இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

அது ஒரு ஆரவாரமற்ற மலைக் கிராமம். அதன் பெயர் சிறுகுன்றம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.

தினமும் வாகன இரைச்சலுக்கும், காற்று மாசுக்கு மத்தியில் அலுவலகங்களுக்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சென்னை வாசிகள் யாராவது அந்த மலைக்கிராமத்தை பார்த்தால் அங்கேயே தங்கிவிடுவார்கள், அப்படியொரு அழகு.

அந்த கிராமத்தில் வெறும் 8 குடும்பங்கள் மட்டுமே இருக்கும். அவர்கள் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். எல்லா குடிசைகளும் மழையில் சேதமடைந்திருந்தன.

இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு பெண் குழந்தை தன் பக்கத்து வீட்டு ஆறு மாதம் நிரம்பிய குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த பெண் குழந்தைக்கு சுமார் 13 வயது இருக்கும்.

எனக்கு இயல்பாக குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவா வேண்டும், வாரி அணைக்க துடிப்பேன். நானும் பெண் என்பதாலேயோ என்னவோ எனக்கு இப்படி ஒரு பாசம்.

அப்படித்தான் அந்த மலைவாழ் பெண் குழந்தையைக் கண்டதும் அவளுடன் விளையாட ஓடினேன். அவள் கழுத்தில் மஞ்சக் கயிறு இருப்பதை உணர்ந்தேன்.

பொதுவாக கிராமப்புறங்களில் தைப்பூசத்தன்று பாலி வளர்த்து ஆற்றில் கரைப்பார்கள். இந்த வழிபாட்டிற்கு மஞ்சக்கயிறு கட்டி விரதம் எடுப்பார்கள். அதை தான் அவள் கட்டியிருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அது தாலிக்கயிறு.

அக்குழந்தைக்கு திருமணமாகிவிட்டது. கணவனுக்கு வயது 18 நிரம்பியிருக்கும். கையில் இருக்கும் குழந்தை அவளுடையது என்ற உண்மை தெரிந்ததும் எனக்கு சொல்ல முடியாத துயரம், தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வரவில்லை.

குழந்தையின் கையில் இன்னொரு குழந்தையை பார்க்கும் போது அந்தப் பெண் குழந்தையின் உடல் எப்படி தாய்மையடையும் பாரத்தைத் தாங்கியிருக்கும் என்ற கேள்வி இன்னும் என் மனதை உறுத்துகிறது.

கல்வி இடைநிற்றல், பெண்முன்னேற்றம் தடைபடுதல் இத்தனை விளைவுகள் குழந்தை திருமணத்தால் ஏற்பட்டாலும் என் மனம் அந்த ஒரு கேள்வியால் உறுத்திக் கொண்டிருக்கிறது.

குழந்தைத் திருமணம் என்பது சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என்று பெரியார் குறிப்பிடுவார்.

வாழ்க்கையின் கனவுகளைச் சுமக்க வேண்டிய காலக்கட்டத்தில் குழந்தையைச் சுமக்கும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் ஒழிந்த பாடில்லை.

ஏன் சமூக நீதியின் மாநிலம் என்று கோலோச்சிக்கும் தமிழ்நாட்டிலும் ஒழியவில்லை. மேல் குறிப்பிட்ட சம்பவம் போல் செங்கல்பட்டில் மட்டும் தான் நடக்கின்றதா என்றால் இல்லை.

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நிகழ்கிறது.

சென்னைக்கு அருகிலேயே கிராமங்களிலேயே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டின் தென் பகுதிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்கையிலேயெ வருத்தம் தொண்டையை அடைக்கிறது.

சாதியும் பிற்போக்குத்தனமும் தீவிரமாக இருக்கும் தென்மாவட்டங்களுக்கு பயணிக்க நேர்ந்தது.

சிவகங்கையில் 5 நாட்கள் தங்கியிருந்தேன். நான் சென்ற நாள் தேவர் பூஜை பிரசித்தியாக கொண்டாடப்பட்டது. முத்துராமலிங்கம் என்ற தனிப் பெரும் ஆளுமையை தேவர் என்ற சாதிக்குள் முடக்கியது தான் வருத்தம். இதைப்பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டே சிவகங்கை மாவட்டம் புதுவயலுக்கு பயணப்பட்டேன்.

