தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில், அனைத்து கட்சிகளுமே, மூத்தத் தலைவர்களின் வாரிசுகளுக்கு தொகுதிகளை வாரி இறைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள தொகுதிகள் 39. வாரிசுகள் மட்டும் 17 இடங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அது குறித்த முழு விவரம்:
சென்னையில் மட்டும் 5 பேர்
வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்.
கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், இதே தொகுதியில் 6 முறை நின்றுள்ளார்.
2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கருணாநிதியின் மனசாட்சி என வர்ணிக்கப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன்.
தென் சென்னையில் மூன்று பிரதான கட்சிகளும், வாரிசுகளையே களம் இறக்கியுள்ளது. திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள். இப்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி.
கடந்த தேர்தலிலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன். கடந்த 2014-ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு, வாகை சூடியவர்.
இங்கு, பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக இருந்தவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இவரது தந்தை குமரி அனந்தன், முன்னாள் எம்.பி. தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர்.
கடந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து நின்று தோற்றுப்போனவர், தமிழிசை என்பது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகன்-நேரு மகன்கள்
திமுகவில் நம்பர் -2 இடத்தில் இருக்கும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். கல்வி நிறுவனம் நடத்தி வரும் இவர் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் கதிர் ஆனந்த், இதே இடத்தில் நின்று ஜெயித்தவர்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண்நேரு, அமைச்சர் கே.என்.நேருவின் மகன்.
ஹார்வர்டு பல்கலைகழகத்தில் எம்.எஸ்.படித்த அருண், முதன்முறையாக தேர்தலில் குதித்துள்ளார்.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார். இப்போது ஆரணி எம்.பி.யாக இருக்கும் இவர், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கிருஷ்ணசாமியின் மகன்.
எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
விருதுநகர்
1967 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு, தோல்வி அடைந்த இடம்- விருதுநகர், 55 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தொகுதி மீண்டும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. காரணம்? பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிடுகிறார்.
திமுக, அதிமுக என பயணித்து விட்டு சமத்துவ மக்கள் கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கி, அதனை அண்மையில் பாஜகவோடு இணைத்த சரத்குமாரின் மனைவி.
இந்தத் தேர்தலில் தான் போட்டியிடாமல், மனைவி ராதிகாவை களத்தில் இறக்கியுள்ளார், சரத்.
ராதிகாவை எதிர்த்து ’கேப்டன்’ விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
விஜயகாந்த், உச்சத்தில் இருந்தபோது அவருடன், பல படங்களில் இணைந்து நடித்தவர் ராதிகா.
கால சக்கரத்தின் ஓட்டத்தில் விஜயகாந்த் மகனையே எதிர்த்து நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
வாரிசு அரசியலை எதிர்த்து, தனிக்கட்சி கண்ட, வைகோவின் மகன், துரை வைகோ, மதிமுக வேட்பாளராக திருச்சி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜின் மகன், ராமச்சந்திரன் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நீலகிரியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.
தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக சவுமியா போட்டியிடுகிறார். இவர், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி.
2014 தேர்தலில் அன்புமணி வென்ற தொகுதி தர்மபுரி. இது, பாமகவின் கோட்டையாக உள்ளது.
கனிமொழி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி, தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கடந்த முறை இதே தொகுதியில் நின்று அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவருக்கு, இரண்டாம் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்துக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இவரது, குடும்பமே அரசியல் குடும்பம்.
தொழில் அதிபரான விஜயின் தந்தையான மறைந்த வசந்தகுமார், கன்னியாகுமரியில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்தவர்.
கன்னியாகுமரி தொகுதி முன்னர் நாகர்கோவில் தொகுதியாக இருந்தபோது, விஜயின் பெரியப்பா குமரி அனந்தன், எம்.பி.யாக இருந்துள்ளார்.
வாரிசுகளில் எத்தனை பேர் கரை சேர்வார்கள் என்பது, ஜுன் மாதம் 4-ம் தேதி தெரிந்து விடும்
– பி.எம்.எம்.