ஆங்கிலத்தில் வெளியான ‘வைல்டு திங்க்ஸ்’ சீரிஸ் திரைப்படங்கள் குறிப்பிட்ட சில ரசிகர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். அதேபாணியில் உலகம் முழுக்கப் பல படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
காதல், காமெடி என்று செல்லும் திரைக்கதையின் ஊடே திடீரென்று சில ஆச்சர்யமான, அதிர்ச்சியான திருப்பங்களைக் காட்டி, இறுதியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான ஒரு முடிவைக் கொண்டிருக்கும் அப்படங்கள்.
பெண் பாத்திரங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றுவதும், பாலியல் உறவைச் சொல்லும் வசனங்களும் அப்படத்தில் பிரதானமாக இருக்கும்.
அந்த வகையில், 2022இல் தெலுங்கில் வெளியான ‘டிஜே டில்லு’ ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது.
அலட்சியமும் அப்பாவித்தனமும் கலந்த ஒரு ஸ்டைலிஷ் இளைஞனாக, அதில் இருந்த டிஜே டில்லு என்ற பாலகங்காதர திலக் பாத்திரம் அமைந்திருந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘டில்லு ஸ்கொயர்’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இதுவும் முதல் பாகம் போன்றே அமைந்திருக்கிறதா?
தட்டையான கதை!
டில்லு ஈவெண்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் டிஜே டில்லுவுக்கு (சித்து ஜோனலகடா) ‘டிஜே பணிக்காக 25 லட்சம் ரூபாய் மொத்தமாகத் தருகிறேன்’ என்று சொல்கிறார் ஷெய்க் மெகபூப் எனும் நபர்.
அவர் யார் என்று தெரியாமல் மொபைலில் கேட்கும் அவரது குரலைக் கேட்டு, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சம்மதிக்கிறார் டில்லு.
திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று வைராக்கியம் கொண்டிருக்கும் டில்லுவுக்கு டிஸ்கோ பப்களுக்கு செல்வதே முக்கியப் பொழுதுபோக்கு. ஒருநாள், அப்படிச் செல்கையில் லில்லி (அனுபமா பரமேஸ்வரன்) எனும் பெண்ணைச் சந்திக்கிறார். முதல் பார்வையிலேயே, அவர் மீது காதல் கொள்கிறார்.
அன்றைய தினமே அவர்களது உறவு அந்தரங்க எல்லைகளைத் தாண்டுகிறது. ஆனால், அடுத்த நாள் காலையில் லில்லி காணாமல் போகிறார். அவரைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மாத காலமாகத் தேடுகிறார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
ஒருநாள் டில்லு தனது தாய் தந்தையுடன் ஒரு மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு மீண்டும் லில்லியைச் சந்திக்கிறார். அப்போது தான் கர்ப்பமுற்றிருப்பதாகச் சொல்கிறார் லில்லி.
அதனைக் கேட்டதுமே, ‘நீதான் எங்கள் வீட்டு மருமகள்’ என்று டில்லுவின் பெற்றோர் சொல்லிவிடுகின்றனர்.
முதலில் லில்லியைக் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர்க்க முனையும் டில்லு, ஒருகட்டத்தில் ‘ஓகே’ என்கிறார். அவரோடு காதலாகிக் கசிந்துருகத் தயார் ஆகிறார்.
இந்த நிலையில், ஒரு கும்பல் டில்லுவைக் கடத்துகிறது. துப்பாக்கியுடன் களமிறங்கி அவர்களைப் பந்தாடுகிறார் லில்லி.
அப்போதுதான், அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது தெரிய வருகிறது.
கூடவே, இந்திய அரசால் தேடப்படும் கேங்க்ஸ்டர் ஷெய்க் மெகபூப்பைக் கொலை செய்யும் ஆபரேஷனில் டில்லுவை ஈடுபடுத்தும் வகையில், அவரைக் காதலிப்பதாக ஏமாற்றிய விஷயம் வெளிவருகிறது.
