விளையாட்டுகளை மையப்படுத்திப் பல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. தமிழில் கூட கபடி, கிரிக்கெட் போன்றவற்றை முன்னிறுத்திய படங்களுக்கு நடுவே சேவல் சண்டை, ஜல்லிக்கட்டை மையப்படுத்திச் சில படங்கள் வெளியாகின்றன.
அந்த வகைமையில் மகுடம் போன்றிருக்கிற ‘ஆடுகளம்’ பாணியில் அமைந்துள்ளது ‘பைரி பாகம் 1’.
வானத்தில் பறக்கவிடப்படும் புறா எத்தனை மணி நேரம் நிற்காமல் வலம் வருகிறது என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.
இதனைப் பரபரப்பான திரைக்கதையாக மாற்ற முடியுமா? திரையில் வைத்த கண்ணை வேறு திசையில் திருப்பாமல் பார்க்க முடியுமா?
இக்கேள்விகளுக்கு என்ன பதிலைத் தருகிறது இந்த ‘பைரி பாகம் 1’.
நாயகனின் ஆசை!
‘பைரி பாகம் 1’ கதை முழுக்கவே நாகர்கோவில் வட்டாரத்திலுள்ள அருகுவிளை பகுதியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ‘பைரி’ என்பது வானில் பறக்கவிடப்படும் புறாவை விரட்டிப் பிடித்துக் கொல்லும் கழுகு அல்லது பருந்துகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கத்திற்குச் (சையத் மஜித்) சிறு வயதில் இருந்தே புறா பந்தயம் என்றால் உயிர்.
அவரது தாயோ (விஜி சேகர்), அதனைக் கடுமையாக வெறுப்பவர். ‘புறா வளர்த்தவன் எவனாவது இங்க ஒழுங்கா வாழ்ந்திருக்கானால..’ என்று அறிவுரை சொல்பவர்.
தாயின் பேச்சை மீறி, ஒருகட்டத்தில் மாடியில் புறாவுக்கு கூண்டு அமைக்கிறார் லிங்கம் அதற்கு, அவரது நண்பன் அமல் (ஜான் கிளாடி) உதவுகிறார்.
இது, ‘நீங்கள்லாம் வெளங்காமத்தான் போவீய..’ என்று சாபம் விடும் அளவுக்கு லிங்கத்தின் தாயை வெறுப்பில் ஆழ்த்துகிறது.
புறாக்களை வளர்த்து விற்பனை செய்வதில் அமல் கெட்டி என்றால், புறா பந்தயத்தை நடத்துவதையே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் ரமேஷ் பண்ணையார் (ரமேஷ் ஆறுமுகம்).
அவர், அந்த பகுதியில் செல்வாக்குமிக்கவராகத் திகழ்பவர். லிங்கம் உட்படப் பல இளைஞர்கள் அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள்.
புறாக்களைப் பந்தயத்திற்குத் தயார்படுத்துவதற்காகப் பெற்றோர், தன் மீது உயிராக இருக்கும் மாமன் மகள் (சரண்யா ரவிச்சந்திரன்), கல்லூரிக் காலத்தில் தனை ஈர்த்த ஷாரோன் (மேகானா) மற்றும் படிப்பு, வேலை என்று பலவற்றையும் உதறத் தயாராக இருக்கிறார் லிங்கம்.
இந்த நிலையில், புறாக்களுக்குப் பயிற்சியளிக்கும் விஷயத்தில் அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த வில்லியத்திற்கும் (கார்த்திக் பிரசன்னா) பிரச்சனை ஏற்படுகிறது.
அடிக்கடி வம்பு வளர்த்து லிங்கத்திடம் அடி வாங்கும் வில்லியம், புறா பந்தயம் நடக்கும்போது வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கிறார்.
