‘நீர்’ என்பதற்குத் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. ஆனாலும் தண்ணீர் என்பது மட்டுமே முதலில் நம் நினைவுக்கு வரும்.
‘அந்த நீரை நீர் எப்படிப் பயன்படுத்துகிறீர்’ என்று ஒருவரிடம் கேட்கும்போது, ‘நீர்’ என்பது ‘நீங்கள்’ என்பதன் இன்னொரு வடிவம் என்பது புரிய வரும்.
இப்போது ‘நீர் நலமா’ என்று கேட்கும்போது, எதிரே இருப்பவரின் ஆரோக்கியத்தை அறியும் நோக்கம் அதில் தெரியவரும். அப்படி ஒருவருக்கு ஆரோக்கியத்தைத் தருவது ‘நீர்’ என்று புரிந்தபிறகு, அதே வாக்கியம் பல விஷயங்களை சூசகமாக உணர்த்தும்.
ஆரோக்கியத்திற்கான அடிப்படை!
‘ஒரே ஒருநாள் கரண்ட் இல்லாம இருந்து பாரேன்’, ‘ஒருநாள் மட்டும் மொபைல் இல்லாம உங்களால இருக்க முடியுமா’ என்பது போன்ற சவால்களை இணைய உலகில் அவ்வப்போது பார்க்க முடியும். ஆனால், நம்மில் எத்தனை பேரால் தாகம் தழுவிய பிறகும் ‘நீர்’ இல்லாமல் இருக்க முடியும்.
குறைந்தபட்சமாக, நீரைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் ஒரு நாளைக் கழிக்க முடியுமா? இந்த கேள்விகளுக்குப் பதிலே கிடையாது. அப்படியிருக்கும்போது, நீர் இல்லாமல் வாழ்வது எப்படிச் சாத்தியமாகும்? அதற்காகத்தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
காலையில் எழுந்து பல் துலக்குவது, காலைக்கடன்களை முடிப்பது, குளிப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களைச் சுத்தப்படுத்துவது, துவைப்பது என்று ஒருநாளில் நீர் சார்ந்து நாம் இயங்கும் பணிகள் பல.
ஒரே ஒருநாள் ‘மோட்டார் ரிப்பேர்’ ஆனால், அன்றைய தினமே நம்மில் பலருக்கு அர்த்தமிழந்து போகும்.
’தண்ணி கேன் காலியாயிடுச்சு’ என்ற உரையாடல் தொடங்கியவுடனேயே, நீரால் உடல் அடையும் பலன்கள் குறித்து ‘கிளாஸ்’ எடுப்பது தவிர்க்க முடியாததாகும். அப்போது, நீரின் முக்கியத்துவங்கள் ஒவ்வொன்றாக மனதுக்குள் வரிசை கட்டும்.
அதனை அனுபவித்தவர்களாலேயே, ‘காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் உடல் சீராக இயங்கும்’, ‘உணவுக்கு முன்னதாக நீர் அருந்தினால் உடலில் கொழுப்பு சேராது’ என்று தொடங்கி ‘ஒருநாளைக்கு 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது கட்டாயம்’ என்பது வரை பல தகவல்கள் நம் மத்தியில் உலவுகின்றன.
மேற்சொன்னவற்றில் இருந்து, ஆரோக்கியம் தரும் நீருக்கு நாம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பது புலப்படும்.
நீர் தரும் களிப்பு!
இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.
ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.
தனியாக நீரை ரசிக்க நேரம் ஒதுக்காதவர்களும் கூட, கேளிக்கைக்காக வெளியிடங்களுக்குச் சென்றால் நீர் சார்ந்த இடங்களையே தன்னையுமறியாமல் விரும்பிப் பார்ப்பார்கள்.
அருவி, ஏரி, கடல் என்று இயற்கை படைத்தவற்றை மீறிச் செயற்கை நீருற்றுகளும் நீர் விளையாட்டுத் தலங்களும் கூட அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும்.
கலை வெளிப்பாட்டிலும் கூட, நீர் உருவாக்கும் அதிசயங்களுக்கு இணையாக இன்னொன்றை முன்வைப்பது இயலாத காரியம்.
எழுத்து, ஓவியம், இசை, நடனம் என்று எதிலும் நீரைக் குறித்த விளக்கங்கள் நம்மைச் சட்டென்று வசியம் செய்யும். காரணம், நீர்மைத்தன்மையே இந்த உலகின் ஆதாரம்.
நீர் என்பது களிப்பை மிகச்சாதாரணமாக அள்ளித் தரும் ஒரு வஸ்து. அதீத நட்பில், காதலில் திளைப்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் நீரைக் கொட்டி விளையாடுவதைப் பார்க்கும்போது அந்த உண்மை தெரிய வரும்.
ஒருவரின் குறும்பு இன்னொருவரைக் கோபப்படுத்தினாலும், இடையே புகும் நீர் அந்த இடத்தின் தன்மையைப் புரட்டிப் போட்டுவிடும்.
