ஆர்ட்டிகிள் 370 – பரபரப்பூட்டும் அரசியல் த்ரில்லர்!

சமூக, அரசியல் மாற்றங்கள் தொடர்பான நிகழ்வுகளைத் திரைப்படமாக உருவாக்குவது சாதாரண விஷயமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல்களை மக்கள் நன்றாக அறிந்த பிறகும், அவற்றைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படைப்பைத் தர முடியுமா என்ற கேள்வி மிகப்பெரிய சவாலாக அமையும்.

அதற்குப் பதிலளிக்கக் கடுமையாகப் பிரயத்தனப்பட வேண்டும். திரையில் சொல்லும் சின்னச் சின்ன தகவல்களும் கூட ரசிகர்களுக்குச் சுவாரஸ்யம் தருவதாக அமையுமாறு திட்டமிட வேண்டும். ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கவுதம் பிரதான வேடங்களில் நடித்த ‘ஆர்ட்டிகிள் 370’ ட்ரெய்லர் பார்த்தபோது, இது அப்படியொரு படைப்பாக அமையுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் ‘ஆர்ட்டிகிள் 370’ தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

இரண்டு பெண்கள்!

‘ஆர்ட்டிகிள் 370’ என்ற தலைப்பே, இக்கதை பேசும் அரசியலைச் சொல்லிவிடும். ‘காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும்’ என்ற கருத்தை முன்வைப்பதில் இருந்து இப்படத்தின் கதை தொடங்குகிறது.

ஜுனி (யாமி கவுதம்), ராஜேஸ்வரி சுவாமிநாதன் (பிரியா மணி) என்று இரு பெண் பாத்திரங்களை முன்னிறுத்துகிறது இதன் திரைக்கதை. இடையிடையே, ஜம்மு காஷ்மீரின் எழுபத்தைந்து ஆண்டு கால வரலாறு திரையில் தகவல்களாக இடம்பெறுகிறது.

புர்ஹான் எனும் பயங்கரவாதியைப் பிடிப்பதற்காக, உளவுத்துறை அதிகாரியான ஜுனி பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துகிறார். அந்த முயற்சியில் புர்ஹான் கொல்லப்படுவது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறுகிறது. இதனால், அவர் துறை ரீதியான விசாரணைக்கு உள்ளாகிறார்.

சில காலம் கழித்து, பிரதமர் அலுவலகத்தின் செயலாளரான ராஜேஸ்வரி சுவாமிநாதன் ஜுனியை ஒரு முக்கியமான ஆபரேஷனில் ஈடுபடுமாறு பணிக்கிறார். காஷ்மீரில் செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு நிதியளிக்கும் அப்தாலி எனும் நபரைக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டுமென்பதே அதன் நோக்கம்.

அதேபோல, அவர் சட்டவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபவதை உறுதி செய்து, அவரைச் சுற்றி வளைக்கிறது ஜுனியின் படை. அப்தாலியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

அதேநேரத்தில், காஷ்மீரில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பிளவு காரணமாக ஆட்சி கவிழ்கிறது; மேலும், அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் முயற்சி என்று அடுத்தடுத்து பல அரசியல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அதனைச் செயல்படுத்தியதில் ஜுனி மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்டவர்களின் பங்கு எத்தகையது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையில் சமகால அரசியல் தலைவர்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தினசரிகளில் நாம் வாசித்த பல செய்திகளின் தாக்கம் பல இடங்களில் தென்படுகிறது. அதையும் மீறி, திரைக்கதையில் நிறைந்திருக்கும் பரபரப்பும், அது தரும் சுவாரஸ்யமும் இது ஒரு புனைவு என்பதை உணர்த்துகின்றன. அதற்காகவே இயக்குனர் ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே மற்றும் திரைக்கதையாசிரியர்கள் ஆதித்ய தார், மோனல் தாக்கரின் கூட்டுழைப்பைப் பாராட்டலாம்!

அசத்தும் யாமி கவுதம்!

அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களில் யாமி கவுதமைப் பார்த்து ரசித்தவர்கள், ‘விக்கி டோனர்’ படத்தில் அவரது திரையிருப்பைக் கொண்டாடினார்கள். தமிழில் கூட ‘கௌரவம்’, ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் அவர் நாயகியாகத் தோன்றியிருந்தார். நீண்ட நாட்கள் கழித்து, அவரது நடிப்பை ரசிக்கும்விதமாக அமைந்துள்ளது இப்படம். சில காட்சிகளில் முகச்சுருக்கங்கள் அவருக்கு வயதாகிவிட்டதை உணர்த்துகின்றன.

உணர்வுகளைப் பெரிதாக வெளிக்காட்டாத உடல்மொழி, மிடுக்குடன் கூடிய பாவனை என்று ஒரு அரசு அதிகாரியைத் திரையில் பிரதியெடுக்கும் வகையில் தோன்றியிருக்கிறார் பிரியா மணி.

இதில் ராஜ் ஜுட்ஷி, திவ்யா சேத், கிரன் கர்மாகர், அருண் கோவில், வைபவ் தத்வவாதி, ராஜ் அர்ஜுன், ஐராவதி ஹர்சே என்று பலர் நடித்துள்ளனர். இவர்களில் பலர் தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் இதர கலைச்சாதனங்கள் வழியே வடமாநில மக்களிடம் அறிமுகமானவர்கள்.

இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் திரையில் முகம் காட்டினாலும், திரைக்கதை என்னவோ இரண்டு பெண் பாத்திரங்களை மட்டுமே மையப்படுத்துகிறது. கூடவே, கதையின் மைய இழையை எந்த இடத்திலும் தவறவிடாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பை ஏந்தி நிற்கிறது.

