விஜயகாந்த், எண்பதுகளில் தமிழ் சினிமாவில் புகழ் கொடி பறக்கவிட்ட முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரே அடுத்த தலைமுறையை ஆட்டிப் படைக்கப் போகிறவர்கள் என்று ஆரூடம் கூறப்பட்ட காலத்தில், ‘ஆட்டத்தில் நானும் இருக்கிறேன்’ என்று தனது படங்களின் வழியே சொன்னவர்.
ஆனாலும், ரஜினிகாந்த் போலவே அதிரடி சண்டைக்காட்சிகளும் வன்முறைக் காட்சிகளும் நிறைந்த ஆக்ஷன் பட வாய்ப்புகளே அவரைத் தேடி வந்தன. அதனால், இளசுகளும் பெருசுகளும் தியேட்டருக்குப் படையெடுத்த அளவுக்குத் தாய்க்குலங்களின் ஆதரவு விஜயகாந்துக்குக் கிட்டவில்லை. குழந்தைகளைக் கவரும் வாய்ப்பும் அமையவில்லை.
அதனால், ‘விஜயகாந்துக்கான ஆடியன்ஸ் குறிப்பிட்டவர்கள் மட்டுமே’ என்ற முடிவுக்கு வந்தது தமிழ் திரையுலகம்.
அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் விதமாக, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்தை மென்மையான நாயகனாகக் காட்டியிருந்தார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.
அது பெண்களைப் பெருமளவில் ஈர்த்தது.
அவர்களது கூட்டணியில், அதே பாணியில் இன்னொரு படம் தயாரானது. 1986-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று அப்படம் வெளியானது. அதன் பெயர் ‘அம்மன் கோயில் கிழக்காலே’. அது, தாய்க்குலங்களின் மனதில் அவருக்குத் தனியிடத்தை உருவாக்கியது.
ரஜினிக்கான கதை!
திமிர் பிடித்த நாயகியை நாயகன் அடக்குவது போன்ற கதையில் ரஜினிகாந்த் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது நாம் நன்கறிந்த விஷயம். புதுக்கவிதை, தம்பிக்கு எந்த ஊரு, மன்னன் தொடங்கி படையப்பா வரை பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
வைதேகி காத்திருந்தாள், குங்குமச் சிமிழ் படங்களின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களைக் கடந்து, ஆர்.சுந்தர்ராஜன் ஒரு கதையைத் தயார் செய்தார். அது, ரஜினிக்காகவே எழுதப்பட்டது.
பாட்டு பாடும் வேலையைச் செய்துவரும் நாயகன், திமிர் பிடித்த பணக்கார வீட்டுப் பெண்ணான நாயகி உடன் மோதுவதும், காதல் வசப்படுவதும், அதனால் நிகழும் சம்பவங்களுமே அதன் கதை. ஆனால், அதில் நடிக்க ரஜினிகாந்த் விரும்பவில்லை.
அதன் தொடர்ச்சியாக, ‘பூவிலங்கு’ ஹிட் தந்த முரளியைத் தேடிச் சென்றிருக்கிறார் சுந்தர்ராஜன். அவருக்குக் கதை பிடித்திருந்தாலும், அந்த நேரத்தில் வேறொரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் அதில் நடிக்க இயலவில்லை. அந்தச் சூழ்நிலையில், இரண்டாவது முறையாக விஜயகாந்த் உடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.
விஜயகாந்தின் ஆரம்பகாலப் படங்களில் நடிக்க மறுத்த நடிகை ராதா, ‘அம்மன் கோயில் கிழக்காலே’வில் அவரது ஜோடி ஆனார். சின்னமணி என்ற பாத்திரத்தில் விஜயகாந்தும், கண்மணியாக ராதாவும் நடித்தனர்.
செந்தில், சிவராமன், வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா சகிதமாக நகைச்சுவை நடிப்பை இதில் வெளிப்படுத்தினார் விஜயகாந்த். ரவிச்சந்திரன் இதில் வில்லனாகத் தோன்றினார். அவருக்கு ஜோடி ஸ்ரீவித்யா.
இன்னும் வினு சக்ரவர்த்தி, ராதாரவி, டி.கே.எஸ்.சந்திரன் உட்படப் பலர் இதில் நடித்தனர்.
மலையாள நடிகை சந்தியா ராணி இதில் விஜயகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.
அட்டகாசமான இசை!
இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் அனைத்து பாடல்களையும் எழுதினார். ’உன் பார்வையில் ஓராயிரம்’, ‘காலை நேரப் பூங்குயில்’, ’பூவை எடுத்து ஒரு மாலை’, ‘சின்னமணி குயிலே’ என்ற காதல் பாடல்களோடு ’ஈவ் டீசிங்’ செய்யும் பாணியில் அமைந்த ‘கடை வீதி கலகலக்கும்’ பாடலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
‘பார் ஆந்தம்’ என்று சொல்லும் வகையில் மதுப்பிரியர்களுக்கான ‘பிளே லிஸ்ட்’டில் இடம்பெறத்தக்கது ‘ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன்’ பாடல்.