‘என்னய்யா கதை விடுறீங்க’ என்பவர்கள் கண்களை மூடி, இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள்.
இரண்டு பேர் இரு வேறு திசைகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு பிரிவு. திடீரென்று ஒருவர் மனதில் இன்பம் சுரக்கிறது.
அந்த இடைவெளியைக் குலைக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அவரது கையில் கொஞ்சம் நீர் இருக்கிறது. அதனை இன்னொருவர் மீது கொட்டுகிறார்.
இருவருக்கும் இடையே ‘கொலவெறி’ சுழன்றாடினால் நிகழ்வது வேறாக இருக்கும். ஆனால், அது எந்தக் கணத்திலும் தீரக்கூடிய பிரிவு எனும்போது இடையே சுழன்றாடும் நீர் அந்த இடைவெளியை களிப்பினால் நிறைக்கும்.
உலக நீர் தினம்!
சரி, ‘நீர்’ குறித்து இத்தனை அக்கறை ஏன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மார்ச் 22 அன்று ‘உலக நீர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அதனை அடிக்கோடிட்டுச் சொல்லவே இவ்வளவு பில்டப்!
1993ஆம் ஆண்டு முதல் ஐநா சார்பாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதோ, நீரின் முக்கியத்துவம் குறித்து இத்தினத்தில் உலகெங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பதோ புதிய விஷயமல்ல.
அப்படிப்பட்ட நீர் மீது அசாதாரணமான அக்கறையை நாம் காட்டுகிறோமா என்பது மிக முக்கியம்.
சில ஆங்கிலத் திரைப்படங்களில், வாஷ்பேஷினில் இருக்கும் குழாயில் இருந்து வழியும் நீரைப் பருகும் சில கதாபாத்திரங்கள்.
அந்த வீட்டின் எல்லா இடத்திலும் சுத்தமான நீர் கிடைக்கும் என்பதனைச் சூசகமாகச் சொல்லும் அக்காட்சி.
அப்படியொரு சூழல் இன்றுவரை நம் நாட்டில் வாய்க்கவில்லை. வளர்ந்த நாடுகளில் கூட, குழாய்களில் மட்டுமே அப்படியொரு நீர் கிடைக்கும்.
வெளியிடங்களில் நீர்நிலைகள் மாசுற்றிருக்கும் என்பதுதான் நிதர்சனம். காரணம், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பெரும்பாலான நீர்நிலைகள் கலங்கிக் கிடப்பதுவே.
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 78 கோடி பேர் சுத்தமான நீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்பது ஒரு தோராயக் கணக்கு.
நீர் நிலைகள் மாசுறுவதால் முதலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. தாவரங்களோடு சேர்ந்து பிற உயிர்களும் சேதாரங்களைச் சந்திக்கின்றன. ஒட்டுமொத்தமாக, பூமிக்கோளத்தில் இயல்பே தடம்புரள்கிறது. பருவநிலை மாற்றங்களுக்குக் காரணமாகிறது.
மனிதர்களின் அலட்சியத்தால் விளையும் மாசுறுதல் தொடங்கி ஆலைக்கழிவுகள் வரை உலகெங்கும் நீர் ஒவ்வொரு கணமும் அழுக்கைத் தன்னோடு சேர்த்து வருகிறது. ஆனாலும், நாம் நம்மளவில் சுத்தமாக இருந்தால் போதும் என்றெண்ணி, புறச்சூழலின் தூய்மையப் புறக்கணித்து வருகிறோம்.
சாக்கடை நீரின் மீது மிதக்கும் தக்கையில் அமர்ந்துகொண்டு, எத்தனை நாட்கள் நம்மால் அந்தச் சுத்தத்தைப் பேணிவிட முடியும்?
வேதியியல் உலகில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தால் நீர் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால், அதனைச் செயற்கையாக உருவாக்குவது கடினம்.
ஆனால், இயற்கை தரும் நீரைப் பத்திரமாகப் பாதுகாப்பதன் மூலமாக அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான எளிய வழி.
அதை விட்டுவிட்டு, கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டங்கள் நோக்கி நகர்ந்து வருகிறது மனித சமூகம். இதனை என்னவென்று சொல்வது?
இனிமேலாவது நீரை வீணாக்குவதையும், நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதையும் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் உணர வேண்டும்; எதிர்காலத் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும்.
அதனைச் செய்யாவிட்டால், ‘நீர் நலமா’ என்ற கேள்விக்கான பதிலாக வருத்தங்களையும் இயலாமைகளையும் துக்கங்களையும் கொட்டியாக வேண்டிய சூழல் வந்து சேரும். விளைவுகள் தெரிந்தபிறகும் அப்படியொரு விலை கொடுக்கும் அளவுக்கு நாம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களா..?!
– மாபா