அதற்கேற்றாற் போல, அப்பகுதியைச் சேர்ந்த பெரிய ரவுடியான சுயம்புவின் (வினு லாரன்ஸ்) வீட்டில் பந்தயம் நடக்கும்போது அங்கு செல்கிறார் லிங்கம். போட்டியின் விதிமுறைகள் மீறப்படுவதாகக் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
அதையடுத்து, லிங்கத்தைச் சுயம்புவுடன் மோத வைக்கும் சூழ்ச்சியில் இறங்குகிறார் வில்லியம். அதன் விளைவாக, இருவருக்குள்ளும் பகை முளைக்கிறது.
பதிலுக்கு, லிங்கம் பந்தயம் விடும் நாளன்று குழப்பம் விளைவிக்கிறார் சுயம்பு. அந்த கோபத்தில் அவரைத் தாக்கச் செல்கிறார் லிங்கம். ஆனால், சுயம்புவிடம் கத்திக்குத்து வாங்கி மருத்துவமனையில் ‘அட்மிட்’ ஆகிறார்.
அதற்குப் பழி தீர்க்கக் களமிறங்குகிறார் அமல். ஆனால், நேரடியாகச் சண்டையிடும் அளவுக்கு அவர் தைரியசாலி அல்ல. அதனால், சுயம்புவைப் பின்னால் இருந்து குத்துகிறார். ஆனால், அவர் உயிர் பிழைத்துவிடுகிறார்.
ஆத்திரத்தின் உச்சத்திற்குச் செல்லும் சுயம்பு, அமலையும் லிங்கத்தையும் கொன்றே தீர்வது என்பதில் மூர்க்கத்தனம் காட்டுகிறார். அது, பயத்தில் அமல் மூழ்கக் காரணமாகிறது.
அதுவரை வீராப்பு காட்டிய லிங்கம் கூட, நண்பன் அமல் உயிர் பிழைக்க வேண்டுமென்ற நோக்கோடு ‘சுயம்புவிடம் சமாதானம் பேசுங்க’ என்று ரமேஷிடம் வலியுறுத்துகிறார். ஆனால், தனது பழி வாங்கும் உணர்வை எவருக்காகவும் விட்டுத்தருவதாக இல்லை சுயம்பு.
அதையும் மீறி, பெரிய இடத்து உத்தரவுகள் அவரது உறுதியைக் குலைக்கின்றன. சமாதானம் ஆவதாகத் தன்னைத் தேடி வந்த பெரும்புள்ளிகளிடம் பொய்யாக வாக்குறுதி தருகிறார். அதன்பிறகும், அவரிடம் பழி வாங்கும் எண்ணம் அப்படியே இருக்கிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் லிங்கம் வெளியூர் சென்று வேலை தேட முடிவெடுக்கிறார். அமல் பழையபடி ஊருக்குள் நடமாடுகிறார். இந்த நிலையில், அமலைக் கொல்ல சுயம்புவின் ஆட்கள் தயாராகின்றனர்.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
ஒரு படத்தின் இடைவேளைப் பகுதியோடு ‘எண்ட் கார்டு’ போட்டது போன்று இதன் முடிவு அமைந்துள்ளது. அதன்பிறகு, இரண்டாம் பாகத்தில் உள்ள விஷயங்கள் லேசாகக் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. அது நிச்சயம் அதிருப்தியைத் தரும்.
‘பைரி பாகம் 1’ முழுக்கவே நாயகனின் புறா வளர்க்கும் ஆசையே நிறைந்து நிற்கிறது. நாம் காணும் அந்த உலகம் இதுவரை தமிழ் திரைப்படங்களில் காணாதது.
அசத்தும் ஒளிப்பதிவு!
‘பைரி பாகம் 1’ ட்ரெய்லரே ‘இது சின்ன பட்ஜெட் படம்’ என்பதைச் சொல்லிவிடுகிறது.
அந்த எண்ணத்தை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, திரையில் பிரமிப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி.
