விஜய்யின் திரையுலக வாழ்க்கையில், அவரால் மறக்க முடியாத படமாக அமைந்தது ‘கில்லி’. தரணி இயக்கிய அந்தப் படமே, அவருக்கு ‘ரிப்பீட்’ ஆடியன்ஸ் அதிகம் என்பதை நிரூபித்தது.
அது மட்டுமல்லாமல் கேரளாவில் அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகவும் அது அடித்தளமிட்டது. அந்த படம் வெற்றியடைந்தபோது, ‘சொல்லியடித்த கில்லி’ என்று கொண்டாடினார்கள் அவரது ரசிகர்கள்.
‘எப்படிப்பட்ட ரிசல்ட் வரும்’ என்று படக்குழு நகம் கடித்தாலும் கூட, அதையும் மீறிய நம்பிக்கை அவர்களிடத்தில் பெருகியிருந்தது. அது நிச்சயம் ஹிட் ஆகும் என்ற ‘டாக்’ கோடம்பாக்கத்தில் இருந்தது.
அதற்கேற்ப முன்பதிவிலும் படம் வெளியான பின்னரும் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரையரங்கங்களில் குவிந்தார்கள்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது. ‘கில்லி’ மறுவெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
மீண்டும் ‘கில்லி’!
வரும் ஏப்ரல் 20ஆம் தேதியன்று மறுவெளியீட்டைக் காண்கிறது ‘கில்லி’. கேரளாவில் சில நகரங்களில் முந்தைய தினம் அப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒருங்கே ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இணைய வழி டிக்கெட் பதிவு செய்யும் தளங்களில் அதனைப் பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. ஏப்ரல் 17-ம் தேதி வரையிலான கணக்கு இது.
கேரளாவில் சுமார் 17,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
படம் வெளியாகும் தினத்தில் இந்த எண்ணிக்கையில் நிச்சயம் மாறுதல் இருக்குமென்று நம்பலாம்.
மறுவெளியீட்டின்போது சில திரைப்படங்கள் வசூலை அள்ளுவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். ஆனால் இந்த வரவேற்பு ரசிகர்களே மலைக்கத்தக்க அளவில் இருக்கிறது.
தொலைக்காட்சிகளில், டிவிடிகளில், ஓடிடி தளங்களில் பார்க்க வாய்ப்பிருந்தும் திரையரங்குகளில் அதனைக் காண ரசிகர்கள் வருகை தருவது பல்வேறு தகவல்களைத் திரையுலகினருக்குச் சூசகமாகச் சொல்கிறது.
மறுவெளியீடு புதிதல்ல!
ஒரு திரைப்படம் முதல்முறை வெளியானபிறகு பெருநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் என்று அடுத்தடுத்து பலமுறை திரையிடப்படும். அப்படியொரு வழக்கம் தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்தது.
படம் வெளியான அன்றே பார்க்க வேண்டும் என்ற வேட்கைக்கு நேரெதிரான ரசிகர்கள் அதனால் பலனடைந்து வந்தனர். ’நம்மூர் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்ற எண்ணத்துடன் காத்திருந்தவர்களுக்காகவே ‘டூரிங் டாக்கீஸ்கள்’ இயங்கிய காலம் அது.
அதன்பின்னர், அந்த அனுபவம் இனி கிடையாது என்றாகிப் போனது. அந்த வர்த்தகத்தை நம்பி ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களின் ‘ரீல் பெட்டி’களை வைத்திருந்தவர்கள் வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.
படம் திரையிடும் பணி முழுக்க டிஜிட்டல்மயமானபிறகு, இனி அப்படியொரு வியாபாரத்திற்கு இடமே இல்லை என்ற நிலை உருவானது.
ஆனாலும் மூத்த நடிகர்களின் படங்களைப் பெரிய திரையில் பார்த்து ரசிக்கும் ஆவல் மட்டும் குறைந்தபாடில்லை. அதனால், பழைய படங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கின.
அதன் தொடர்ச்சியாக அறுபதுகளில், எழுபதுகளில் வெளியான எம்ஜிஆர், சிவாஜி படங்கள் சில காலமாக மறுவெளியீட்டைக் கண்டு வருகின்றன.
உலகம் சுற்றும் வாலிபன், கர்ணன், வசந்த மாளிகை, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை என்று அதற்கான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில் ரஜினி, கமல் நடித்த ஆரம்பகாலப் படங்களைப் பெரிய திரையில் பார்க்கலாம் என்ற எண்ணம் சிலரது மனதில் இருந்தது.
அதற்கு மாறாக, இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வெளியான அவர்களது படங்கள் மறுவெளியீட்டைக் கண்டன. பாபா, வேட்டையாடு விளையாடு என்று அந்த பட்டியல் மிகப்பெரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.
‘காந்தாரா’ வெற்றியைக் கண்டபிறகு ‘பாபா’வைக் களமிறக்கியது ரஜினி தரப்பு. ‘விக்ரம்’ வெற்றியின் சூட்டோடு கமலின் பழைய படங்களை வெளியிடும் முயற்சிகள் தொடங்கின. கடந்த ஆண்டு மறுவெளியீட்டைக் கண்ட ‘சுப்பிரமணியபுரம்’ படத்திற்குப் பெரும் வரவேற்பைத் தந்தனர் ரசிகர்கள்.
இன்றிருக்கும் ரசிகர்களுக்கும் ‘சிவா மனசுல சக்தி’ பிடித்துப்போகும் என்பது தியேட்டர்களில் ஒலிக்கும் ஆரவாரத்தில் தெளிவாகத் தெரிகிறது.
