ஹாட் ஸ்பாட் – சமூகக் கண்ணாடியில் கல்லெறியும் கேள்விகள்!

‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’ படத்தின் தலைப்பு மூலமாகத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் அவரை அறிந்தவர்களுக்கு, அவரது இயக்குனர் அவதாரம் ஆச்சர்யம் அளித்தது.

இரண்டாவதாக இயக்கிய ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் பல வகையில் நம்மைப் பிரமிக்க வைத்தது. ‘அடியே’ படத்தில் அவரது சிந்தனைகள் புதிதாகத் தெரிந்தன. ஆனாலும், கனகச்சிதமான காட்சியாக்கம் அவர் வசப்படவில்லையோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த நிலையில், நான்காவதாக ‘ஹாட் ஸ்பாட்’ படத்தைத் தந்திருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். பாலியல் உறவு சார்ந்த பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசுவதாக அமைந்தது இப்படத்தின் ட்ரெய்லர். அதுவே இதன் மீது கவனக் குவிப்பு நிகழவும் வழி வகுத்தது.

தற்போது ‘ஹாட் ஸ்பாட்’ திரையில் வெளியாகியிருக்கிறது. எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது இப்படம்?

மீண்டும் ஒரு ஆந்தாலஜி!

ஒரு இளம் இயக்குனர் தயாரிப்பாளரிடம் நான்கு கதைகளைச் சொல்லிப் படம் இயக்கும் வாய்ப்பினைப் பெறுவதாகக் காட்டுகிறது ‘ஹாட் ஸ்பாட்’.

அதற்கேற்ப ஹேப்பி மேரீட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம் என்று நான்கு கதைகள் ஆந்தாலஜி வடிவில் இதில் உள்ளன.

ஒரு பெண் திருமணம் முடிந்ததும் ஆண் வீட்டிற்குத்தான் வர வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது முதல் கதை. கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், இந்த சமூகத்தில் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம் சரியா என்ற விவாதத்தை இது முன்வைக்கிறது.

தங்கள் காதலானது கல்யாணக் கட்டத்தை அடையும் என்ற எதிர்பார்ப்புடன் காதலர்கள் இருவரும் தாங்கள் சகோதர சகோதரி உறவு முறையைக் கொண்டவர்கள் எனும் உண்மையை அறிந்தபிறகு என்னவாகின்றனர் என்பதைச் சொல்கிறது இரண்டாவது கதை.

சந்தர்ப்ப சூழ்நிலையால் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார் ஒரு ஆண். அந்த உண்மை அவரது காதலிக்குத் தெரிய வரும்போது என்னவானது என்பதைச் சொல்கிறது மூன்றாவது கதை.

நான்காவது கதையானது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்க வைப்பது குழந்தைத் தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமானதா இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

பாலியல்ரீதியிலான காட்சிகளை, வசனங்களை, கேள்விகளைத் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் குழந்தைகள் பிரதிபலிப்பதையும், அதனைப் பலர் ரசித்துக் கொண்டாடுவதையும் கேள்விக்கு உட்படுத்தி சமூகக் கண்ணாடி மீது கல்லை வீசியிருக்கிறது.

கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் வெளியான ‘புத்தம்புது காலை’ போன்ற ஆந்தாலஜி கதைகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அவற்றைப் போலவே புதிய பரிமாணத்தில் அமைந்துள்ளது ‘ஹாட் ஸ்பாட்’.

வித்தியாசமான பார்வை!

ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், அம்மு அபிராமி, சாண்டி மாஸ்டர், சுபாஷ் செல்வம், ஜனனி, கலையரசன், சோபியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நான்கு ஜோடிகளில் சோபியாவின் நடிப்பும் இருப்பும் சட்டென்று நம்மை ஈர்க்கும்விதமாக உள்ளது. போலவே, ‘யார் இவர்’ என்று கேட்க வைத்திருக்கிறார் சுபாஷ் செல்வம்.

பிரதான பாத்திரங்கள் தவிர்த்துப் பலரும் இதில் சோபிக்கின்றனர். கௌரி கிஷன் தந்தையாக நடித்தவர், சுபாஷ் செல்வத்தின் நண்பராக வந்தவர் மற்றும் பாலியல் தொழில் புரோக்கராக நடித்தவர், கலையரசன் – சோபியா ஜோடியின் குழந்தைகளாக நடித்தவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் முத்தையன், கலை இயக்குனர் சிவசங்கரன் ஆகியோரின் பங்களிப்பு, ஆந்தாலஜி என்பதையும் தாண்டி ஒரு முழுநீளத் திரைப்படம் பார்க்கும் உணர்வை உண்டாக்குகிறது.

வான் இசையமைத்துள்ள ‘ஹேய்.. ஐய்யய்யோ’ மற்றும் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ள ‘உன் முன்னோர்கள் யாருமே முட்டாள்கள் இல்லையே’ பாடல்கள் நம்மைச் சட்டென்று ஈர்க்கின்றன.