கூடவே, அமல் என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளார். இக்கதையில் அவரது பாத்திரத்தை ‘கட்’ செய்தால் பலவற்றை நாம் இழக்க வேண்டியிருக்கும். அதுவே அப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
நாயகனாக நடித்துள்ள சையத் மஜித் ஆக்ரோஷமான காட்சிகளில் மிளிர்கிறார்; ஆனால், அதுவே தொடர்கதையாகும்போது போரடிக்கிறது. மற்றபடி, தான் ஒரு நாயகன் என்ற நம்பிக்கையைத் தனது உடல்மொழி மூலம் அவர் வெளிப்படுத்தியிருப்பது அருமை.
மேகானா, சரண்யா ரவிச்சந்திரன் என்று இரண்டு இளம்பெண் பாத்திரங்கள் உண்டு. அவர்களுக்கு இரண்டொரு காட்சிகளில் மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது.
நாயகனின் பெற்றோர் நடிப்பு அருமை என்றபோதும், இருவரில் தாயாக நடித்துள்ள விஜி சேகர் நாகர்கோவில் வட்டார மொழியையும் உணர்வுக் கொந்தளிப்பையும் திரையில் கடத்திய வகையில் மனதை அள்ளுகிறார்.
பல காட்சிகள் சட்டென்று நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும் வகையில் அமைந்ததற்கு அவரது நடிப்பே காரணம்.
ரமேஷ் ஆறுமுகத்தின் மிடுக்கு, படத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. போலவே, வில்லனாக வரும் வினு லாரன்ஸும் நம்மை மிரட்டியிருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், அவர்களது குடும்பத்தினர், எதிர்தரப்பினர், இதர போட்டியாளர்கள், வில்லனின் ஆட்கள், அக்கம்பக்கத்தினர் என்று பலர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.
அமல் தந்தையாக நடித்துள்ள மாற்றுத்திறனாளி கலைஞர் அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார். அனைவரது சிறப்பான நடிப்பே, இப்படத்தின் ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியிருக்கிறது.
ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு, கதை நிகழும் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாக மாறிய உணர்வை ஏற்படுத்துகிறது.
சந்துபொந்தெங்கும் அலைந்து திரிந்தாலும், அவரது கேமிரா மிகச்சில இடங்களில் மட்டுமே அதீத வெளிச்சத்தைத் தாங்குகிறது. அதில் அவர் காட்டியிருக்கும் கவனமே, படத்தின் பட்ஜெட்டை மீறி இதனைப் பிரமாண்டமானதாக மாற்றியிருக்கிறது.
இசையமைப்பாளர் அருண் ராஜின் இசையில் ‘நீ பார்க்கும் பார்வை’ பாடல் உடனடியாக ஈர்க்கிறது. டைட்டிலில் வில்லிசையின் வழியே ராஜலிங்கம் பாத்திரத்தை விளக்கும் உத்தியும் பலன் தந்திருக்கிறது.
குறிப்பாக, நாயகன் புறாவுக்குப் பயிற்சியளிக்கிற, பந்தயத்தில் கலந்துகொள்ளச் செய்கிற தருணங்களில் பின்னணி இசை பரபரப்பை ஊட்டுகிறது.
மேலும் அனிஷின் கலை வடிவமைப்பு, ஆர்.எஸ்.சதீஷ்குமாரின் படத்தொகுப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, சண்டைக்காட்சி வடிவமைப்பு என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் உச்சபட்ச நேர்த்தியை வெளிப்படுத்தியுள்ளன.
புறாக்களை ‘குளோஸ்அப்’பில் காட்டும் இடங்களில் மட்டும் ‘விஎஃப்எக்ஸ்’ திருப்தியளிக்கவில்லை. ஒளிப்பதிவிலும் விஎஃப்எக்ஸிலும் பட்ஜெட்டை அதிகப்படுத்தியிருந்தால், இப்படம் தரும் காட்சியனுபவம் வேறுவிதமாக அமைந்திருக்கும்.
நாஞ்சில் நாட்டுக் கூறுகள்!
