இன்றைய தேவை வன்முறையில்லா வகுப்பறை!

நூல் அறிமுகம்:

‘எந்தப் பள்ளிகளும் கற்றுத் தருவதில்லை திங்கள்கிழமைகளை நேசிக்க…’

உண்மைதான் இப்போது பள்ளிக்கூடமானது பாடத்தை மனனம் செய்து அப்படியே நகலெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஏனெனில் அறிவுக்கு மிஞ்சிய பாடத்திட்டம், அலற வைக்கும் தேர்வு முறை, மதிப்பெண் பந்தயம் என மாணவர்களின் வாழ்க்கை போராட்டமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

விளையாட்டு என்பது போனிலும், சிரிப்பு என்பது போட்டோவிற்காக மட்டும் என மாறிக்கொண்டு வருகிறது.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில செறிவுகள்:

* பள்ளிப் பாடங்களில் முக்கியமானது குழந்தைகளை அறிதல் என்கிற பாடம்.

* ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது.

* பெரும்பாலான ஆசிரியர்கள் ‘எதையுமே கண்டுகொள்ள வேண்டியதில்லை’ எனும் நிலையில் இருப்பது இன்று மிகுந்த கவலை தரும் சூழல் ஆகும். ‘திட்டினால் மெமோ.. அடித்தால் டிஸ்மிஸ்… நமக்கேன் வம்பு’ என்பது அவர்களது அணுகுமுறையாக உள்ளது.

* எனக்கு 12 வயது ஆகும்வரை நான் என் பெயர் ‘ஷட் அப்’ (Shut up) என்றே நினைத்தேன் – சார்லி சாப்ளின்.

* உலகைப் புரிந்து கொண்டு, உறவுச் சிக்கல்களையும் அன்றாட வாழ்வின் புரிதல்களையும் கடந்து செல்லத் தன்னை டீனேஜ் பருவத்தின் ஊடே ஒரு குழந்தை தயார் செய்து கொள்கிறது.

* எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்.

* குழந்தைகளை இன்று துரத்தும் மிகப்பெரிய அச்சுறுத்தல், எல்லாவற்றிலும் வெற்றி மட்டுமே அடைய வேண்டும் என அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அன்பு நிர்ப்பந்தம். ‘வீட்டிற்கு இன்று என்ன வெற்றிச் செய்தியை எடுத்துச் செல்லப் போகிறோம்’ என்கிற மன அழுத்தம் இல்லாத குழந்தையே இல்லை.

மேலும் ஒரு மாணவனின் முழுமையான வெற்றிக்கு வீடு, பள்ளி இரண்டுமே முக்கிய பங்கு ஆற்றுகிறது. பெற்றோர், ஆசிரியர் இருவரும் இணைந்து ஒரு குழந்தைக்கு வழங்கும் மிகப்பெரிய சொத்து எதுவெனில் ஆரோக்கியமான மனச் சூழலே ஆகும். அதுவே நாட்டிற்கு ஒரு சிறந்த மாணவனை, மனிதனை உருவாக்கும் வழியாகும்.

*****

புத்தகம் பெயர்: வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் பெயர்: ஆயிஷா நடராசன்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: 120/-

You might also like