நீண்ட காலமாக அரசியல் ஆசையை மனதில் தேக்கி வைத்திருந்த ’இளையத் தளபதி’ விஜய் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, அரசியல் கட்சியாக ஆரம்பித்து விட்டார்.
’தமிழக வெற்றிக் கழகம்’ என அந்த கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளார்.
கட்சியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அண்மையில் அறிமுகம் செய்தார்.
அந்த செயலி மூலம் விஜய், தனது உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்தார்.
செயலி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் விஜய் கட்சியில் 26 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல் தான் அவரது இலக்கு என்றாலும் தீவிர அரசியலை இப்போதே ஆரம்பித்து விட்டார்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, கொதிக்கும் பிரச்சினை குறித்து அவர் முதன் முதலாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அது, ’சிஏஏ’ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
அது என்ன சிஏஏ?.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) எனும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு, இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லீம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் பெரும் கலவரம் வெடித்தது.
போராட்டம் மற்றும் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது’ என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற விவகாரங்களில் சினிமா நடிகர்கள் கருத்து சொல்வதில்லை.
ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், கொதிக்கும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், ஈபிஎஸ் போன்று அவரும், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்துள்ளதால், விஜய் ஒவ்வொரு பிரச்சினையிலும், தனது கருத்தை வெளிப்படுத்துவார் என அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
-பி.எம்.எம்.