பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!

சத்தான உணவு வகைகளில் கீரை, காய்கறி, பழங்கள் நிச்சயமாக இடம்பிடிக்கும். அதிலும் கீரைகள் உடல் ஆரோக்கியத்தின் அடிநாதம் என்றே சொல்லலாம்.

எந்த வகை நோயினால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு வகைகளில் நிச்சயம் கீரை உணவு இருக்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் உணவில் நீக்கமற நிறைந்திருக்கும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.

காரணம் அந்தளவுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கும் ஆற்றல் பொன்னாங்கண்ணி கீரையில் உள்ளது.  அதனால் தான் நம் முன்னோர்களும் பொன்னாங்கண்ணி கீரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

இந்த கீரை, மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால் தான் அதை பொன்னாங்கண்ணி என்கிறார்கள்.

பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.

பொன்னாங்கண்ணியில் நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன.

பச்சையாக கிடைக்கும் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன.

இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக்குணம் குறைவு.

அகத்தியரின் பாடல்,

“காசம், புகைச்சல், கருவிழிநோய், வாதமனல்,
கூசும் பிலிகங்கு தாங்குரநோய், – பேசில் ஐயா!
என்னங்காண் இப்படிவம் ஏம்மாம், செப்பலென்னாப்
பொன்னாங் காணிக் கொடியைப் போற்று.”

என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது.

இந்தப் பாடலின் பொருள் – பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.

இந்தக் கீரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், உடல் எடையைக் குறைக்கவும், உடல் எடையை கூட்டவும் இந்த ஒரே கீரை பயன்படுகிறது.

இந்தக் கீரையைக் கொண்டு அருமையான கீரைக்குழப்பு செய்வது பற்றிப் பார்ப்போம்.

பொன்னாங்கண்ணி கீரை குழம்பு:

தேவையான பொருட்கள்

1 கட்டு பொன்னாங்கண்ணி கீரை
15 சின்ன வெங்காயம்
1 சிறிய தக்காளி
1 கப் துவரம் பருப்பு
1 குழி கரண்டி புளி கரைசல்
2 ஸ்பூன் சாம்பார் தூள்
1/4 மஞ்சள் தூள்
உப்பு தேவையான அளவு
1 ஸ்பூன் எண்ணெய்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு
1/2 ஸ்பூன்சீரகம்
1 வரமிளகாய்

செய்முறை:

சிறிய வெங்காயம் தோலுரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய சைஸ் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கப் துவரம் பருப்பை கழுவி தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிரஸர் பாணில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் தாளிக்க வேண்டிய கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் தாளித்துக் கொள்ளவும்.

தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே பிரஸர் பாநில் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.

சீரகம் பொரிந்தவுடன் அதில் சிறிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு கீரையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு கீரையில் வெந்த பருப்பு சாம்பார் தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.அரை டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

பிறகு அரைத்து வைத்த புளி தண்ணீரை கொஞ்சமாக சேர்த்து கொதிக்க வைக்கவும். குழி கரண்டி அளவு புளி தண்ணீர் போதும். நிறைய புளித் தண்ணீர் சேர்த்தால் கீரை சுவை மாறிவிடும்.

நன்கு கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியாக குழம்பு வைத்துக் கொள்ளவும். நீர்க்க வைக்க வேண்டாம்.

பிறகு தாளித்தவற்றை சேர்க்கவும். நிறைவாக சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரைக் குழம்பு தயார்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

You might also like