இரண்டரை மணி நேரம் ஓடும் திரைப்படமொன்றைச் சுவாரஸ்யமானதாக மாற்ற, கதையில் திருப்பத்தை உருவாக்கும் நான்கைந்து காட்சிகள் போதும்.
சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் மனவோட்டம், இயல்பு, அவற்றுக்கு இடையேயான முரண் என்று கதையை நகர்த்தத் தேவையான விஷயங்களை மற்ற காட்சிகளில் நிறைத்தாலே செறிவானதொரு திரைப்பட அனுபவத்தைப் பெறலாம்.
அதனைப் பாலபாடமாகக் கொண்டு குறிப்பிட்ட பகுதியின், அங்குள்ள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படங்கள் மிகப்பெரிய கவனிப்பைப் பெற்று வருகின்றன.
அது போன்றதொரு அனுபவத்தை நமக்கு வழங்குகிறது ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில், பி.வி.ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கள்வன்’.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கதையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது எனும் நிகழ்வு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சரி, இப்படம் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறதா?
நாயகனின் குயுக்தி!
சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஒரு மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கெம்பராஜு (ஜி.வி.பிரகாஷ்குமார்) மற்றும் சூரி (தீனா). ஆதரவற்ற இவர்களை வளர்த்து ஆளாக்கியவர்கள் இறந்துபோக, பதின்ம வயதில் இஷ்டம் போல ஒரு வாழ்வை இருவரும் வாழத் தொடங்குகின்றனர்.
ஆள் இல்லாத வீடுகளில் திருடுவது, அந்தப் பணத்தை ஜாலியாக செலவு செய்வது என்றிருக்கின்றனர். ஒருகட்டத்தில் அதுவே இவர்களது வாழ்க்கை என்றாகிறது.
சுற்றுவட்டாரம் முழுக்க வனத்துறை பணியாளர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச மரியாதையைப் பார்த்து வளர்ந்தவர் கெம்பராஜு.
அதனால், அவர்களைப் போன்றே தானும் பணியாற்ற வேண்டுமென்பதை அவர் இலக்காகக் கொள்கிறார். அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்.
அப்போது, சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டினால் மட்டுமே அந்த வேலை கிடைக்கும் என்று கெம்பராஜுவுக்குத் தெரிந்த நபர் ஒருவர் சொல்கிறார்.
தன்னை நம்பி யார் அவ்வளவு பணத்தைக் கடன் கொடுப்பார்கள் என்று அந்த ஆசையை அவர் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறார் .
இதற்கிடையே, அருகிலுள்ள கிராமமொன்றில் கெம்பராஜுவும் சூரியும் திருடச் செல்கின்றனர். அப்போது பாலாமணி (இவானா) என்ற இளம்பெண்ணைச் சந்திக்கின்றனர்.
நர்ஸிங் கல்லூரியொன்றில் படித்து வருகிறார் பாலாமணி. முதல் பார்வையிலேயே அவர் மீது காதலில் விழுகிறார் கெம்பராஜு. அந்தக் கணம் முதல் அவர் பின்னாலேயே சுற்றுகிறார்.
ஒருமுறை முதியோர் இல்லமொன்றில் நடைபெறும் மருத்துவ முகாமுக்குச் செல்கிறார் பாலாமணி. விவரம் அறிந்து, அங்கே நடைபெறும் ‘பெயிண்டிங்’ வேலையில் சேர்கிறார் கெம்பராஜு.
அந்த நேரத்தில், பாலாமணியின் மனதைக் கவர்கிறார் அங்கிருக்கும் ஒரு முதியவர் (பாரதிராஜா). அவர் யாரோடும் சகஜமாகப் பேசுவதில்லை.
ஆனால் சூரியும் கெம்பராஜுவும் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியதும் அவரது கலகலப்பான குணம் வெளியே தெரிய வருகிறது.
அந்த இல்லத்தில் முதியவர்களைச் சிலர் தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர் சிலர். அதனைக் காணும் கெம்பராஜு, அவரைத் தங்களோடு கூட்டிப் போக முயற்சிக்கிறார்.
அதுவரை பாலாமணியின் மனதைக் கவர்வதற்காகவே அந்த முதியவரை கெம்பராஜு அழைத்து வருவதாக எண்ணுகிறார் சூரி.
மாறாக, காட்டுப்பகுதியில் யானைகள் தாக்கி உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையை மனதில் வைத்தே அவர் அந்த காரியத்தைச் செய்திருப்பதை அறிந்ததும் அதிர்கிறார்.
