மக்களவைத் தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகி விட்டது. 7 கட்டங்களாக விழாவை நடத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் ஒரே நாளில் நடத்தி முடிக்க தீர்மானித்தது.
அதன்படி அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
1,749 மனுக்கள் தாக்கல்:
தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்களே மனு செய்தனர்.
பங்குனி உத்திரதினமான 25 ஆம் தேதி நல்லநாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள், அன்று போட்டி போட்டு மனு தாக்கல் செய்தார்கள். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது
அண்ணாமலை, தொல்.திருமாவளவன். கிருஷ்ணசாமி, டிடிவி தினகரன், தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட விஐபிக்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தனித்தொகுதியில் 13 பேர் மனு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற 30 ஆம் தேதி கடைசி நாள்.
கைவிரித்த தேர்தல் ஆணையம்:
இந்த தேர்தலில் வைகோவின் மதிமுக திருச்சியில் போட்டியிடுகிறது, தங்களுக்கு பம்பரம் சின்னம் கேட்டு முறையிட்டது.
ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. இதனால் திருச்சியில் போட்டியிடும் தன் மகன் துரை வைகோவுக்கு , புதிய சின்னத்தை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், வைகோ.
இரண்டு தொகுதிகளில் (சிதம்பரம், விழுப்புரம்) களமிறங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தங்களுக்கு பானை சின்னம் கோரி இருந்தது.
அந்த கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதனால் அந்த கட்சி வேறு சின்னத்தை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
39 இடங்களில் தனித்து நிற்கும் அந்த கட்சி கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் கேட்டது.ஆனால் அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டது.
இதனால் நாம் தமிழர் கட்சி, நீதி மன்றத்தை நாடியது. சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. இதனால் அந்த கட்சிக்கு, தேர்தல் ஆணையம் ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அந்த சின்னத்திலேயே போட்டியிடுவது என நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்து, தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தனிச்சின்னம் கேட்டு அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேர்தல் ஆணையத்தில் மனு செய்திருந்தார்.அவரது கோரிக்கை ஏற்கபடவில்லை.
இதனால் கிருஷ்ணசாமி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
– பி.எம்.எம்.