லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29 தினம் உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப்படுகிறது. லீப் வருடத்தில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் வரும் என்பதாலே இந்நாள் அரிய நாள் எனக் கூறப்படுகிறது.
இந்நாள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் என்பதால், சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தை பெறும் பெண்கள் பிப்ரவரி 29 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை.
காரணம் இந்நாளில் பிறக்கும் குழந்தையின் பிறந்தநாள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாட முடியும் என்பதால்தான்.
இதேபோல் பிப்ரவரி 29-ம் தேதி அன்று திருமணம் செய்தால் 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் திருமண நாள் கொண்டாட முடியும் என்பதால் நிறைய ஜோடிகள் இன்று திருமணம் செய்து கொள்வதையும் விரும்புவதில்லை.
ஆனால், ‘வாழ்க்கையில் ஒருவர் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து அதன்படி வாழ்ந்தும் காட்டிய, மொராய்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர் தான்.
குஜராத் மாநிலம் பதேலி கிராமத்தில் ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்த மொராய்ஜி தேசாய் பிறந்ததும் இந்நாளில் தான்.
இதேபோல் அயர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாக பிப்ரவரி 29-ம் தேதி பிறந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
1940 பிப்ரவரி 29-ல் தாத்தா பீட்டர் அந்தோனி பிறந்தார். அவரது மகன் பீட்டர் எரிக் 1964 பிப்ரவரி 29-ல் பிறந்தார். அதேபோல் பீட்டர் எரிக்கின் மகள் பெத்தானி வெல்த் பிறந்தது 1996 பிப்ரவரி 29-ம் தேதி தான்.
இந்த சாதனைக்காக இவர்களின் குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29-ம் தேதியும் உண்மையில் சிறப்பான தினம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.