அந்த வகையில் ஆதித்ய தார் – மோனல் தக்கார் எழுதிய திரைக்கதைக்குத் திரையில் உருவம் தந்திருக்கும் இயக்குனர் ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே ஆச்சர்யப்படுத்துகிறார். அவர் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் ‘டாவின்சி கோடு’ போன்ற ஆங்கிலப் படங்களை நினைவூட்டுகின்றன.

படத்தில் சில காட்சிகள் பின்னணி இசை சிறிதும் அற்று நகர்கின்றன. அதேநேரத்தில், ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள திரைக்கதையில், ஒரு அத்தியாயம் முடிந்து அடுத்த அத்தியாயம் தொடங்குமிடத்தில் மௌனத்திற்குப் பதிலாக அதிர வைக்கும் இசையைத் தந்து சுவாரஸ்யம் சேர்க்கிறார் இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவ். மிகச்சில இடங்களில், காட்சிகளின் உள்ளடக்கத்தில் இருக்கும் பரபரப்பைப் பன்மடங்காக மாற்றும் நோக்கில் அமைந்திருக்கிறது அவர் தந்துள்ள இசை.

சித்தார்த் தீனா வாசனியின் ஒளிப்பதிவானது பெரும்பாலும் பாத்திரங்களை ‘குளோஸ் அப்’பில் காட்டுகிறது. அதேநேரத்தில், திரைக்கதையில் உருவாகும் திருப்பங்களை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் காட்சிகள் நிகழும் களங்களை ‘பறவைப் பார்வை’யில் காட்சிப்படுத்தியிருக்கிறது. கேமிரா கோணங்களை அவர் தீர்மானித்த விதமே, தேவையான அளவுக்கு இதில் பிரமாண்டம் உண்டு என்ற நம்பிக்கையைத் துளிர்க்க வைக்கிறது.

சிவகுமார் வி.பணிக்கரி படத்தொகுப்பானது, ஆங்காங்கே வரும் பிளாஷ்பேக்குகளை எந்தவிதக் குழப்பமும் இன்றி நாம் புரிந்துகொள்ள வகை செய்திருக்கிறது.

பாத்திரங்களின் பெயர், பணி ஆகியன எழுத்துருக்களின் வழியே நமக்கு விளக்கப்படுகிறது; போலவே, காட்சிகளுக்கான களங்களும், அவை நிகழும் காலமும் சொல்லப்படுகின்றன. வழக்கமாக, இது போன்ற தகவல்கள் கதையோட்டத்திற்குத் தடையாக அமையும். இதில் அவ்வாறில்லை. அதனை மிகக்கவனமாகச் செயல்படுத்தியிருக்கிறது படக்குழு.

இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப் எக்ஸ் என்று இதில் சிலாகிக்கப் பல அம்சங்கள் உண்டு.

அபாரமான காட்சியாக்கம்!

கேமிரா ஒரு இடத்தில் நிலை கொண்டிராமல், பெரும்பாலான பிரேம்களில் சுற்றிச் சுழன்றாடுகிறது. பாத்திரங்களின் முக பாவனைகளை அளவுக்கு மீறிக் காண்பிக்கவில்லை; அதேநேரத்தில், சட்டென்று அவற்றைக் கடந்து சென்றுவிடவும் இல்லை.

திரையில் காட்சி இப்படித்தான் அமையும் என்பதை முன்கூட்டியே கணித்து ஆக்கம் செய்தால் மட்டுமே அந்த மாயாஜாலம் நிகழும். காட்சியாக்கத்தின் கால அளவு இவ்வளவுதான் இருக்கும் என்பதை எழுத்தாக்கத்தின்போது தீர்மானித்தால் மட்டுமே அதனைச் சாத்தியப்படுத்த முடியும். அந்த வகையில், மிகச்சிறப்பான அனுபவத்தைத் தருகிறது ‘ஆர்ட்டிகிள் 370’.

இந்த படம் பேசும் அரசியலில் சிலருக்கு முரண்கள் தோன்றலாம். இன்னொரு தரப்பின் கருத்துகளையும் சேர்த்திருக்கலாமே என்ற விமர்சனம் முன்வைக்கப்படலாம். ஆனால், படம் பார்க்கையில் அந்த எண்ணம் ஏற்படாத வகையிலேயே மொத்த திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் மையப்பாத்திரங்களை ஆண்களாகக் காட்டுவதே வழக்கமாகச் செயல்படுத்தப்படும் ஒரு உத்தி. ஆனால், அதனை மீறிய வகையில் புத்துணர்வைத் திரையில் பரப்பியிருக்கிறது ‘ஆர்ட்டிகிள் 370’ குழு.

‘பொலிடிகல் த்ரில்லர்’ வகைமையில் படம் எடுப்பதென்பது பெருஞ்சவால். காரணம், திரையில் முன்வைக்கப்படும் தரவுகள் படம் பார்ப்பவரை அயர்வுக்கு உள்ளாக்கும். அந்த தடையை வெகு அனாயாசமாகத் தாண்டிய வகையில் இயக்குனர் ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலேவின் ‘ஆர்ட்டிகிள் 370’ கவனம் ஈர்க்கிறது..

– உதய் பாடகலிங்கம்

#Article_370_review #ஆர்ட்டிகிள்_370_விமர்சனம் #யாமி_கவுதம் #பிரியா_மணி #சிவகுமார்_வி_பணிக்கரி# சித்தார்த் #தீனா #வாசனி #சாஸ்வத்_சச்தேவ் #ஆதித்ய_தார் #மோனல்_தக்கார் #ஆதித்ய_சுஹாஸ்_ஜம்பாலே #yami_gowtham #priya_mani #sivakumar_v_panikari #dheena #vasani #siddharth #saswath #athiya_dhar #monal_thakkar #athithya_sugas_jambale

You might also like