கெம்பராஜுவின் குயுக்திக்குப் பலன் கிடைத்ததா? அந்த பெரியவர் காட்டு யானைகளின் பிடியில் சிக்கினாரா? அந்தச் சதியை பாலாமணி அறிந்தாரா? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
கூடவே, கெம்பராஜுவுக்கும் பாலாமணிக்கும் காதல் மலர்ந்ததா என்பதையும் சொல்கிறது.
நேர்த்தியான காட்சியாக்கம்!
‘திருடா திருடி’ தனுஷ் போல, நடிக்க வந்த புதிதில் தனக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து வந்த ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது எதிர்மறைத்தன்மை அதிகமிருக்கும் கதைகளில் மட்டுமே அதிகமாக ஈடுபாடு காட்டுகிறார். அதிலொன்றாக அமைந்துள்ளது ‘கள்வன்’.
சாதாரண இளைஞனுக்கு உரிய குணாதிசயங்களோடு, தான் விரும்பிய வாழ்வைப் பெறுவதற்காகச் சதிகளில் கமுக்கமாக ஈடுபடும் ஒருவனைக் கண்ணில் காட்டிய வகையில் நம்மைக் கவர்கிறது அவரது நடிப்பு.
நாயகியாக வரும் இவானா, சிறு கிராமமொன்றில் இருக்கும் கல்லூரி மாணவியாகவே திரையில் தெரிகிறார். சில இடங்களில் மட்டும் அவரது ‘எக்ஸ்பிரஷன்’கள் பெருநகரத்தில் இருக்கும் கான்வெண்ட் மாணவியைப் போலிருக்கிறது.
இந்தப் படத்தின் முதல் பாதியில் மிகச்சில நிமிடங்களே இடம்பெறுகிறது பாரதிராஜாவின் இருப்பு. அதனை ஈடு செய்யும் வகையில் இரண்டாம் பாதி முழுக்க அவரது ராஜ்ஜியம் தான்.
ஆனால், அவரது தளர்ந்த முகமும் உடலும் திரையில் தோன்றும் இடங்கள், அப்பாத்திரத்துடன் ஒன்றவிடாமல் தடுப்புச்சுவரை எழுப்புகின்றன.
கேபிஒய் தீனா படம் முழுக்க ஜி.வி.பிரகாஷோடு பயணித்திருக்கிறார். கிளைமேக்ஸில் அவருக்கும் பாரதிராஜாவுக்குமான காட்சிகளைத் திரையில் காட்டாமல் விட்டிருக்கிறது படக்குழு.
அப்படியிருந்தும், படம் முழுக்க ஒரு முக்கியமான கதாபாத்திரம் என உணர வைத்த வகையில் ஈர்க்கும்படியாக உள்ளது அவரது நடிப்பு.
பேராசிரியர் ஞானசம்பந்தன் இதில் இவானாவின் தந்தையாக நடித்துள்ளார். அவரது நகைச்சுவை பேச்சை, நடிப்பை சிலாகிக்கும்படியான காட்சிகள் இதில் இல்லை.
ஊர் தலைவராக வரும் வினோத் முன்னா சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக வரும் நக்கலைட்ஸ் தனம் இரண்டொரு காட்சிகளில் கிச்சுகிச்சு மூட்டிவிட்டு காணாமல் போகிறார்.
போலவே, நாயகனின் கிராமத்தைச் சேர்ந்தவர்களாக வரும் சில பாத்திரங்களும் கூட அதே மாதிரியான அனுபவத்தைத் தருகின்றன.
சான் லோகேஷ் படத்தொகுப்பினைக் கையாண்டிருக்கிறார். முதல் பாதியைச் செறிவுடன் தந்தவர், பின்பாதியில் உணர்ச்சிகரமான காட்சிகளை எந்தளவுக்குக் காட்டுவது என்பதில் சற்றே தடுமாறியிருக்கிறார்.
யானை சேதப்படுத்திய இடங்களைக் காட்டுமிடங்களில் மிளிர்கிறது என்.கே.ராகுலின் கலை வடிவமைப்பு. போலவே, நாயகனின் குடிசையைக் காட்சிக்கேற்ற வகையில் காட்டியிருக்கிறது.
சவுண்ட் எபெக்ட்ஸ், சண்டைக்காட்சி வடிவமைப்பு, நிறக்கலவை போன்றவை காட்சியாக்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ஆடை வடிவமைப்பைக் கையாண்டவர், திரையில் கதாபாத்திரங்கள் உடுத்தும் ஆடைகள் தனியாகத் தெரியக்கூடாது என்பதில் மெனக்கெட்டிருப்பது அருமை.