அதனை என்னால் செய்ய முடியாது என்று டில்லு சொல்ல, ராதிகா எனும் பெண்ணின் காதலரைக் கொலை செய்வதற்கு அவர் உடந்தையாக இருந்ததற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகச் சொல்லி மிரட்டுகிறார் லில்லி (இது எப்போ நடந்தது என்று கேள்வி கேட்காமல்,
இப்படத்தின் முதல் பாகமான ‘டிஜே டில்லு’வை பார்த்தால் அதற்குப் பதில் கிடைக்கும்). வேறு வழியில்லாமல் அவர் சொல்வதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார் டில்லு.
கடைசி நேரத்தில் ஏதாவது செய்து லில்லி சார்ந்த சிறப்பு காவல் படையினரிடம் இருந்தும் ஷெய்க் மெகபூப்பின் கழுகுப் பார்வையில் இருந்தும் தப்பிக்க முயற்சிக்கிறார் டில்லு. அப்போதுதான், உண்மையில் தன்னைச் சுற்றி நடப்பது என்ன என்று அவர் அறிகிறார். அதோடு இப்படம் முடிவடைகிறது.
இந்தக் கதையில் முதல் பாகத்தில் பிரதானமாக இடம்பெற்ற ராதிகா (நேஹா ஷெட்டி), ஷேனோன் (பிரின்ஸ் சிசில்) ஆகியோரும் வந்து போகின்றனர்.
இந்த ராதிகா செய்த கொலையை மறைக்க டில்லு உதவப்போக, அப்போது சிலரது மிரட்டல்களில் இருந்து தப்பிக்க ஷேனோனிடம் இருந்து இரண்டு கோடி ரூபாயை லவட்டி விடுவார் டில்லு. அந்தப் பணத்திற்கும் ஷெய்க் மெகபூப்புக்குமான தொடர்பைப் பேசுகிறது இப்படம்.
இது போன்ற காரணங்களே முதல் பாகம் பார்த்தால் மட்டுமே இப்படம் புரியும் என்ற நிலைமைக்கு நம்மை ஆளாக்கிவிடுகிறது.
அதேநேரத்தில் காதல், ஏமாற்றம், துரோகம் என்று சின்னச் சின்னதாக திருப்பங்களைக் கொண்டிருப்பதால் இக்கதை ரசிகர்களுக்குத் தட்டையாகத் தென்படவும் வாய்ப்புகள் அதிகம்.
கொஞ்சமாய் சில வித்தியாசங்கள்!
இந்தப் படத்தின் எழுத்தாக்கத்தில் பங்கேற்றிருப்பதோடு, தனக்கென்று ஒரு வித்தியாசமான பாத்திரத்தையும் ஆக்கியிருக்கிறார் சித்து ஜோனலகடா.
விதவிதமான வகைமையில் அதற்கேற்ப கதைகளை யோசிக்க முடியும் என்றபோதும், முதல் பாகத்தின் சாயலிலேயே இதனைத் தந்திருக்கிறார். படம் முழுக்க அவரது இருப்பே வியாபித்திருக்கிறது. அதுவே அவரது நடிப்பின் உயரத்தைப் பறைசாற்றிவிடும்.
அனுபமா பரமேஸ்வரன் இதில் கவர்ச்சித் தாரகையாகத் தோன்றியிருக்கிறார்.
‘பிரேமம் படத்தில் ஹோம்லியாக வந்தவரா இவர்’ என்று கேட்குமளவுக்கு அமைந்துள்ளது அவரது கவர்ச்சி அவதாரம்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து முரளி சர்மா, முரளிதர் கவுட், பிரனீத் ரெட்டி மற்றும் நேகா, பிரம்மாஜி, பிரின்ஸ் சிசில் உட்படப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
ராம் மரியாலா, அச்சு ராஜாமணி இசையில் பாடல்கள் வசீகரிக்கின்றன.
