இந்திப் படங்கள் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் என்றொரு எண்ணம் நம்மவர்களிடம் உண்டு. ஆனால், அங்கும் கூட ‘சாண் இவ்வளவு முழம் அவ்வளவு’ என்று பட்ஜெட் கணக்கு போட்டு படமெடுப்பதுண்டு.
அப்படிப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் ஏதேனும் ஒரு மாநிலம் குறித்து, அங்குள்ள கலாசாரம் குறித்து, சிறப்பான ஒரு வரலாற்று நிகழ்வு குறித்து பேசும்போது, அவை பெரியளவில் அதிர்வுகளை உண்டுபண்ணும்.
ஒரேநேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும்விதமாக அவை அமைவதுண்டு.
அமீர்கான் தயாரிப்பில், அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள ‘லாப்தா லேடிஜ்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது, அப்படியொரு படமாக அமையும் என்று தோன்றியது.
படம் பார்த்து முடிந்தபிறகும் அந்த எண்ணம் அப்படியே இருக்கிறதா அல்லது மங்கி மறைந்து போகிறதா?
இரண்டு பெண்கள்!
இந்த படத்தின் கதை 2001 வாக்கில் நிகழ்வதாகத் திரைக்கதையில் காட்டப்பட்டுள்ளது.
நிர்மல் பிரதேஷ் (?!) எனும் மாநிலம். அங்குள்ள குக்கிராமமொன்றில் பூல் குமாரி (நிதான்ஷி கோயல்) எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார் தீபக் குமார் (ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா).
உறவினர்கள் முதலில் ஊர் திரும்பிவிட, இரண்டு நாட்கள் மணப்பெண் வீட்டில் தங்கி, அருகிலுள்ள கோயில் குளம் எல்லாம் சென்றுவந்து, அதன்பின் தனது வீட்டுக்கு மனைவியை அழைத்துச் செல்கிறார் தீபக்.
வீட்டில் இருந்து கிளம்பும்போதே தலையை முக்காடிட்டுச் செல்ல வேண்டுமென்று பெரியவர்கள் அழுத்திச் சொன்ன காரணத்தால், பூல் அதனை அப்படியே பின்பற்றுகிறார்.
அவர் சிவப்பு வண்ணச் சேலையை அணிந்திருக்கிறார். ஸ்கூட்டர், பேருந்தின் மேற்புறம், ரயில் என்று இருவரும் தொடர்ந்து பயணிக்கின்றனர்.
ரயிலில் அவர்கள் ஏறும் கம்பார்ட்மெண்ட்டில் பூல் போலவே மேலும் சில பெண்கள் சிவப்பு வண்ணச் சேலையுடன் முக்காடிட்டு அமர்ந்திருக்கின்றனர். அவர்களும் புதிதாகத் திருமணமானவர்கள் தான்.
பூல் அருகிலேயே அப்படி இரண்டு பெண்கள் இருக்கின்றனர். மாலை வேளையில் ஒரு ஜோடி ரயிலில் இருந்து இறங்கிவிடுகின்றனர். அதையடுத்து அனைவரும் இடம் மாறி அமர்கின்றனர்.
அந்த நேரத்தில், தீபக் பாத்ரூம் சென்றுவிட்டு திரும்பி வருகிறார். மீண்டும் வந்து அமர்பவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்கிறார்.
நள்ளிரவில் தான் இறங்க வேண்டிய மூர்தி எனும் ரயில் நிலையத்தைக் கண்டதும் அவசரமாக இறங்குகிறார் தீபக்.
சிவப்பு வண்ணச் சேலை அணிந்த பெண்ணைக் கூட்டிக்கொண்டு மீண்டும் ஒரு பேருந்தில் பயணித்து தனது ஊரான சூர்யமுகிக்கு வருகிறார்.
கோலாகலமான வரவேற்புடன் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர் நண்பர்கள்.
வரவேற்பு முடிந்து ஆரத்தி எடுக்கையில், அந்த பெண் முக்காடை அகற்றுகிறார். அப்போதுதான், தன்னுடன் வந்தது பூல் அல்ல வேறோரு பெண் என்பதை அறிகிறார் தீபக்.
அந்தப் பெண் தனது பெயர் ’புஷ்பா ராணி’ என்றும், கணவர் பெயர் ‘பங்கஜ்’ என்றும் சொல்கிறார். அவரை அந்த வீட்டிலேயே தங்கச் சொல்கின்றனர் தீபக்கின் பெற்றோர்.
அதன்பின், மனைவியைத் தேடி அருகிலுள்ள ஊர்களுக்கு நண்பர்களுடன் அலைந்து திரிகிறார் தீபக். பிறகு, போலீசில் புகார் கொடுக்கிறார்.
அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர் மனோகர் (ரவி கிஷன்) தீபக்கைக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.
இதற்கிடையே, தன்னிடம் இருக்கும் மொபைலில் ‘சிம் கார்டை’ கழற்றி வீசுகிறார் புஷ்பா. தன்வசம் இருக்கும் நகைகளை அடகு வைத்து, அந்த பணத்தை அஞ்சலகம் மூலமாக ‘மணியார்டர்’ செய்கிறார்.