புதுவயலில் தொட்டிநாயக்கன் குடியிருப்பு என ஒரு இடம் இங்குள்ளது. அங்கு வாழும் பழங்குடியினர் பெரும்பாலும் பழைய சேலை வியாபாரம் செய்கிறார்கள். வீடு வீடா சேலையை வாங்கி அவற்றை துவைத்து காயவைத்து கம்பெனிகளுக்கு விற்பார்கள்.

அப்பகுதியில் உள்ள பெரியவர் ஒருவர் வாழ்வியலை விளக்கிக் கொண்டிருக்கையில் ஒரு பெண் தண்ணீர் எடுப்பதற்காக எங்களைக் கடந்தார்.

நல்லதொரு தோற்றமுடைய 34 வயதைக் கடந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் பெயர் பொண்ணம்மாள் (பெயர் மாற்றப்பட்டது) அவரிடம் பேச்சுக்கொடுத்தவாரே அவர் வீட்டுக்கு சென்றேன்.

தண்ணீரை கொடுத்து, ’இந்தா மா ரொம்ப களைப்பா இருக்க’ என்றார். அப்போது சின்னஞ்சிறு குழந்தை விளையாடியது. பொண்ணம்மாள் ஆசையாக தூக்கி கொஞ்சியதும் அவருடைய குழந்தை என்று நினைத்தேன். ஆனால் குழந்தை பாட்டி என்றழைத்தது.

பிறகு தான் உண்மை புரிந்தது. பொண்ணம்மாளுக்கு திருமணமான பெண் இருக்கிறார். பொண்ணம்மாளின் பேத்தி தான் அந்த குழந்தை. 34 வயதில் பேத்தியா? என்று உங்களுக்கு ஏற்படும் அதே ஆச்சரியம் தான் எனக்கும்.

 

பொண்ணம்மாளுக்கு 15 வயதில் திருமணம் ஆகிவிட்டது. தன்னுடைய முறைமாமனுடனான திருமண வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறார்.

ஆனால் ஒரு காலத்தில் அவர் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்குள்ளாகியது அவர் பேசும் போது புலப்படுகிறது.

15 வயதில் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென்று திருமணம்.

அடுப்பங்கறை பக்கமே செல்லாத குழந்தை விதவிதமாக சமைக்க வேண்டும். இடுப்பெலும்பு தேயுமளவுக்கு ஒரு கிலோமீட்டர் சென்று தண்ணீர் தூக்கி வர வேண்டும்.

எல்லா துணிகளையும் துவைத்து காயவைத்து மடித்து வைக்க வேண்டும் என்று லிஸ்ட் நீள்கிறது.

இதனிடைய வயிற்றில் குழந்தை உருவாக அதனை தூக்கி சுமந்து கொண்டு எல்லா வேலையும் செய்ய வேண்டும். இதெல்லாம் கேட்ட நான் உடனே, வயிற்றில் குழந்தையை சுமந்துகொண்டு வேலை பார்ப்பது வலிக்கவில்லையா? என்ற கேள்வியை கேட்டேன்.

’அதெல்லாம் வலிக்கலைமா, நமக்குனு ஒரு குடும்பம் இருக்கு, நாம தானே எல்லாத்தையும் பாத்துக்கனுங்குற நினைப்பு தான் இருந்துச்சு, பிரசவத்தப்ப தான்  வலி இருந்துச்சு. மத்த நாளெல்லாம் பெரிசா தெரியல மா’ என்று முடித்தார்.

குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு தலையிலும் இடிப்பிலும் இரண்டு குடங்களை நெடுந்தூரம் சுமப்பது உங்களுக்கும் எனக்கும் பெரிய கஷ்டமாக தெரியலாம். ஆனால் பொண்ணம்மாளுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அந்த வலிகளுக்கும் சுமைகளுக்கும் பழக்கப்பட்டுவிட்டார்.

பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை வன்முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தன் மீது நடத்தப்படுவது அநீதி என்று தெரியாமல் அம்மக்களை பழக்குவது வன்முறைகளில் முதன்மையான வன்முறை.

காலில் முள் குத்தினாலேயே அழும் பிஞ்சு வயதில் குழந்தையை தூக்கிச் சுமப்பது பிரச்சனையாக தெரிந்ததில்லை. எனக்கு வருத்தமும் கோவமே தவிர ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

உடலையும் மனதையும் உருக்குலைக்கும் வலி ஏற்பட்டாலும் பெண்களை பொறுத்துக் கொள்ள சமூகம் பழக்கிவிட்டது. இதே நிலை பொண்ணம்மாளின் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது.

ஏன் குழந்தை திருமணம் பழங்குடியினர் மத்தியில் அதிகமாக இருக்கிறது?

பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் தமிழ்செல்வன், பழங்குடிகளிடம் சட்டமும் கல்வியும் சென்றடையவில்லை என்ற சமூகக் காரணம் பொதுவாக இருக்கலாம். ஆனால் குழந்தைத் திருமணம் பரவலாக நடப்பதற்கு வேறு சில கலாச்சாரக் காரணங்களும் உள்ளன.

சுமார் 37 இனங்களைப் பழங்குடியினராக அரசு அங்கீகரித்துள்ளது. இக்குழுக்களில் அதியன், காட்டுநாயக்கன், மலசர், முதுவர், மலையாளி, இருளர் ஆகிய இனங்களும் அடங்கும்.

பழங்குடியினர் பெரும்பாலும் தினக் கூலி வேலைகளையும், காட்டையும் வாழ்வாதாரத்துக்கு நம்பியுள்ளனர். விடியற்காலையில் வேலைக்கு சென்றால் இரவு தான் வீட்டுக்கு வருவார்கள்.

இதனால் குழந்தைகள் பள்ளிக்கு போனார்களா? என்பதை கவனிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. அதே போல் சிறுபிள்ளையாக இருக்கும் போதே ஆணும் பெண்ணும் காதலுணர்வுடன் பழகுவதை பெரிதும் பொருட்படுத்த மாட்டார்கள்.

பழங்குடிகளில் பெரும்பாலும் காதல் திருமணங்கள் தான் அரங்கேறும். காதலுக்கான சுதந்திரம் இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமும் இருபாலருக்கும் சமமாக உள்ளது.

இரு வேறு குழுக்களுக்கு இடையில் திருமணம் நடந்தாலும் சில பழங்குடி வகுப்புகளில் சாமியிடம் குறி கேட்டு பெண்ணை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், முதுவர் போன்ற பழங்குடியினத்தில் ஆணோ, பெண்ணோ வேற்று இனத்தில் திருமணம் செய்து கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தம்பதிகள் வேறு எங்காவது மகிழ்வுடன் வாழ்ந்துகொள்ளலாம்.

குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திருமண நிகழ்வினால் வெறுப்பும், வன்மமும் சிறிதும் ஏற்படாது.

கலாச்சார ரீதியில் பெண்களுக்கான சுதந்திரம் அங்கு அதிகம். ஒரு பெண் யாருடன் வாழ வேண்டும் என்பதை அவள் தான் முடிவுசெய்வாள்.

திருமணமான பின்பு அந்த நபரை பிடிக்கவில்லை என்றால் விலகுவதற்கான சுதந்திரம் உள்ளது. மற்றொரு திருமணம் கூட செய்துகொள்ளலாம்.

ஆனால், அவர்கள் இன்னும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் போதுமான முன்னேற்றத்தை அடையவில்லை.

ஆதலால் குழந்தைத் திருமணம் பரவலாக உள்ளது. இதனால் உடலளவிலான பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மலசர் இன பழங்குடி மக்களிடம் மகப்பேறின்மை பரவலாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று அரசு அங்கீகரித்த பழங்குடிகளின் வாழ்வியலை விளக்குகிறார். இவை தொட்டிநாயக்கன் போன்ற Denotified tribes-க்கும் பொருந்தும்.

