ஒவ்வொரு நோயாளிக்கும் மதிப்பளிக்கும் ‘ஹோமியோபதி’!

நோய் என்பது இல்லாவிட்டால் இந்த உலகம் எப்படியிருக்கும்? ஏதேனும் ஒரு நோய் தாக்குதலுக்கு ஆட்படும்போது, இந்த கேள்வி மனதுக்குள் எழாதவரே இருக்க முடியாது என்று சொல்லலாம்.

அந்த நேரத்தில், நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட்டால் போதும் என்பதைத் தவிர வேறு சிந்தனையே இருக்காது. அப்போது, நோய்க்கான சிகிச்சை கூட ஒரு தண்டனையாகத் தெரியும்.

அந்த சிந்தனையே எழாமல் செய்வதுதான் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பு. எந்தவிதப் பக்கவிளைவும் இருக்கக் கூடாது அல்லது மிகக் குறைந்த அளவில் அந்த விளைவு இருக்குமாறு பார்த்துக்கொள்வதே அம்மருத்துவத்தின் அடிப்படை.

ஹோமியோபதியின் வேர்!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஹானிமேன் எனும் மருத்துவரே ஹோமியோபதி மருத்துவமுறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார். 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

கிரேக்க நாட்டின் மருத்துவ அறிஞர் ஹிப்போகிரேட்டஸ் வரிசையில், ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபட்ட மருத்துவ சிகிச்சை தேவை எனும் சிந்தனை கொண்டவர் ஹானிமேன்.

ஒருவரது நோய், அது அவரது உடலைப் பாதிக்கும் விதம், அவரது முன்னோர்கள் எதிர்கொண்ட நோய்க்கூறுகள், அவரது வாழ்க்கைச் சூழல் மற்றும் மனநிலை உள்ளிட்டவற்றைச் சார்ந்து சிகிச்சை முறைகள் அமைய வேண்டும் என்று கருதியவர் ஹிப்போகிரேட்டஸ்.

அதே பாணியைத் தனது வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து பின்பற்றத் தொடங்கியவர் ஹானிமேன்.

பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் நோய்கள் கடுமையாகப் பரவின; அதற்கான சிகிச்சை முறைகள் கொஞ்சம் கொடூரமானவையாக இருந்தன. சுத்தமான சூழல் என்பதே அரிதாகிப்போன வேளை அது.

அந்த நேரத்தில் நவீன மருத்துவத்தின் போக்கு பிடிக்காமல், புதிதாக ஒரு முறையினைக் கைக்கொண்டால் நல்லது என்று கருதினார் ஹானிமேன்.

அது மட்டுமல்லாமல் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் கடுமையான தன்மை அவரை வெகுவாகப் பாதித்தது.

அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் மருத்துவத் துறையில் இருந்து விலகி மொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர் ஹானிமேன்.

ஒருமுறை மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படும் குயினைன் பற்றிய ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அந்த மருந்தின் பக்கவிளைவுகள் கடுமையாக இருந்ததை உணர்ந்தார்.

அதன் விளைவுகளை முழுமையாக அறியும் நோக்கில், தனது உடலில் அந்த மருந்தைச் செலுத்திக் கொண்டார். அப்போது, மருந்தை உடலுக்குள் செலுத்திய பிறகு மலேரியா நோய் அறிகுறிகள் தெரிவதைக் கண்டார் ஹானிமேன்.

அவருக்கு அம்முடிவு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பல முறை சோதித்துப் பார்த்தபிறகு, அதனை அவர் உறுதி செய்தார்.  

‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போன்ற ஒரு சிந்தனை அவருக்குள் பிறந்தது.

அதன் விளைவாக, குறிப்பிட்ட மருந்தை வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு மனிதர்களுக்குச் செலுத்தி அவர் பரிசோதனைகள் மேற்கொண்டார்.

அதன் விளைவாக, ஒருவரது நோய் தாக்குதலுக்குத் தீர்வு காண வெறுமனே மருந்துகள் மட்டுமே போதாது என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரு நோயாளியின் விருப்பு, வெறுப்பு, நோய் அறிகுறிகளின் தன்மை, பொருத்தமான மருந்து, அவற்றின் அளவு, நோய் தாக்குதலால் ஏற்பட்ட மனநிலை என்று பலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

நோய் அறிகுறிகளை முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று பிரித்தார் ஹானிமேன்.

அவற்றில் முதல் நிலை மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு ஒரேமாதிரியானதாக அமையும் என்பதையும் கண்டறிந்தார்.

அவற்றின் வழியே, அவர் மருந்துக்கான வரைபடத்தை உருவாக்கினார். அதுவே, இன்று ஹோமியோபதி மருத்துவ முறையில் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்புகள் பல!

கிரேக்க மொழியில் ஹோமியோ என்றால் ‘அது போன்ற’ என்றும், பதி என்றால் ‘நோய் அல்லது பாதிப்பு’ என்றும் அர்த்தம். குறிப்பிட்ட பாதிப்பைப் போன்றிருக்கும் என்பதை அளவுகோலாக வைத்து, அதற்கான தீர்வை முன்வைப்பதே இம்மருத்துவத்தின் அடிப்படை.

ஹோமியோபதி மருத்துவ முறையில் மருந்துகளால் பக்கவிளைவுகள் அதிகம் இருக்காது என்பது முதல் சிறப்பு.

அறுவை சிகிச்சையோ, கடுமையான மருந்துகளோ இதில் பயன்படுத்தப்படுவதில்லை.

அதேபோன்று, ஒவ்வொரு மனிதரிலும் நோய்க்கூறுகளைக் குணப்படுத்தும் தன்மை உண்டு என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது இம்மருத்துவ முறை.

மிக முக்கியமாக, நீர்ம முறையில் மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலமாக நோய்க்கான தீர்வு விரைவில் அமையும் என்பதையும் செயல்படுத்துகிறது.

இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்று பயன்பாட்டில் உள்ள முக்கிய மாற்று மருத்துவமுறைகளில் ஒன்றாக விளங்குகிறது ஹோமியோபதி.

உலகம் முழுக்கவிருக்கும் ஹோமியோபதி மருத்துவர்களின் சேவையைக் கொண்டாடும் விதமாகவும், அதனைப் பலர் அறிந்து பயன்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதியன்று ‘உலக ஹோமியோபதி தினம்’ கொண்டாடப்படுகிறது.

ஹோமியோபதியின் தந்தை என்று போற்றப்படும் சாமுவேல் ஹானிமேன் பிறந்த தினமும் இதுவே.

நோயாளியின் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை அகற்றுவதிலும், நோயின் மூலக்காரணத்தை அறிவதிலும் ஆர்வம் காட்டவல்லது ஹோமியோபதி மருத்துவ முறை.

நோயைக் குணப்படுத்தும் வல்லமை தன்னியல்பாகச் செயல்படுவதை ஊக்குவிக்கவல்லது.

அது மட்டுமல்லாமல் பக்கவிளைவற்ற மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்கக் கூடியது. அது குறித்த புரிதலைப் பரவலாக ஏற்படுத்துவது மூலமாகப் பலரும் ஹோமியோபதியைப் பயன்படுத்தலாம் என்பதே இத்தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம்.

வாருங்கள், நம்முடைய அல்லது நம்மைச் சார்ந்தவர்களின் நோய் பாதிப்புகளுக்குத் தீர்வு காண ஹோமியோபதி மருத்துவ முறையைப் பயன்படுத்துவோம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like