மேற்குதொடர்ச்சி மலையோரக் கிராமம் சார்ந்த வாழ்வியலை முன்வைக்கும் காட்சிகளுக்கு உயிர் தந்திருக்கிறது ரேவாவின் நாட்டுப்புறத் தாக்கம் கொண்ட பின்னணி இசை.
கடைசி அரை மணி நேரக் காட்சிகளில் பதைபதைப்பை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் காதில் எளிதாக நுழையும்படியாக ஒலிக்கின்றன. பொருத்தமான காட்சியாக்கத்தை அவை பெற்றிருக்கின்றன.
இயக்குனர் பி.வி.ஷங்கர் இப்படத்தின் ஒளிப்பதிவையும் கையாண்டிருக்கிறார். அதனால், ஒட்டுமொத்தமாக அவரது மனக்கண்ணில் கண்ட ஒரு படைப்புக்கு உயிர் தந்திருக்கிறார்.
இயக்குனர் உடன் இணைந்து கதை, திரைக்கதையை ஆக்கியிருக்கிறார் ரமேஷ் ஐயப்பன். எஸ்.ஜே.அர்ஜுன், சிவகுமார் முருகேசன் ஆகியோரும் அக்குழுவில் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர்.
பி.வி.ஷங்கர், ரமேஷ் ஐயப்பன், ராஜேஷ் கண்ணா ஆகியோரது கைவண்ணத்தில் இதன் வசனங்கள் அமைந்துள்ளன.
இந்தப் படத்தில் யானைகள் இடம்பெறும் பகுதி மிகக்குறைவு என்றபோதும், அக்காட்சிகள் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் உறுதி காட்டியிருக்கிறார் இயக்குனர். அதுவே இப்படத்தின் ஆக்கம் நீண்டகாலத்தையும் பெருமளவு உழைப்பையும் எடுத்துக்கொள்ளக் காரணமாயிருக்கிறது.
வழக்கத்திற்கு மாறானது!
’கள்வன்’ படத்தில் இடைவேளைக்கு முந்தைய பகுதி ஒருவிதமான அனுபவத்தைத் தருகிறது என்றால், பின்பாதி அதற்கு மாறானதொரு அனுபவத்தை ஊட்டுகிறது.
இடையிடையே சின்னச் சின்னதாய் சில திருப்பங்களைத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். பாரதிராஜா பாத்திரத்தின் சர்க்கஸ் பின்னணியும் அவற்றில் ஒன்று.
சர்க்கஸ் தொழிலை இயக்குனர் ஆதரிக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்குமிடம் இப்படம் பேசும் அரசியலை உணர்த்துகிறது.
வனப்பகுதியை ஆக்கிரமித்து விளைநிலங்கள் ஆக்குவது தவறு என்பதை வசனங்களில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பி.வி.ஷங்கர். யானை தாக்கி மனிதர்கள் மரணமடைவதையும், அதற்கு அரசு நிவாரணத்தொகை வழங்குவதையும் விமர்சிக்கிறது இக்கதை.
அதன் பின்னணியில் கானுயிர்கள் மீதான அக்கறையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆவேசமும் தென்படுகின்றன.
அதேநேரத்தில், நேரடியாக அதனைக் குறிக்கும்விதமான வசனங்களோ, காட்சிகளோ இதில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
பின்பாதியில் ஜி.வி.பிரகாஷ், தீனா பாத்திரங்கள் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசுவது ஒருகட்டத்தில் நமக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது.
அதனை ஈடு செய்யும்விதமாக, பாரதிராஜா பாத்திரம் ஊர்க்காரர்களிடம் நெருக்கத்தைப் பெறும்விதமாகச் சில காட்சிகளை வடிவமைத்திருக்கிறது திரைக்கதை குழு.
இப்படத்தின் போஸ்டர் டிசைன்களை பார்த்தவுடன், ‘காந்தாரா’ போன்றதொரு பிரமிக்கத்தக்க அனுபவம் காணக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், அப்படியொரு பிரமாண்டம் இதில் கிடைக்கவில்லை. மாறாக, சில எளிய மனிதர்களைக் காட்டும் சிறுகதையாகத் திரையில் மலர்ந்திருக்கிறது.
நிச்சயமாக ‘கள்வன்’ வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தரும் படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்படும்!
– உதய் பாடகலிங்கம்