மனதை நனைய வைக்கும் மழைப் பாடல்கள்!

தமிழ் சினிமாவில் மழைப் பாடல்களைத் திரட்டினால் கடல் கொள்ளுமளவுக்கு ரசித்து எழுதலாம்.

தாழ்வாரத்தின் முகட்டில் தேங்கி நின்ற மழைக் குழம்பு மெல்ல மெல்ல ஒவ்வொரு சொட்டுச் சொட்டாய்த் தரையில் தெறிக்குமாற் போல ஒலிக்கும் அந்த ஆரம்ப இசையே மழைக்காலக் கதகதப்போடு இந்தவகையான பாடல்களை அணுக வைக்கும்.

மழைக்கு மட்டும் அப்படியொரு சிறப்பு, வானத்தில் இருந்து ஒரே மாதிரியாக விழுந்தாலும் அது நம்மை நனைக்கும் போதும், சூழவும் உள்ள சடப் பொருட்களில் தேங்கி வழியும் போதும் ஒரு அழகியலை உண்டு பண்ணிவிடும்.

இந்த மாதிரியான பாடல்களை வானொலியில் கேட்டுக் கிறங்கிய காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிலும் இசைஞானி இளையராஜாவிடம் ரஹ்மான் வாத்தியக்காரராக இருந்த சமயம் புன்னகை மன்னனில் வரும் “வான் மேகம் பூப் பூவாய்த் தூவும்” பாடலின் ஆரம்பத்திலும் மழைத் துளி ஓசை ஒலிக்கும். அது இன்னோர் வேகத்தில் போகும்.

“சின்னச் சின்னத் தூறல் என்ன” செந்தமிழ்ப் பாட்டில் மெல்லிசை மன்னரும், இசைஞானியாரும் வார்த்த இசையில் சாரலடிக்கும் மழையின் இன்பம் இசையில் இருக்கும்.

“என் மேல் விழுந்த மழைத்துளியே” முதல் சரணத்துக்கு முந்திய இடையிசையும் மழைத் துளிகள் போலத்தான் முடிவுறும்.

தன்னுடைய முதல் ஆண்டுகளில் அத்தனை சாகித்தியங்களையும் கொட்டித் தீர்த்திருப்பார் ரஹ்மான்.

என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…..

அமைதியாகத் தூறல் போடும் மழை போலத் தான் இந்தப் பாட்டும். அதனாலோ என்னமோ ஜெயச்சந்திரனும், சித்ராவும் பாடும்போது அந்தத் தூறல் தரும் இன்பத்தோடு நோகாமல் வரிகளை வழிந்தோட விடுகிறார்கள்.

ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து வாரியணைத்து இசையோடு கேட்கும் போதெல்லாம் அந்த வரிகள் வழுக்கிக் கொண்டே போகுமாற் போலொரு உணர்வு.

உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன் காலத்தில் எப்படி ஜெயச்சந்திரனை ரஹ்மான் நினைவில் வைத்துத் தேர்ந்தெடுத்தார் என்றோர் ஆச்சரியம் அடிக்கடி எழும். ஆனால் அதற்கு முழுமையான பாத்தியத்தையையும் காட்டி விடுவார் ஜெயேட்டன்.

“என் மேல் விழுந்ந்ந்த… மழைத்துளியே” என்று வழிந்தோடும் நீட்சியாக சித்ரா கூட கொஞ்சம் ஒரு சிட்டிகை அதிகப்படியாகவே ஆலாபனை கொடுத்து வரிகளில் நளினம் கற்பிக்கும்போது, ஜெயச்சந்திரனோ அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மழை கூடிக் குறையாமல் பெய்யுதா? என்னுமாற் போல ஒரே சீராகச் சங்கதிகளைக் கொடுத்துக் கொண்டே போவார்.

இங்கே அனுபவப்பட்ட ஒரு பாடகர் வரிகளைத் தக்க சமயத்தில் உயிர்ப்பித்து விடுவார் என்ற உண்மையைக் காட்டுவார்,

“உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்” –வரிகளில் மிதக்கும்போது, அங்கே உடம்பில் உறைகின்ற ஓருயிர் எனும்போது ஒரு சிலிர்ப்பைக் காட்டித் தணிந்து மேலெழுவார்.

அது போலவே, “இமையைத் திறந்தால் நீயிருப்பாய்” கணங்களில் புருவங்கள் விரிந்து இமைகளுக்கு வழி விடுமாற் போல.

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆகிடுமோ…

நன்றி: முகநூல் பதிவு

You might also like