தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் 11 தலைவர்கள்!

நாட்டில் 100 + கட்சிகள், 1000 + தலைவர்கள் இருந்தாலும், 11 தலைவர்களே மக்களவைத் தேர்தல் முடிவை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

அந்த தலைவர்கள் குறித்த ஓர் அலசல்:

மோடி:

இரு முறை பிரதமர் நாற்காலியில் அமர்ந்த நரேந்திர மோடிதான் பாஜகவின் ஒற்றைப் பலம். வாஜ்பாய், அத்வானியைக் காட்டிலும், பாஜகவின் பலம் பொருந்திய தலைவராக உருவெடுத்துள்ளார்.

மீண்டும் அவரையே பிரதமர் வேட்பாளராக, பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிறுத்தி உள்ளன. பாஜகவில் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் பிரச்சாரமும் மோடியை மையப்படுத்தியே உள்ளது.

இந்திரா காந்திக்குப் பிறகு வசீகரம் வாய்ந்த தலைவராக கருதப்படும் மோடி, 400 தொகுதிகளை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் சுற்றி வருகிறார்.

இதுவரை இல்லாத வகையில், இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை பிரதான கட்சிகளாகும்.

ராகுல் காந்தி:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திதான், பாஜகவின் பிரதான எதிரி. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கட்டமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணிக்கு இவர்தான் ’பிதாமகன்’.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே இருந்த போதிலும், அந்தக் கட்சியின் ‘லகான்’ ராகுலிடம் தான் உள்ளது என்பதை உலகம் அறியும்.

முதுமை மற்றும் உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால், தீவிர பிரச்சாரத்தில் சோனியா ஈடுபட முடியாது.

எனவே ‘இந்தியா’ கூட்டணிக்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இவர் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

நாடு முழுக்க இரண்டு கட்டங்களாக, பாதயாத்திரை சென்று வந்துள்ள ராகுலுக்கு, இது முக்கியமான தேர்தல்.

மம்தா பானர்ஜி:

மேற்குவங்க மாநில முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் ரேஸில் இன்னமும் இருக்கிறார்.

ஒரு காலத்தில் மத்திய பாஜக அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், இன்றைய தினம் அந்தக் கட்சியை கடுமையாக எதிர்க்கும் தலைவர்களில் முக்கியமானவர் மம்தா.

இதனாலேயே, மோடி காட்டமாக விமர்சிக்கும் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார், மம்தா.

பாஜகவுக்கு பெரிய தளங்கள் இல்லாத மே.வங்கத்தில் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றி, மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பாஜக.

ஆனால், 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மே.வங்கம், தனது கோட்டை என நிரூபித்தார் மம்தா.

மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள முஸ்லீம்கள் ஓட்டுகள் சிந்தாமல், சிதறாமல் மம்தாவுக்கு கிடைக்கும் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

நவீன் பட்நாயக்:

மேற்குவங்கத்தில் மம்தா போன்று ஒடிசா மாநிலத்தில் தனித்த செல்வாக்கோடு இருப்பவர் நவீன் பட்நாயக்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருப்பவர். அதனால் தான் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ’இந்தியா’ கூட்டணிப் பக்கம் போகவில்லை.

2000-ம் ஆண்டு முதல், ஒடிசா முதலமைச்சராக கோலோச்சி வருகிறார்.

இப்போது மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில், நவீனின் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க பாஜக பேச்சு நடத்தியது. தொகுதிகள் இழுபறியால் , கூட்டணி அமையவில்லை.

இந்த மாநிலத் தேர்தல் களத்தில் காங்கிரசும் இருந்தாலும், பாஜகதான் நவீனின் பிரதான எதிரி.

மு.க.ஸ்டாலின்:

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாஜகவின் பிரதான வைரி.

தமிழகத்தில் கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றெடுக்க, இவரது முயற்சிகளே பிரதான காரணம்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருப்பது, ஸ்டாலினுக்கு கூடுதல் பலம்.
கடந்த முறை போல் திமுக கூட்டணியின் வெற்றி அமைந்து விடக்கூடாது என்பதால், மோடி அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார்.

வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி வந்த பிரதமர் இன்று (திங்கள் கிழமை) கோவை வருகிறார்.

அவரது ‘விசிட்’ எந்த அளவுக்கு பாஜகவுக்கு பலனைத்தரும் என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வரும்.

அரவிந்த் கெஜ்ரிவால்:

டெல்லியில் ஆட்சியை பிடித்தபோது மாநில கட்சியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி, இன்று தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பாஜகவை கடுமையாக எதிர்க்கும் தலைவர்களில் இவரும் ஒருவர்.
மோடியின் ’ஹிட் லிஸ்ட்’டில் அரவிந்த் கெஜ்ரிவாலும் உள்ளார்.

அகிலேஷ் – தேஜஸ்வி

மேற்சொன்ன தலைவர்களோடு, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்.ஜே.டி.தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிர மாநில ஜாம்பவான்களான உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகியோரும் இந்தத் தேர்தலில் வெற்றி – தோல்வியை முடிவு செய்பவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.

– பி.எம்.எம்

#பாஜக #வாஜ்பாய் #அத்வானி #இந்திரா_காந்தி #தெலுங்கு_தேசம் #ஐக்கிய_ஜனதா_தளம் #மதச்சார்பற்ற_ஜனதா_தளம் #காங்கிரஸ் #இந்தியா_கூட்டணி #திரினாமூல் #காங்கிரஸ் #திமுக #ஜெகன்மோகன்_ரெட்டி #அகிலேஷ்_யாதவ் #தேஜஸ்வி_யாதவ் #உத்தவ்_தாக்கரே #சரத்பவார் #மோடி #modi #rahul_gandhi #ராகுல்_காந்தி #மம்தா_பானர்ஜி #Mamata_Banerjee #நவீன்_பட்நாயக் #Naveen_Patnaik #மு_க_ஸ்டாலின் #mkstalin #அரவிந்த்_கெஜ்ரிவால் #Arvind_Kejriwal #அகிலேஷ் #தேஜஸ்வி #Akhilesh_Yadav #Tejashwi_Yadav

You might also like