பின்னணி இசை தந்துள்ள பீம்ஸ் சிசிரோலியோவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பது அவரது கைவண்ணத்தில் நன்கு தெரிய வருகிறது.
ஒளிப்பதிவாளர் சாய் பிரகாஷ் உம்மடிசிங்குவின் கைவண்ணத்தில் பெரும்பாலான பிரேம்கள் ‘கலர்ஃபுல்’ ஆக உள்ளன. கலை இயக்குனர் ஏ.எஸ்.பிரகாஷ் அதற்கேற்றவாறு ஒவ்வொரு காட்சியிலும் ‘செட்’களை அமைத்திருக்கிறார்.
நாயகன் உட்பட அனைத்து பாத்திரங்களும் பேசும் நகைச்சுவை வசனங்களுக்கு இடம்விட்டு காட்சிகளை அடுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி. அதேநேரத்தில் மொத்தப் படமும் சட்டென்று நகரும் வகையில் சில காட்சிகளை ‘கூர்மையாக’ நறுக்கியிருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனத்தில் சித்து ஜோனலகடா உடன் இணைந்து பங்களித்திருக்கிறார் ரவி ஆண்டனி.
‘டிஜே டில்லு’ எனும் பாத்திரத்தைக் கொண்டு இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு இந்த இணை இதில் ஒரு ‘பார்முலா’வை வடிவமைத்திருப்பது அருமை.
அதில் கொஞ்சமாய் சில வித்தியாசங்களும் உண்டு என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.
இரண்டு மடங்கு உற்சாகம்!
‘டில்லு ஸ்கொயர்’ படத்தின் காட்சியாக்கமும் சரி, அதில் நிறைந்திருக்கும் நாயக பாத்திரத்தின் வார்ப்பும் சரி, அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே!
அனுபமா – சித்து சம்பந்தப்பட்ட காட்சிகள் இளமை முறுக்கோடு இருக்கும் என்பதால் குடும்பமாகச் சேர்ந்து தியேட்டருக்குள் நுழைபவர்கள் இருக்கையில் உட்கார முடியாமல் நெளிய வேண்டியிருக்கும். அதேநேரத்தில், ’அதுதானே இந்த படத்தோட யுஎஸ்பி’ என்று கூக்குரலிடுபவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடித்துப் போகும்.
சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தைப் பார்ப்பவர்கள், ‘இதில் என்ன இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பக்கூடும். அதற்கான அனேக வாய்ப்புகள் இதில் நிறைந்திருக்கின்றன.
அதேநேரத்தில் தற்போதைய இளம்பெண்கள், ஆண்களின் ‘நுகர்வு’க் கலாசாரத்திற்குத் தீனியிடும் திரைக்கதை அவர்களுக்குத் திருப்தியளிக்கலாம்.
அனுபமாவின் கவர்ச்சியான தோற்றமும் நடிப்பும் சில ரசிகர்களிடம் இரண்டு மடங்கு உற்சாகத்தை விதைக்கலாம். அது நிகழ்ந்திருக்கிறது என்பதை முதல் மூன்று நாட்களில் இப்படம் செய்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நிரூபிக்கிறது.
கமர்ஷியல் திரைக்கதைக்கான லாஜிக் கேள்விகளோடு ரசிகர்கள் இப்படத்தைப் பிரித்து மேயலாம். அதற்கு நிறையவே வாய்ப்புகளைத் தருகிறது ‘டில்லு ஸ்கொயர்’.
அதேநேரத்தில், அதனை மறக்கடிக்கும் அளவுக்கு மிகச்சில கதாபாத்திரங்களுடன் நல்லதொரு பொழுதுபோக்கினையும் வழங்குகிறது. அது போதும் என்பவர்கள் மட்டுமே ‘டில்லு ஸ்கொயர்’ படத்தினை ரசிக்கலாம்!
– உதய் பாடகலிங்கம்