படத்தின் தொடக்கத்திலேயே, இக்கதையில் வரும் பெரும்பாலான மனிதர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று உணர்த்திவிடுகிறார் இயக்குனர் ஜான் கிளாடி.
அதனால், அது சார்ந்த பேச்சு வழக்கு, வாழ்க்கை முறை, கலாசாரக் கூறுகளைத் திரையில் நிறைத்திருக்கிறார்.
அவற்றில் அய்யா கோயில் அடியாராகச் சில பாத்திரங்கள் நெற்றியில் திருமண் இட்டுக் கொள்வதும், மாதா கோயிலில் உப்பும் மிளகும் காணிக்கை இடுவதும் நம்மை ஈர்க்கும்.
புறாக்களை வாங்கி வளர்ப்பது, அவற்றில் பந்தயத்தில் ஈடுபடக் கூடியவற்றைப் பிரித்தெடுப்பது, அவற்றுக்குப் பயிற்சியளிப்பது, முடிவில் அவற்றின் பறக்கும் திறனை அதிகப்படுத்துவது என்று புறா பந்தயம் சார்ந்த உலகத்தையும், அதிலிருப்பவர்களின் ஆக்ரோஷமான மனநிலையையும், வெற்றி பெறும் வெறியையும் மிகச்சரியாகக் கடத்தியிருக்கிறார் இயக்குனர்.
நாயகிக்கு முக்கியத்துவமின்மை, படத்தின் முடிவில் தெளிவின்மை, திரையில் கொப்பளிக்கும் வன்முறை என்று சில குறைகள் இந்த ‘பைரி பாகம் 1’ல் உண்டு.
ஆனால், வில்லிசையின் வழியே இக்கதையை இரு பாத்திரங்கள் மக்களிடம் சொல்வதாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி அவற்றை மூடி மறைக்கிறது.
புறாக்களை ஆசையுடன் வளர்ப்பவர்களே, பறக்க இயலாதவற்றைக் குழம்பாக்கிச் சாப்பிடுவதையும் இயல்பாகக் காண்பித்திருக்கிறார் இயக்குனர்.
இதன் மூலமாக, எதையும் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யும் பாங்கை இதில் காண முடிவதில்லை என்பது இன்னொரு சிறப்பு.
போலவே, அமல் பாத்திரத்தை வார்த்திருக்கும் விதம் மொத்தப் படத்தையும் புதிதாக உணரச் செய்கிறது.
இவற்றோடு நாஞ்சில் நாட்டுக் கூறுகளையும் ஆங்காங்கே தெளித்திருப்பது ‘மக்கா’, ‘மக்களே’ வார்த்தைகளையும் மீறி அம்மண்ணின் வாசத்தை நாம் உணரச் செய்திருக்கிறது.
இதேபோல், நாயகன் வீட்டில் காமராஜர், சிவாஜி, பிரபுவின் புகைப்படங்கள் இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். அதேபோல், ஒரு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபுவின் பாடலை நாயகனின் தந்தை ரசிப்பதாக ஒரு காட்சியும் இந்தப் படத்தில் உண்டு.
இதுப்போன்ற அம்சங்களே அந்தப் பகுதியில் உள்ள மக்களின் சினிமா ரசனை, அரசியல் புரிதல் போன்றவற்றை நமக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில் ‘சிட்டி ஆஃப் காட்’, ‘அங்கமாலி டயரீஸ்’, ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘சுப்பிரமணியபுரம்’ போன்று ரத்தமும் சதையுமான மனிதர்களையும் ஒன்றோடொன்று பிணைந்த சிலரது வாழ்வையும் காட்டி நம்மை வசீகரிக்கிறது இந்த ‘பைரி பாகம் 1’.
அடுத்த பாகத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறோம் இயக்குனர் ஜான் கிளாடி. அதில் நீங்கள் கொட்டும் உழைப்பினைக் கண்டபிறகு, சக படைப்பாளிகள் உங்களைக் கொண்டாடுவது நிச்சயம்!
– உதய் பாடகலிங்கம்