குழந்தைத் திருமணங்கள் ஆதிக்கச் சாதியிலும் அரங்கேறுகின்றன. நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் என்னுடன் படித்த இரண்டு தோழிகளுக்கு கல்யாணம் முடிந்தன.

திருமணம் ஆன இருவரும் பழங்குடியினரோ, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களோ இல்லை. இருவரும் ஓரளவு வசதி படைத்த மாணவிகளே.

நான் எப்படியாவது திருமணத்தை தடுத்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிகொண்டு திரிந்தேன், ஆனால் அப்போது எனக்கு திருமணத்தை நிறுத்துவதற்கான திராணி இல்லை. இப்போதும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

என் தோழிகளுக்கு திருமணம் செய்யப்பட்டதற்கு காரணம், குடும்பத்தின் பெரியவர்கள் சாகக்கிடப்பது தான் காரணம். சாகுறதுக்குள்ள என் பேத்தியின் கல்யாணத்த பார்க்கணும் என்ற பெரியவர்களின் ஆசையே பல பெண் குழந்தைகளின் கனவை அழிக்கிறது.

பெரியவர்களின் ஆசையும் முக்கியம் தான். ஆனால் இன்னும் 2 வருடம் உயிருடன் இருப்பவருக்காக இன்னும் பல ஆண்டுகள் வாழவிருக்கும் உயிரின் கனவுகளையும், ஆசைகளையும் பலிகொடுப்பது நியாமா?

இன்னும் சில வீடுகளில் தன்னுடைய மகள் பள்ளிப் பருவத்தில் காதலிப்பது தெரிந்துவிட்டால் போதும், குடும்ப மானத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அடுத்த வாரமே திருமணத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

தாய்மாமா, முறைப்பையன் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்றெல்லாம் காரணம் சொல்லி திருமண வயது எட்டுவதற்குள் திருமணம் முடிந்துவிடுகிறது.

ஆதிக்க சாதிகளில் கௌரவத்தை காப்பதற்காக, தன்னுடைய கடமை முடிந்தது என்பதற்காக திருமணத்தை விரைவிலேயே முடித்துவிடுகின்றனர்.

அப்படித் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் எனக்கு தெரிந்த அக்காவிற்கு 14 வயதிலேயே திருமணம் முடிந்து விட்டது.

தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தையை சுமக்கும் போது அவருக்கு 15 வயது. எப்படித் தாங்குனீர்கள் என்ற கேள்விக்கு அவரது பதில், நான் கருவுற்ற போது எனக்கு இரவெல்லாம் தூக்கமிருக்காது.

நான் அப்போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். இரவெல்லாம் அழுதுகொண்டே இருப்பேன்.

வயிற்றில் குழந்தையுடன் என் கணவரிடம் அவ்வப்போது அடியும் வாங்கினேன்.

யாரும் உதவிக்கு வரவில்லை? திருமணம் செய்து வைத்த பெற்றோரும் கைவிட்டனர்.

இத்தனை கொடுமைகளையும் நான் அனுபவிக்க காரணம் நான் யாரையாவது காதலித்து விடுவேனோ என்ற அச்சம் என் குடும்பத்திற்கு இருந்தது. அதனால் எனக்கு சிறுவயதில் திருமணம் செய்து வைத்தனர். காதலிப்பது தவறு என்ற அவர்களின் சிந்தனை என்னை பாழுங்கிணற்றில் தள்ளியது.

குழந்தைத் திருமணம் சமீப காலமாக இருக்கும் பிரச்சனையல்ல. பல ஆண்டு காலமாக தொடரக் கூடிய சமூக அவலநிலை. குழந்தைத் திருமணம் செய்யப்படும் வயது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாற்றம் அடைந்திருக்கிறது.

பண்டைய வேத காலத்தில் திருமணமாகும் பெண் குழந்தையின் வயது எட்டு முதல் பத்தாக இருந்தது. இடைக்கால வேதகாலத்தில் ஏழு முதல் எட்டு வயது திருமண வயதாக இருந்தது. பிரிட்டிஷ் காலத்தில் பெண்ணின் திருமண வயது பதினான்கு வயதாக இருந்தது.

