முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாறான ‘அக்னிச் சிறகுகள்’ நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எனது சிறுவயதில் ராமேஸ்வரம் கடற்கரையில் விளையாடும் போது வானத்தில் பறக்கும் விமானத்தைக் காட்டி, நானும் விமானியாகி இதுபோல விமானத்தை ஓட்டி வருவேன் பாருங்கள் என்று நண்பர்களிடம் பலமுறை கூறியுள்ளேன்.
நான் படித்து முடித்ததும் பெங்களூருவில் ஆராய்ச்சித் துறையில் வேலை கிடைத்தது; அதைவிட விமானப் படையில் சேர்ந்து விமானியாக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்குத் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.
பல கட்டங்களைத் தாண்டி கடைசியாக இருவரில் ஒருவர் என்ற நிலையில் எனக்குப் பதிலாக எனது போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எத்தனை தடைகளைத் தாண்டிய பின்னரும் தோல்வி அடைந்தோம் என்று விரக்தியில் டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று கங்கையில் மூழ்கி எழுந்தேன்.
எதிரில் ஒரு ஆசிரமம் இருந்தது. நேரே அங்கு சென்றேன். ஆசிரமத்திலிருந்து மிகவும் பிரகாசமாக ஒரு துறவி வந்தார்.
நீ யார் என்று கேட்டார். எனது பெயரைக் கூறினேன். அவரது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. “உனக்குப் பெரிய காரியம் காத்திருக்கிறது” என்று ஆசீர்வதித்தார்.
விரக்தியில் இருந்த எனது மனம் நிறைவடைந்தது. அங்கிருந்து நேரே பெங்களூர் சென்று பணியை ஏற்றுக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அந்தத் துறவி தான் சுவாமி சிவானந்தர்.”
அதன் பிறகு அணு விஞ்ஞானியாகி, ஜனாதிபதியாக அப்துல்கலாம் வந்தது நாம் அறிந்ததே!.
ஜனாதிபதியான பிறகு உலகிலேயே நவீன ரக போர் விமானத்தை ஓட்டிய முதல் ஜனாதிபதி என்ற பெருமைப் பெற்றவர் அப்துல் கலாம்.
சுவாமி சிவானந்தர் குறிப்பிட்டது உண்மையானது அல்லவா அதுதான் தீர்க்க தரிசனம்!.
(ஈரோடு சண்முக சுந்தரம் தொகுத்த இந்து சமய பெருமையயை உலகறியச் செய்த ஆன்றோர்கள் நூலிலிருந்து…)