள்.

எல்லா மாவட்டங்களும் நிலங்களும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் தாராபுரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ளவை நான் வாசித்தது உங்கள் எழுத்துகள் வழியாக மட்டுமே.

எனக்கு சிறுவயதில் கண் இமையில் சிறுகட்டி ஒன்று வந்தது. உடனே என்னுடைய அம்மா சங்கரன்கோயில் கோமதி அம்மைக்கு வெள்ளிக்கண் போடுவதாக வேண்டிக்கொண்ட பின் அது காணாமல் போனதாக அடிக்கடி சொல்லுவார்.

வீட்டில் எதேனும் பொருளை கைமறதியாக வைத்துவிட்டுத் தேடினால் என்னுடைய அம்மா அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக்கோ என்பார்கள். அந்தப் பொருளும் கிடைத்துவிடும்.

இதுபோன்ற ஆழ்ந்த நம்பிக்கைகள் மீது எனக்கு இப்போதெல்லாம் கேள்விகள் இருப்பதில்லை. நம்பிக்கைகள் இருப்பதாலேயே சுவாரஸ்யம் ஏற்படுகிறது என நினைத்துக் கொள்கிறேன். இந்தக் கதையில் பல்வேறு அடுக்குகள் இருப்பதை உணர்கிறேன்.

எல்லாமே நம்பிக்கை சார்ந்ததாகவே முடிகிறது. கண் வைத்தியத்துக்கான மருந்தும், காத்திருப்பும் பொறுமையும், தேசாந்திரிகாரனின் வாக்குகளும், சித்தி தனது மகனின் திருமணத்தின்மீது கொண்ட நம்பிக்கையும், பார்கவியின் காத்திருப்பும் என எல்லாமே நம்பிக்கையும் அது பொய்த்தும், உண்மையுமாக இருப்பதையே காட்டியது. எனக்கு ஒரு சிறிய குறைபாடும் இருந்தது.

கதை எங்கோ ஒரு அசாதரணமான இடத்துக்குள் சென்று மீண்டும் வழமையான இடத்துக்குள் வந்துவிட்டதோ என்று தோன்றியது.

பாறைமேல் வரையப்பட்ட பாரத ஓவியங்கள் பற்றி இன்னும் இன்னும் வாசிப்பு அனுபவம் தேவையாக இருந்தது. அது இந்த நாவலின் கூடுதலாக வசீகரித்திருக்கக்கூடிய சரியானதொரு களம் என்றேபட்டது. இது என்னுடைய கருத்து மட்டுமே.

நன்றி: எழுத்தாளர் ஜா. தீபா எழுதிய முகநூல் பதிவு

You might also like