எத்தனையோ இறப்புக்கு பின் குழந்தை திருமணத்தால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தவர்கள் குழந்தைத் திருமணத்துக்கு எதிராக போராடத் தொடங்கினர்.

குழந்தைத் திருமணத்துக்கு எதிராக முதன்முதலில் 1891-ம் ஆண்டு தான் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1889-ம் ஆண்டு பதினொரு வயதே நிரம்பிய குழந்தை, வயது முதிர்ந்த கணவனின் கட்டாய உடலுறவுக்கு பலியாகினார். இக்கொடுமைகளுக்கு பிறகு உடலுறவுக்கான ஒப்புதல் வயதிற்கான சட்டம் 1891-ம் அமல்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் உடலுறவுக் கொள்வதற்கான வயது வரம்பை பத்திலிருந்து பன்னிரண்டாக உயர்த்தியது. இச்சட்டம் உடலுறவுக்கு எதிரானதே தவிர குழந்தைத் திருமணத்துக்கு எதிரானது அல்ல.

குறை வயது உடலுறவைத் தடுப்பதால் உயிரையும் உடலையும் பாதுகாக்க முடியும்.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்காமல் குழந்தையின் மனநலனையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியாது.

எனவே 1978-ம் ஆண்டு குழந்தை திருமணம் சட்டம் அமல்படுத்தப்பட்டு பெண்களுக்கான திருமண வயதை 14 முதல் 15 வயதாக உயர்த்தியது.

1984-ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் திருமண வயதை ஆணுக்கும் பெண்ணுக்கும் 18- ஆக உயர்த்தியது.

குழந்தைத் திருமணப் பாதுகாப்புச் சட்டம் திருமண வயது ஆணுக்கு 21 வயதையும் பெண்ணுக்கு 18 வயதையும் அங்கீகரித்தது. சட்டப் பாதுகாப்பு ஏற்பட்டாலும் இன்னும் குழந்தை திருமணங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

குழந்தைத் திருமணத்தால் கல்வி இடைநிற்றல் ஏற்படுவது மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியம் சீர்குலைகிறது.

எட்டு வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நிலை பிரச்சனைகள் குறித்து 1927-ஆம் ஆண்டு வெளியான காத்தரின் மேயோ-வின் நூலில் குறிப்பிட்டுள்ளது.

1.திருமணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய வயதான கணவனின் காம இச்சைக்கு பலியான இளம் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாலியல் வன்முறைக்கு ஆளானதால் அவளது தொடை எலும்பு பிறழ்ந்தது. இடுப்பும் சேதமடைந்திருந்தது. சதை தனியாக தொங்கியது.

2.ஏற்கனவே இரண்டு மனைவிகள் கொண்ட கணவனை மணம் புரிந்ததால் அறுவை சிகிச்சையால் கூட குணப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் 9 வயது நிரம்பிய சிறுமி.

3. பத்து வயதுடைய சிறுமி உடலில் பின் பக்கத்தில் தொடர்ச்சியாக ரத்தம் வெளிவந்தது.

4. ஏழு வயது சிறுமி ஒருவர் கணவரின் கொடுமையால் மருத்துவமனையிலேயே இறந்தார்.

5. உடலுறவினால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அடுத்த நாளே அவருடைய கணவரால் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

6. குழந்தைத் திருமணமான பத்து வயது சிறுமி நடக்க முடியாமல் நேராக நிற்க முடியாமல் மருத்துவமனைக்கு தவழ்ந்து சென்றார்.

இவையெல்லாம் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் ஏற்பட்ட கொடூரங்கள். அதுவும் 8 முதல் பத்து வயது குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பேராபத்துகள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பதின் பருவக் குழந்தைத் திருமணங்களே அதிகமாக நிகழ்கின்றன. தற்போது இந்தளவு தீவிரம் இல்லை என்றாலும் உடல்ரீதியான சிக்கல்களை பதின் பருவத்திலேயே திருமணத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் அனுபவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்ட கிராமப்புற செவிலியர் செல்வி, குழந்தை திருமணத்தால் பெண்கள் அனுபவிக்கும் வேதனைகளைப் பகிர்கிறார்.

பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோர்கள் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கவே செய்கின்றனர்.

குழந்தைத் திருமணத்தால் கருவுறும் பெண்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதின் பருவத்தில் கருப்பையின் வளர்ச்சி போதுமானதாக இருக்காது. இப்பெண்கள் கருவை சுமக்கப் போதுமான வளர்ச்சியடையாத கருப்பையில் கருவை சுமக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

திருமண வயதை எட்டிய பெண்கள் எதிர்கொள்ளும் உதிரப்போக்கை விட குழந்தை திருமணத்தால் கருவுற்ற பெண்கள் அதிகளவான உதிரப்போக்கை எதிர்கொள்கின்றனர்.

குடும்பம் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் ஆலோசனைகளால் ஓரளவு குடும்ப வாழ்க்கைக்கு தன்னை தகவமைத்துக் கொண்டாலும் அவர்களின் கணவருடனான உறவு பிடிப்புடன் இருப்பதில்லை.

சில ஆண்கள் தினமும் உடலுறவில் ஏற்பட விரும்புவார்கள். சிலர் வாரத்திற்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட விரும்புவர், ஆனால் வீட்டில் உள்ளவர்களால் செய்யப்பட்ட குழந்தை திருமணத்துக்கு ஆளாக்கப்பட்ட பெண்களால் உடலுறவில் ஈர்ப்பு இருப்பதில்லை. கணவனின் விருப்பத்திற்காக உடலுறவிற்கு உடன்படுகிறார்கள்.

பெரிதளவிலான வயது வித்தியாசம் கொண்ட கணவருடன் உடலுறவு கொள்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வேண்டாம் என்று சொல்ல முடியாமல் சகித்துக் கொள்கின்றனர். உடல் உறவு கொள்ளுதல் சிக்கல் என்றால் மகப்பேறும் அவர்களுக்கு சிக்கலாகத்தான் உள்ளது.

பிரசவிக்கும் போது சரியான வயதில் திருமணமான பெண்கள் மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

ஆனால் 18 வயதுக்கு கீழே உள்ள பெண்கள் வலியை தாங்கிக் கொள்ள முடியாததால் பிரசவிக்கும் போது மருத்துவத்துக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால் மருத்துவருக்கும் செவிலியருக்கும் குழந்தையை வெளியில் எடுப்பது கடும் போராட்டமாக உள்ளது.

பிரசவம் போராட்டம் என்றால் குழந்தை பிறந்த பிறகு அப்பெண்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பதின் பருவத்தில் கருவுறும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறக்ககிறது.

பிரசவத்திற்கு பிறகு இப்பெண்கள் உடலளவில் வலுவிழக்குகின்றனர். இவர்களின் முதுகெலும்பு கூம்பகம் வலுவிழக்கிறது. இதனால் இடுப்பு வலி ஏற்படும். எளிதில் சோர்வடைந்து விடுகின்றனர்.

வயது வந்த பெண்களும் இவ்வாறான பிரச்சனைகள் எதிர்கொள்வார்கள் என்றாலும் பதின்பருவ பெண்களுக்கு எழும்பு முதிர்ச்சியடையாததாலும் எடை குறைவாக இருப்பதாலும் கூடுதல் வலியை அவர்கள் உணருகின்றனர். தற்போதுள்ள மருத்துவ வசதிகளால் மட்டுமே இவர்கள் இறப்பதிலிருந்து காப்பற்றப்படுகின்றனர் என்கிறார்.

எனக்கு இருபத்திரண்டு வயது நிறைவடைந்தது.

நான் வேலை நிமித்தமாக செல்லும் இடங்களில் சந்திக்கும் பெண்களும் பதினைந்து முதல் இருபது வயதுக்குள் தான் உள்ளார்கள்.

ஆனால் எனக்கும் அவர்களுக்கும் நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடிகிறது.