அதேநேரத்தில், உண்மையிலேயே அப்பெண்ணைத் திருமணம் செய்த நபர் போலீசில் ‘மனைவியைக் காணவில்லை’ என்று புகார் கொடுக்கிறார். அவரது பெயர் ‘ஜெயா’ என்று அவர் குறிப்பிடுகிறார்.
வேறொரு காவல் நிலையத்தில் இருந்து ஜெயா குறித்த தகவல்கள் தெரிய வந்ததும், தீபக் வீட்டில் இருக்கும் அப்பெண்ணைப் பின்தொடரத் தொடங்குகிறார் மனோகர்.
இன்னொரு பக்கம் ரயிலில் இருந்து இறங்கிய பூல், அந்த ரயில் நிலையத்திலேயே தங்குகிறார். அங்கிருக்கும் சில மனிதர்களோடு நட்பு கொள்கிறார்.
ஒரு பெண்மணியின் கடையில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். கணவரது ஊர் பெயரோ, அவரது உறவினர்களின் தொலைபேசி எண்ணோ அவரிடம் கிடையாது.
ஆனால், கணவர் இல்லாமல் பிறந்த ஊருக்குச் செல்வது அவமானம் என்று நினைக்கிறார் பூல். கண்டிப்பாகத் தனது கணவர் தன்னைத் தேடி வருவார் என்று நம்புகிறார்.
பூல் – தீபக் இருவருமே தங்களது இணையைப் பிரிந்ததை எண்ணி வாடுகின்றனர். அதேநேரத்தில் புஷ்பா எனும் ஜெயாவோ தன் கணவரை விட்டுப் பிரிந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார். ஏன் அப்படி?
ஜெயாவின் முன்கதை என்ன? பூல் – தீபக் ஜோடி ஒன்று சேர்ந்தனரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘லாப்தா லேடீஜ்’ எனும் டைட்டிலுக்கு காணாமல் போன பெண்கள் என்று அர்த்தம். நம்மூரில் ’லேடீஸ்’ என்று சொல்வதைத்தான் வட இந்தியாவில் லேடீஜ் என்று குறிப்பிடுகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாதிரியான ஒரு கற்பனையான நிலப்பகுதியில் கதை நடைபெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
எளிமையான காட்சிகள்!
தொண்ணூறுகளில் வந்த நகைச்சுவைப் படங்கள் பலவற்றில் ‘ஆள் மாறாட்டம்’ ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
தமிழ், இந்தி என்று எந்த மொழிப் படத்திலும் இதனைக் காணலாம். கிட்டத்தட்ட அதே தொனியில் ‘லாப்தா லேடீஜ்’ படத்தின் கதை அமைந்துள்ளது.
இதில் தீபக் – பூல் ஜோடியாக வரும் ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா – நிதான்ஷி கோயல் இருவரும் நம் மனம் கவர்கின்றனர்.
அவர்களது ஒரிஜினல் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தபிறகே, படத்தில் அவர்களது ஒப்பனையும் ஆடையலங்காரமும் எந்த அளவுக்கு மண் மணத்தோடு அமைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
புஷ்பா ராணி என்று பொய்யாகப் பெயர் சொல்லும் பெண்ணாக, ஜெயா என்ற பாத்திரத்தில் பிரதிபா ரந்தா நடித்துள்ளார். மொத்தக் கதையும் அவரைச் சுற்றியே நகர்கிறது.
கணவர் அல்லாத ஒருவர் அழைத்தது தெரிந்தும் அவருடன் வர அப்பெண் தயாரானது ஏன் என்பதுதான் இத்திரைக்கதையில் உள்ள மில்லியன் டாலர் கேள்வி.
அதற்கேற்ப, அப்பாத்திரத்தின் பின்னணி திரைக்கதையில் சஸ்பென்ஸ் உடன் சொல்லப்பட்டுள்ளது. அவரது நடிப்பு சட்டென்று அப்பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாக இருக்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் ரவி கிஷன் மட்டுமல்லாமல், அவருடன் வரும் ஆண், பெண் காஸ்டபிள்களும் கூட நம் கவனம் ஈர்க்கின்றனர்.
போலவே, ரயில் நிலையத்தில் நாயகிக்கு வேலை தரும் டீக்கடைக்காரியாக நடித்துள்ள சாயா கடம், சோட்டுவாக வரும் சத்யேந்திர சோனி, மாற்றுத் திறனாளியாக நடித்து ஏமாற்றும் ரவி கபாடியா போன்றவர்களும் கூட ஆங்காங்கே நம் கவனத்தைத் திருடுகின்றனர்.
இவர்கள் தவிர்த்து தீபக்கின் உறவினர்கள், நண்பர்கள், ஊர்காரர்கள் என்று ஒரு கும்பலே இதில் வந்து போகிறது.
ரவி சம்பத்தின் பின்னணி இசை எளிதாக நம் மனதுக்குள் நகைச்சுவை உணர்வைக் கசியச் செய்கிறது என்றால், பாடல்கள் ‘மாண்டேஜ்’ காட்சிகளுடன் இயைந்து நம் மூளையை எளிதாகப் பற்றிக் கொள்கின்றன.