அவற்றில் உள்ள இடையிசையே முக்கியமான கட்டங்களில் பின்னணியிலும் ஒலிக்கின்றன.

சமூகத்தில் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிற சில விஷயங்களை இப்படத்தில் உரக்கப் பேசியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

கே.பாலச்சந்தர் தந்த ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அபூர்வ ராகங்கள்’, ருத்ரய்யாவின் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்று எழுபது, எண்பதுகளில் தமிழின் மிக முக்கியமான திரைப்படங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகளுக்கு இணையான பரபரப்பைத் தற்காலத்தில் உருவாக்கியுள்ளது ‘ஹாட் ஸ்பாட்’. அதுவே இயக்குனரின் முயற்சியைக் கவனிக்க வைத்திருக்கிறது.

சில குறைகள், நிறைகள்!

இதற்கு மேல் நாம் பார்க்கப்போகும் சில விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேரும் என்பதால், அதனை விரும்பாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

ஆண் பெண் சமத்துவம் பேசுபவர்களிடமே, ’நீங்கள் அதனை முழுமையாகச் செயல்படுத்துகிறீர்களா’ என்ற கேள்வியை எழுப்புகிறது ‘ஹாட் ஸ்பாட்’. ‘பெமினிஸம் பேசுறவங்க கூட கல்யாணத்துக்குப் பிறகு ஒரு ஆண் வீட்டுக்குத்தானே போறாங்க’ என்பது போன்ற வசனங்கள் அதற்கு உதாரணம்.

சிறிய பட்ஜெட்டில் தயாரான படம் என்பதால், ‘ஹாட் ஸ்பாட்’டில் பெரும்பாலான பிரேம்கள் மிக எளிமையாக அமைந்துள்ளன. அவற்றின் வழியே அற்புதமானதொரு காட்சியாக்கம் மலர்ந்திருப்பது தனிக்கதை.

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கர் ‘ஒரு பெண்ணை இந்தச் சமூகமும் குடும்ப அமைப்பும் எப்படி நடத்துகிறது’ என்று கிளாஸ் எடுப்பது பிரசங்கத் தொனியில் உள்ளது. அது கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆக்குகிறது.

அதேநேரத்தில், ஒரு இளம் தம்பதி இருவரது பெற்றோர் வீட்டிலும் மாறி மாறி வசிக்கலாமே என்று சொன்னது ஒரு புதிய பார்வை.

கூட்டுக் குடும்ப வழக்கத்தை உடைத்து தனிக்குடும்பமாக வசிப்பதும் சில நேரங்களில் சவுகர்யத்தைத் தரும் என்று ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் முன்வைத்ததற்கு ஒப்பானது அந்த யோசனை.

இரண்டாவது கதைக்கான முடிவைப் பார்வையாளர்களிடமே விட்டிருக்கிறார் இயக்குனர். அது ‘எஸ்கேப்பிசம்’ ஆகத் தெரிந்தாலும், சமூகம் வகுத்துள்ள நியதிகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது அந்த உத்தி.

மூன்றாவது கதையும் கூட, பெண்களின் பாலியல் விருப்பங்களை இச்சமூகம் எப்படி நோக்குகிறது என்பதையே பேசுகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு ஆண் தனது தாயும் காதலியும் பாலியல் சுதந்திரம் வேண்டினால் என்ன செய்வான் என்ற கேள்வியை எழுப்பிய வகையில் கவனம் பெறுகிறது.

அதனை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்திய இயக்குனரின் திறமையை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

நான்காவது கதையில் ரியாலிட்டி நிகழ்ச்சி நேரலையில் நாயகன் சில உண்மைகளை உடைப்பது நிச்சயம் யதார்த்தத்தில் சாத்தியமற்ற ஒரு விஷயம். சினிமாவுக்கான சுதந்திரத்தை அந்த இடத்தில் கைக்கொண்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

போலவே, டைட்டில் கிரெடிட் ஓடும்போது திரைப்படம் நிறைவுறுவதாக அமைத்திருப்பது நல்ல உத்தி.

நான்காவது கதையின் உருக்கம் மறைவதற்கு உள்ளாக அது இடம்பெறுவது உறுத்தலாகத் தெரியாத வகையில், சில நொடிகள் திரையில் இருளைப் பரவச் செய்து வெறுமனே வசனங்கள் மூலமாக அக்காட்சியை நகர்த்தியிருப்பது அழகு.

மேற்சொன்னதைப் போல சில குறைகளோடும் நிறைகளோடும் திரையில் மலர்ந்திருக்கிறது ‘ஹாட் ஸ்பாட்’. வழக்கத்திற்கு மாறான கருத்தாக்கத்தையும், காட்சிகளையும் கொண்டிருப்பதே இப்படத்திற்கான யுஎஸ்பி. அதற்காகவே இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் & குழுவை இன்னொரு முறை பாராட்டலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like