பல நாட்கள் நான் காலையில் தூங்கி எழ எட்டு மணிக்கு மேல் ஆகிறது. எனக்கு சீக்கிரம் எழுந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. நான் என் கையில் புத்தகத்தையும் பேனாவையும் சுமக்கிறேன். என்னால் பல இடங்களுக்கு செல்ல முடிகிறது.

ஆனால், என் வயதை விட குறைவான சகோரிகள் தற்போது குழந்தைகளின் தாயாக இன்னொரு வீட்டின் மருமகளாக தன்மீது அழுத்தப்படும் சுமைகளை சுமக்கிறார்கள். அவர்களின் உலகம் சிறியது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் சமையலறையில் தான் கழிகின்றன.

படிப்பதற்காகவும், கேளிக்கைக்காகவும் இரவு கண் விழிக்க வேண்டியவர்கள் தற்போது குழந்தைகளை கவனிப்பதற்காக விழித்திருக்கிறார்கள். அரை தூக்கத்துடன் சமையல் வேலை செய்கிறார்கள். அவர்களின் மனநலன் எப்படி இருக்கும் என்பதற்கான பதிலை மன நல ஆலோசகர் காயத்ரி நம்மிடம் விளக்குகிறார்.

“பொதுவாக மனிதன் முழு ஆளுமையாக மாறுவதற்கு குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இது திருமணத்திற்காக மட்டுமல்ல வேலை செய்வதற்கும் பொறுந்தும். 18 வயது நிரம்பாததால் உணர்ச்சிகள் எல்லையற்று இருக்கும். எதையும் நிதானித்து முடிவு எடுப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

காதல் மற்றும் திருமணம் பற்றி மாயையை திரைப்படங்கள் இளம் வயதினர் மனதில் விதைத்துள்ளன. இருவரும் அடிக்கடி கொஞ்சிக் கொள்வதும், பொருட்கள் வாங்கி தருவதும் மட்டும் தான் காதல் என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர். அதனால் எதார்த்த நிலையை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருப்பதில்லை.

திருமணத்தால் ஏற்படும் பொறுப்பு, சண்டைகளால் ஏற்படும் மன அழுத்தம் குடும்ப உறவுகள் என எதையும் கையாள்வதற்கான பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை

பதின் பருவத்தில் கருவுறுவதால் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்களை அவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. அதனால் அவர்கள் கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

தமிழ்ச்செல்வன்

எரிச்சலுடனே இருப்பது, அழுது கொண்டிருப்பது, மற்றவர்களிடம் சண்டையிடுவதுமாக அவர்களின் நாட்கள் கழிகின்றன.

இந்த நேரத்தில் யாராவது அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இப்படியே நாட்கள் கழிய அவர்கள் திருமண வாழ்க்கைக்கு தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்வார்கள்.

குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்வது, சொந்தங்களுக்கு நல்லது கெட்டது பார்ப்பது, வீட்டில் அனைத்து வேலைகளும் தானே செய்வது என்று குடும்பத்திற்காக சுழல பழக்கப்பட்டுவிடுவார்கள் என்றார்.

இவையெல்லாம் ஆரோக்கியமான முன்னேற்றமாக தெரிந்தாலும் அது உண்மையில்லை. பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல வேண்டிய வயதில் குடும்பம் என்றே அவர்கள் வாழ்க்கை சுருங்கிவிடுகிறது. மிகப்பெரிய சுமையை சுமக்க சிறு வயதிலேயே நிர்பந்தித்துள்ளது சமூகம்.

தகவல் அறியும் சட்டத்தின் படி 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் கீழ்வருமாறு:

2021-ம் ஆண்டு தடுத்து நிறுத்தப்பட்ட திருமணங்கள்

மேற்குறிப்பிட்டவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து தடுத்து நிறுத்தப்பட்ட திருமணங்கள். தகவல் தெரியாமல் நிறுத்தப்படாத திருமணங்களின் எண்ணிக்கை எத்தனையோ? இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தகவலைப் பார்த்தும் குழந்தை திருமணமா? இப்பெல்லாம் எங்கே நடக்கிறது என்று யாரவது கேள்வி கேட்க முன்வருவார்களா?