விகாஸ் நௌலகாவின் ஒளிப்பதிவு, அழகியல் பார்வையோடு யதார்த்தமான வட இந்திய மக்களின் வாழ்வியல் முறைகளையும் நமக்குக் கடத்த முயற்சிக்கிறது.
விக்ரம் சிங்கின் தயாரிப்பு வடிவமைப்பு பணி, திரையில் நாடகத்தனம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறது.
படத்தொகுப்பாளர் ஜபீன் மெர்ச்சண்ட் மிக நிதானமாக ஒவ்வொரு காட்சியும் உரிய தாக்கத்தை நம் மனதில் ஏற்படுத்தும் அளவுக்குத் திரையில் அவற்றுக்கு ‘ஸ்பேஸ்’ தந்திருக்கிறார்.
கதையோட்டம் தடைபடும் வகையிலோ, குழப்பம் உருவாகும் விதமாகவோ, அவர் காட்சிகளைக் கோர்க்கவில்லை.
பிப்லாப் கோஸ்வாமி எழுதிய கதைக்கு ஸ்நேகா தேசாய் திரைக்கதை வசனத்தை அமைத்துள்ளார். இயக்குனர் கிரண் ராவ் அதற்குத் திரையுருவம் தந்துள்ளார்.
லாவகமான காட்சியாக்கம்!
தவறான அடையாளம் காரணமாக இரண்டு பெண்கள் இடம் மாறிச் செல்வதுதான் இக்கதையின் அடிப்படை. அதற்கு, அவர்களிருவரும் ‘முக்காடு’ போட்டிருப்பதுதான் முக்கியக் காரணம்.
தீபக்கிடம் இருக்கும் கல்யாண புகைப்படத்தில் கூட, பூல் முக்காடு அணிந்துதான் இருக்கிறார்.
போலீசார் அதனை வைத்துக்கொண்டு எவ்வாறு துப்பு துலக்க முடியும் என்ற கேள்வியும் திரைக்கதையில் எழுப்பப்படுகிறது.
அதற்காக நாயகனையோ, அவரது குடும்பத்தினரையோ கொடுமையானவர்களாகக் காட்டவில்லை.
நாயகனின் சகோதரர் கொல்கத்தாவில் வாட்ச்மேன் ஆக வேலை பார்க்க, அவரது மனைவியோ ஒற்றை மகனுடன் அக்கிராமத்தில் வாழ்வதாகச் சொல்லப்பட்டுள்ளது.
‘நீங்கள் ஊமையா’ என்று அவரிடம் கேட்கப்பட, அதற்கு அவர் ‘என் கணவர் இங்கு இல்லாதபோது நான் யாரிடம், எதைப் பற்றி பேச வேண்டும்’ என்று கேள்வி கேட்பதாகப் படத்தில் ஒரு வசனம் வரும்.
அதே பெண்மணியின் ஓவியத் திறமையை புஷ்பா ராணி பாத்திரம் வளர்த்தெடுப்பதாகவும் காட்சிகள் உண்டு.
பெண்களை அடிமைகளாக எண்ணும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுகளை நோக்கி மிக மென்மையாகக் கேள்வி எழுப்புகிறது ‘லாப்தா லேடீஜ்’.
’அட்வைஸ் பண்ணாதீங்கப்பா’ என்று ரசிகர்கள் சொல்லிவிடாத அளவுக்கு நகைச்சுவையின் துணையோடு அதனைக் கையாண்டிருக்கிறது.
வெறுமனே கணவனின் கால்களைப் பார்த்துக்கொண்டு நடக்கும் அளவுக்கு முக்காடு இட வேண்டுமா என்பதில் தொடங்கி பெண்கள் சுயமரியாதையுடன் சுயதொழில்களில் ஈடுபடுவதில் என்ன தவறு என்று கேள்வி கேட்பது வரை பல வகையில் ‘பெண் முன்னேற்றம்’ பற்றிப் பேசுகிறது இப்படம்.
சாத்தியமற்ற ஒன்றைச் சாத்தியப்படுத்தும் நோக்கோடு இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
நல்லதொரு கமர்ஷியல் படத்திற்கான இலக்கணங்களில் மிக முக்கியமானது அதுவே.
அந்த வகையில் யதார்த்தம் நிறைந்த வட்டார மொழி, இயல்பைப் பிரதிபலிக்கிற நடிப்பு, கலாசாரக் கூறுகள் மிளிரும் காட்சிகளைக் கொண்டு இப்படத்தை நம் மனதுக்கு நெருக்கமானதாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் கிரண் ராவ். அவரது லாவகம் நிறைந்த காட்சியாக்கம் இப்படத்தின் பெரும் பலம்.
நிச்சயமாக, இதில் ‘லாஜிக்’ சார்ந்து பல கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால், அது தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்மை ‘எண்டர்டெயின்’ செய்கிறது இந்த ‘லாப்தா லேடீஜ்’.
– உதய் பாடகலிங்கம்