முத்திரை பதித்த சில காதல் திரைப்படங்கள் காதலர் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மறுவெளியீட்டைக் காணும். கடந்த சில ஆண்டுகளாக, அது ஒரு வணிக உத்தியாக மாறியிருக்கிறது. அந்த வரையறைகளைக் கடந்து, நீண்டகாலமாகச் சென்னையிலுள்ள திரையரங்கொன்றில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வரவேற்பே பல திரைப்படங்கள் மறுவெளியீட்டைக் காண வகை செய்திருக்கிறது. கடந்த வாரம் லிங்குசாமியின் ‘பையா’ வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பில்லா, பருத்தி வீரன், மின்சார கனவு என்று பல திரைப்படங்கள் இந்த வரிசையில் இருக்கின்றன.
தெலுங்கிலும் சில ‘கிளாசிக்’ திரைப்படங்களை மறுவெளியீடு செய்யும் வழக்கம் சில காலமாக நிகழ்ந்து வருகிறது. பவன் கல்யாணின் ‘குஷி’, மகேஷ்பாபுவின் ‘ஒக்கடு’ போன்றவை அப்படிப் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தெலுங்கு மூலமான ‘ஒக்கடு’வைவிட, தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘கில்லி’. மறுவெளியீட்டிலும் அந்த மாயாஜாலம் நிகழும் என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
2004-ம் ஆண்டு ‘கில்லி’ வெளியானபோது, சென்னை உதயம் திரையரங்கில் உள்ள நான்கு திரைகளிலும் தினமும் 5 காட்சிகள் வீதம் ஒரு வார காலம் அப்படம் ‘ஹவுஸ்புல்’லாக ஓடியதாக ஒரு தகவல் உண்டு. தமிழ்நாடு முழுக்க அந்தப் படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்பதற்கான ஒரு சோறு பதம் அது.
அன்று பதின்ம வயதுகளில், நடுத்தர வயதுகளில் இருந்தவர்கள், இன்று இருபதாண்டு காலக் காத்திருப்புடன் மீண்டும் திரையரங்குகளில் திரள்வது நிச்சயம்.
அப்படிப்பட்ட ரசிகர்களின் குழந்தைகளும் கூட விஜய்யை ‘துப்பாக்கி’, ‘தெறி’, ‘பிகில்’ படங்களில் ஆராதனை செய்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் கூட ‘கில்லி’ தரும் திரையரங்க அனுபவம் புதுமையானதாகத்தான் இருக்கும்.
நல்லதொரு கமர்ஷியல் படத்திற்கான ஒரு உதாரணம் ‘கில்லி’. என்னதான் நாயகன், நாயகியை மையப்படுத்தியதாக இருந்தாலும், அந்தப் படத்தில் அனைத்து பாத்திரங்களும் நம் மனதில் தைக்கும்படியாக உருவாக்கப்பட்டிருக்கும்.
திரைக்கதையில் சறுக்கல் என்று எந்த காட்சியையும் சுட்டிக்காட்ட முடியாது. காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், ரொமான்ஸ் என்று ஒரு மசாலா படத்திற்குத் தேவையான அம்சங்கள் சரியான விகிதத்தில் இருக்கும்.
அனைத்துக்கும் மேலாக இளமைத் துடிப்போடு இருக்கிற விஜய் – த்ரிஷா ஜோடியை அதில் நாம் காண முடியும். ’அப்படிப் போடு’ போன்ற ஒரு துள்ளல் பாடலை ரசித்துக் களிக்க முடியும்.
ஏதேனும் ஒரு வகைமை சார்ந்த படங்களே நல்லதொரு அனுபவத்தைத் தரவல்லவை. அனைத்து அம்சங்களும் கலந்த கமர்ஷியல் படங்கள் ‘க்ரிஞ்ச்’தனமானவை என்ற பார்வை பெருகியிருக்கும் சூழலில், ‘அது ஒரு மாயை’ என்று உணர்த்தியிருக்கிறது ‘கில்லி’ பட மறுவெளியீட்டில் நிகழ்ந்திருக்கும் டிக்கெட் விற்பனை. நிச்சயமாக, இது திரைப்பட வர்த்தகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்.
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை விட, இந்த படங்களுக்கான டிக்கெட் விலை குறைவு என்பதும் மக்கள் திரள் பெருகக் காரணமாக உள்ளது.
அது, திரையரங்குகளில் தற்போதிருக்கும் டிக்கெட் விலை குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளிப்பதாகவும் இருக்கிறது. இது போன்று பல ‘ப்ளஸ்’ பாயிண்ட்களை இதில் குறிப்பிடலாம்.
இதனைத் தொடர்ந்து, மேலும் பல ‘கிளாசிக்’ மற்றும் ‘மாஸ்’ தமிழ் திரைப்படங்கள் மறுவெளியீட்டைக் காணலாம். அன்றைய காலகட்டத்தில அவற்றைப் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும், அந்த திரையரங்க அனுபவத்தைப் பெற அது வழி வகுக்கும்.
இது போன்ற வரவேற்பு அவற்றுக்கும் கிடைக்கும் பட்சத்தில், ஒரு திரைப்படம் வெவ்வேறு திரையரங்குகளில் அடுத்தடுத்து திரையிடப்படுவதோ, ‘கிளாசிக்’ படங்களைக் காண்பதற்கென்று சில திரையரங்குகள் தனியாக ஒதுக்கப்படுவதோ நிகழக் கூடும். அது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலக வர்த்தகம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக அமையும்!
-மாபா