குழந்தைகளுடன் தொடர்ச்சியாக வேலை செய்யும் தோழமை இயக்க தேவநேயன் என்ன சொல்கிறார்?

தேவநேயன்

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாகவே திருமணம் நடக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணம் முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் குழந்தை திருமணம் சுமார் 12.6 சதவீதம் வரை உள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களை ஒப்பீட்டால் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணம் குறைவாகவே உள்ளது.

ஆனால், நாம் ஜீரோ சதவீதத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

தமிழக அரசின் திட்டங்களும், சட்டமும் குழந்தைத் திருமணத்தை குறைப்பதற்கான முயற்சியை எடுக்கிறார்கள்.

ஆனால், சட்டத்தைக் காட்டிலும் மக்களிடம் கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருப்பது குழந்தைத் திருமணத்தை இன்னும் நடைமுறையில் வைத்துள்ளது.

சாதிய சமூகத்தில் கலாச்சாரம் என்பது பெண்களுக்கு எதிராகவே உள்ளது. நான் இதுவரை 250 குழந்தை திருமணத்தை நிறுத்தியுள்ளேன்.

நம் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறதென்றால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயத்திற்காக போராடுகையில் குற்றவாளியை வெட்ட வேண்டும், குத்த வேண்டும் என்று என்னிடம் கோவத்துடன் கூறுவர்.

ஆனால், அதுவே குழந்தைத் திருமணத்தை தடுக்கையில் என்னையே அடிப்பதற்கு துரத்துவார்கள். நான் இப்படி ஒருமுறை சிக்கிக்கொண்டு தப்பித்தால் போதுமென்று ஓடிவந்துள்ளேன்.

இந்தியாவில் நடக்கும் அனைத்து குழந்தைத் திருமணத்திற்கும் பொதுமையான காரணத்தையும் தீர்வையும் வரையறுக்க முடியாது. புலம்பெயர் தொழிலாளர்களாக தமிழகத்திலிருக்கும் மாவட்டங்களுக்குள் புலம் பெயர்பவர்கள் பாதுகாப்பிற்காக திருமணம் செய்துவைக்கின்றனர்.

ஆதிக்க சாதிகளில் இருக்கும் பெண்களுக்கு, பிறசாதியில் காதலித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருமணம் செய்து வைக்கின்றனர். அதேபோல் வறுமையான குடும்பங்களில் பெண்ணை படிக்க வைக்க செலவு, திருமணத்திற்காக தனி செலவு என்று இரு செலவுகள் ஏன் செய்ய வேண்டும்? அதனால் ஒரே செலவாக திருமணம் செய்துவிடலாமே என்று முடிவு செய்கிறார்கள்.

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு சமூகநலத்துறை, பள்ளிக் கல்வி துறை இணைந்து செயல்பட வேண்டும். பாலின சமத்துவம், பாலின நீதி, பாலியல் சுகாதார கல்வி ஆகியவை பாடப்புத்தகங்களில் இணைக்க வேண்டும்.

கிராம அளவிலான குழந்தைப் பாதுகாப்பு நிலையம் முறையாக செயல்பட வேண்டும். ஒரு சமூகமாக அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குழந்தைத் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.

குழந்தைத் திருமணத்தை தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் படித்த எனக்கு கடந்த ஆறு மாதங்களாக நேரில் பார்த்த சம்பவங்கள் வருத்தத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.

குழந்தைத் திருமணங்கள் இன்றும் நிகழ்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எந்த காரணமாக இருந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் திருமணம் பாதிக்கிறது.

குழந்தைகளைப் பாதிக்கும் எவற்றையும் அவர்களிடம் நெருங்க விடக்கூடாது. இப்பொறுப்பை பெற்றோருடன் சுருக்குவது அநீதி. அரசிற்கும், சமூகத்திற்கும் குழந்தை நலனை பாதுகாக்கும் பொறுப்புள்ளது.

– கு.சௌமியா, சமூக ஆர்வலர்.

You might also like