சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் பரிமாணங்கள்!

திரைக்கலைஞர் சிவகுமார்

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

இன்று (28.03.2024) காலை சென்னை தி.நகரில் உள்ள திரைக்கலைஞர் சிவகுமார் வீட்டின் மாடியில், அகண்ட திரையில் சிவாஜி கணேசன் என்ற கலைஞரைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் விசேஷக் காணொளி திரையிடப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்த இந்தக் காணொளியில் பேசியிருந்தவர் சிவகுமார்.

தங்குதடையற்ற இடையறாத அருவியைப் போன்ற பேச்சு. மிக எளிய குடும்பத்தில் வி.சி.கணேசனாக அவருடைய பால்ய வயதில் துவங்கி திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அவருடைய இளமைக் காலம், பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிக்கப்போகும்போது கட்டபொம்மு நாடகத்தில் அவருக்குக் கிடைத்த ஆங்கிலச் சிப்பாய் வேடம், பிறகு படிப்படியாக அவர் தரித்த நளினமான பெண் வேடங்கள்.

ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் பார்வையில் பட்டதும் ‘பராசக்தி’ படத்தில் மிக மோசமான புறக்கணிப்புகளுக்கு மத்தியில், கடுமையான சென்சாருக்கு அகப்பட்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையும் உற்சாகத்துடன் சொன்னார்.

கலைஞருக்கும் அன்றைய இளம் சிவாஜி கணேசனுக்கும் இருந்த புரிதலைப் பற்றியும் சொன்னவர், தொடர்ந்து ‘மனோகரா’ படத்தில் நடித்ததைப் பற்றியும் விரிவாகச் சொன்னார்.

சிவாஜி திரையில் பேசிய உணர்ச்சிகரமான வசனங்களை மேடையில் அதே தொணியில் அதேக் குரலில் ஏற்ற இறக்கத்துடன் முகபாவத்தோடு நடித்துக் காட்டினார். கட்டபொம்மன் பட வசனத்தை ஆக்ரோஷமாக தொகுத்துச் சொன்னார். 

அத்திரைப்படத்திற்கு கெய்ரோவில் கிடைத்த அங்கீரகாரத்தைக் குறிப்பிட்டு பெருமைப்பட்டார். இளைஞராக கூரான வசனங்களோடு திரை உலகிற்குள் வந்து, சிவாஜியை இயக்கிய ஸ்ரீதர் என்கின்ற இயக்குநரைப் பற்றிச் சொன்னார். 

பிறகு திரைவாழ்வில் சிவாஜியுடன் தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுவாரஸ்யமாக விவரித்தார்.

‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’ படத்தில் சிவாஜிக்கு மருமகனாக நடித்ததைச் சொன்னவர், கந்தன் கருணை உள்ளிட்ட புராணப் படங்களிலும் சிவாஜியுடன் முருகன் வேடமிட்டு நடித்தபோது தன்னுடைய கால் கட்டைவிரலை அவ்வளவு பெரிய நடிகரான சிவாஜி குனிந்து பல்லால் கடித்ததைப் பற்றியும் வியப்புடன் சொன்னார்.

‘கூண்டுக்கிளி’ படத்தில், எம்ஜிஆருடன் சிவாஜி நடித்தப் பாத்திரத்தின் தன்மையைப் பற்றி விளக்கினார். பல படங்களில் சிவாஜியுடன் நடித்த பத்மினியைப் பற்றி சிவகுமார் குறிப்பிடும்போதெல்லாம் கூட்டத்தில் கைத்தட்டல்கள் பறந்தன. 

நிறைவாக மலேசியாவிற்கு விழா ஒன்றிற்கு சென்றிருந்தபோது, பின் அரங்கில் இருந்த மூன்று திரைகளிலும் மூன்று சிவாஜி படக்காட்சிகள் திரையிடப்பட்டபோது, கூட்டத்தில் பலத்த ஆரவாரம். அதைக்கேட்ட சிவாஜி, “இந்தப் பெருமையோட நா போயிருக்கலாமே..” என்றிருக்கிறார். 

அதற்கு பிறகு தமிழகம் திரும்பிய இரண்டு மாதங்களுக்குள் சிவாஜி மறைந்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தவர், “பல படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிற நான் அவருடைய மகன் மாதிரி. அடுத்தப் பிறவியில் நான் அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும்” என்று சொன்னார்.

சிவாஜி ‘செவாலியே’ விருது வாங்கியதற்காக சென்னையில் நடந்த பாராட்டு விழாவின்போது, தான் பேசிய 12 நிமிடப் பேச்சை மறுபடியும் நினைவுபடுத்தினார்.

சில மகத்தான கலைஞர்களைப் பற்றி மகத்தானபடி சிவகுமார் போன்றவர்கள் நினைவு கூறுவதும், அற்புதமான அனுபவமாகத்தான் இருக்கிறது. 

– யூகி

You might also like