ராதா சிறையில் இருந்து விடுதலையாகி வருவது போன்ற தொடக்கமும், பிளாஷ்பேக் பாணியில் அமைந்த காட்சிகளும், இறுதிக்கட்டம் எப்படியானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் விதைத்தது.
இறுதிக்காட்சியில் அந்த பதைபதைப்பை அதிகப்படுத்தும்விதமாகப் பின்னணி இசை அமைக்க வேண்டிய இளையராஜா, அதற்குப் பதிலாக ராதா, விஜயகாந்த், பசி நாராயணன் உணர்ச்சிகரமாக வசனம் பேசுவதற்கு இடம் கொடுத்து மௌனத்தைக் கலந்திருப்பார்.
தனது பின்னணி இசை எந்த இடத்திற்குத் தேவை என்ற அவரது முன்னுணர்தலுக்கான ஒரு உதாரணமாக இப்படம் இருக்கும்.
முடிவில், நாயகனும் நாயகியும் ‘சின்னமணி குயிலே’ பாடலைப் பாடுகையில், நமக்கு ‘அப்பாடா’ என்றிருக்கும். அதுதான் ராஜா இசை செய்யும் மகிமை.
ராஜராஜன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர்களை, அவர்களது உதவியாளர்களை அடையாளம் கண்டு தனது படங்களில் பணியாற்றச் செய்தவர் விஜயகாந்த்.
அந்த வகையில் ராஜராஜன் அவரது பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். ஸ்ரீனிவாஸ் – கிருஷ்ணகுமார் இப்படத்தில் படத்தொகுப்பைக் கையாண்டிருந்தனர்.
விஜயகாந்தின் ஏற்றம்!
‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்திற்குப் பிறகு பல வெற்றிகளையும் தோல்விகளையும் எதிர்கொண்டார் விஜயகாந்த். ஆனால், அவருக்கான சந்தை மதிப்பு பெரிதாகப் பாதிப்புறவில்லை. அதேநேரத்தில் ஏற்றம் பெரிதாக இருந்தது. அதற்கான அடித்தளத்தைத் தந்த படங்களில் மிக முக்கியமானதாக அமைந்தது ‘அம்மன் கோயில் கிழக்காலே’.
1986-ம் ஆண்டில் ‘கரிமேடு கருவாயன்’ என்ற ஆக்ஷன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘அம்மன் கோயில் கிழக்காலே’ வெளியானது. இதே ஆண்டில் ‘ஊமை விழிகள்’, ‘தழுவாத கைகள்’ படங்களையும் விஜயகாந்த் தந்தார்.
ஆனால், இந்தப் படத்திற்குப் பிறகு, அடுத்தடுத்த படங்களில் விஜயகாந்த் கிராமத்து மனிதராக நடிக்கிறாரா, இல்லையா என்ற விஷயத்தைக் கவனிக்கத் தொடங்கினர் சில ரசிகர்கள்.
அதுவே, அக்காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையைப் பன்மடங்காக்கியது.
பிறகு உழவன் மகன், தெற்கத்திக் கள்ளன், பூந்தோட்டக் காவல்காரன், பாட்டுக்கொரு தலைவன், பொன்மனச் செல்வன், சின்ன கவுண்டர், கோயில் காளை, என் ஆசை மச்சான், பெரிய மருது, வீரம் வெளஞ்ச மண்ணு, பெரியண்ணா என்று பல படங்களில் இதே பாணியில் நடித்தார் விஜயகாந்த். அவை இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது வரவேற்பைப் பெறுகின்றன.
விஜயகாந்தை நாயகனாகக் கொண்டு காலையும் நீயே மாலையும் நீயே, எங்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் உட்பட 7 படங்களைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். அவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.
எளிமையாக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்கள், ஒரு பயணச்சீட்டில் பின்புறத்தில் எழுதத்தக்க ஒரு கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சமாய் சண்டைக்காட்சிகள், ஊடே தேவையான அளவுக்கு செண்டிமெண்ட் அம்சங்கள், இறுதியாகப் படத்தைத் தாங்கி நிற்கக்கூடிய இளையராஜாவின் பாடல்கள் என்று கனகச்சிதமான பார்முலாவில் அமைந்த படம் ‘அம்மன் கோயில் கிழக்காலே’.
இது போன்ற படங்களை ஒருமுறை பார்த்தாலே, நல்லதொரு மீடியம் பட்ஜெட் படத்திற்கான மொத்த உருவமும் மனதுக்குள் உருப்பெறும்.
’அம்மன் கோயில் கிழக்காலே’ அதற்குப் போதுமான கச்சாப்பொருளாக நிச்சயம் இருக்கும்.
- மாபா