ஒரே பாடலில் 3 நடிகர்களுக்கு 3 விதமான சொற்களுடன் எழுதி மிரள வைத்தவர் தான் கவிஞர் மருதகாசி. இந்த பாடல் சிவாஜி நடிப்பில் வெளியான சாரங்கதாரா என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன் அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்தார். அப்படி நடித்த ஒரு படம் தான் சாரங்கதாரா. 1958-ம் ஆண்டு வி.எஸ்.ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், பானுமதி நாயகியாக நடித்திருந்தார். ஜி.ராமநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், கருணாநிதி, ராஜ சுலோக்சனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் ஒரு காட்சியில், இளவரசர் சிவாஜி, படைத்தளபதி மற்றும் இளவரசரின் உதவியாளர் ஆகிய மூவரும் புறாக்களை பறக்கவிட்டு பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அப்போது வரும் பாடல் தான் ‘மேகத்திரை பிளந்து’ என்ற பாடல். புறாக்களை பறக்கவிட்ட மூவருமே அவர்கள் புறாவை பற்றி பெருமையாக பேசும்படி இந்த பாடல் அமைந்திருக்கும்.
இந்த படத்தில், மொத்தம் 13 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசி எழுதியிருந்தார்.
புறாக்களை பறக்கவிட்ட மூவருமே தங்களது புறா எப்படி பறக்கிறது என்பதை கவனித்து பாடும் இந்தப் பாடலில், முதலில் இளவரசகராக இருக்கும் சிவாஜி, ‘’மேகத்திரை பிளந்து மின்னலைப்போல் நுழைந்து வில்லினின்றே எழுந்த அம்பைபோலே விரைந்து போகுது பார் என் புறா’’ என்று பாடுவார்.
அவர் பாடி முடித்தவுடன் அடுத்து தளபதி, ‘’சூரிய மண்டலத்தை நேரிலே பார்த்துவர, வீரியமுடனே தன் காரியமே கண்ணாய், தாவுது பார் என் நீலப்புறா’’ என்று பாடியிருப்பார்.
இவர்கள் இருவரும் பாடுவது இலக்கிய நடையுடன் இருக்கும். ஆனால் 3-வது இளவரசரின் உதவியாளர் ஒரு காமெடி நடிகர் என்பதால், அவருக்கு காமெடியாகவே வரிகள் மற்றும் இசைய அமைந்திருக்கும்.
இளவரசரின் உதவியாளர், ‘’எகிறி எகிறித் தாவுது, எழும்பி மேலே போகுது, அங்கும் இங்கும் சுத்தி சுத்தி ஆட்டமெல்லாம் போடுது தங்கப்புறா என் புறா, தலுக்குகார பெண்புறா ஜாலவித்தை காட்டுது” என்று பாடியிருப்பார்.
இந்த ஒரு பாடலில் இலக்கிய நடையும், அதே சமயம் நகைச்சுவை வார்த்தையும் கலந்து சிறப்பாக பாடல் எழுதியிருப்பார் கவிஞர் மருதகாசி. இந்தப் பாடலில் சிவாஜிக்கு டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.
அதேபோல் இந்த படத்தில் இடம்பெற்ற ‘’வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
– நன்றி முகநூல் பதிவு
#கவிஞர்_மருதகாசி #சிவாஜி #பானுமதி #ஜி_ராமநாதன் #எஸ்_வி_ரங்காராவ் #நம்பியார் #கருணாநிதி #ராஜ_சுலோக்சனா #டி_எம்_சௌந்திரராஜன் #சாரங்கதாரா #sarangadhara #maruthakasi #sivaji #banumathi #svrangarav #nambiyar #raja_sulochana #tms #karunanithi #g_ramanathan