ரணம்: முக்கால் கிணறு தாண்டினால் போதுமா?

காமெடிப் படங்கள், பேய்ப் படங்கள் போன்று ‘த்ரில்லர்’ படங்கள் பார்ப்பதை ஒரு ட்ரெண்டாக கொள்வது கடினம். காரணம், திரைக்கதை நேர்த்தி கொஞ்சம் பிசகினாலும் அது தரும் மொத்தக் காட்சியனுபவமும் தன்னிலை திரிந்துவிடும்.

ஆனாலும், அந்த வகைமையில் பாதிக்கிணறு தாண்டுவதே சாதனை என்றெண்ணிச் சில படங்கள் வெளிவந்து நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கும். மிகச்சில படங்களே தரமாக அமைந்து திருப்தியை வாரி வழங்கும்.

அந்த வகையில், புதுமுகம் ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோம்ப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பத்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ரணம் அறம் தவறேல்’ நமக்குத் தரும் அனுபவம் எத்தகையது?

காற்றடைக்கப்பட்ட பலூன்களாக..!

எத்தனைதான் சிதைந்த நிலையில் பிணம் கிடைத்தாலும், அதன் முகத் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்று அச்சடித்தாற் போன்று வரையும் இயல்பு கொண்டவர் சிவா (வைபவ்).

அதனால் காவல் துறையைச் சேர்ந்த சிலர் தங்களது வழக்கு விசாரணைக்கு அவரது திறமையைப் பயன்படுத்துகின்றனர்.

சினிமாவில் இயக்குனராகத் துடித்த சிவா, தன்னோடு பணியாற்றிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்.

அதன்பிறகு நடக்கும் ஒரு விபத்தில் அவருக்கு நினைவுகள் மறந்துபோக, அந்த பெண்ணோ இறந்து போகிறார்.

அந்த விபத்தில் இருந்து மெல்ல மீள்வதற்கு, சிவாவுக்கு ஒரு உதவி இயக்குனர் உதவுகிறார். நான்கைந்து ஆண்டுகள் ஆனபிறகும் அந்த நிலையில் மாற்றமில்லை.

இந்தச் சூழலில், ஒருநாள் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (பத்மன்) அவரை அழைக்கிறார். ஏரியில் இருந்து ஒரு பெண் பிணம் கிடைத்ததாகவும், அதன் முகம் நன்றாகத் தெரிய வேண்டுமென்றும் சொல்கிறார்.

சிவாவும் அவ்வாறே வரைந்து தருகிறார். ஆனால், அந்த பெண் காணாமல் போனதாக எந்தக் காவல்நிலையத்திலும் பதிவாகவில்லை.

அதேநேரத்தில், பிணம் காணாமல் போனதாகத் தரப்பட்ட புகாருடன் அவரது படம் பொருந்திப் போகிறது. அதனைத் தொடர்ந்து, இதேபோல பல பெண் பிணங்கள் காணாமல் போனதாகத் தெரிய வருகிறது.

இந்த நிலையில், மாதவரம் காவல்நிலையம் மற்றும் அருகேயுள்ள சில பகுதிகளில் அட்டைப் பெட்டிகளில் கை மற்றும் கால்கள் தனியாகத் துண்டிக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கிடைக்கின்றன.

அவற்றைக் காணும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சிவாவை அழைத்து, ‘நீங்கள் இந்த வழக்கில் தலையிட வேண்டாம்’ என்று அழுத்திச் சொல்கிறார். அடுத்த நாள் முதல் அவரைக் காணவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து ராஜேந்திரனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கும் இந்துஜா (தான்யா ஹோப்) இந்த வழக்கை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்று வேகம் காட்டுகிறார்.

அப்போது, பெண் பிணங்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற நபரின் அடையாளம் தெரிய வருகிறது. போலீசார் பிடிக்க முயலும்போது, அவர் தப்பியோடுகிறார்.

அடுத்த நாள் காலையில் முகம் மட்டும் தனியாக எரிந்த நிலையில் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த முகத்தை வரையும் சிவா, அது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்தான் என்கிறார். காவல் துறை ஏதேனும் ஒரு ‘க்ளு’வை பிடித்து முன்னேறினால், மீண்டும் சறுக்கலே நேர்கிறது.

அவர்தான் நடந்த குற்றங்களுக்குக் காரணம் என்று போலீஸ் தரப்பு எண்ணும் நிலையில், அவரே இறந்து போகிறார்.

அப்படியென்றால் நடக்கும் தவறுகளை யார் என்ற கேள்வியை நோக்கி விசாரணை நகர்கிறது. அதற்கு இணையாக, சிவாவும் களத்தில் இறங்குகிறார்.

பிணங்கள் ஏன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து காணாமல் போகின்றன? கொல்லப்பட்ட நபர்கள் யார்?

அதன் பின்னணியில் இருப்பது யார்?

இந்த வழக்கில் போலீசார் சரியான திசையில்தான் விசாரணை மேற்கொள்கிறார்களா?

இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில்களைத் தேடிச் செல்லும் சிவா, அதன் பின்னணியில் மோசமானதொரு விஷயம் இருப்பதை அறிகிறார்.

அது அவரது வாழ்வோடும் சம்பந்தப்பட்டிருப்பதை பிற்பாடு உணர்கிறார். அது என்ன என்பதோடு முடிகிறது ‘ரணம் அறம் தவறேல்’.

உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு, ‘எம்பால்மிங்’ முறையில் சீராக்கப்பட்ட பிணங்கள் ‘காற்றடைக்கப்பட்ட பலூன்களாக’ கிடைப்பதுதான் இந்தக் கதையில் ‘கொக்கி’ போட்டு இழுக்கும் அம்சம்.

வைபவ் 25!

‘ரணம் அறம் தவறேல்’ – இது வைபவ் நடித்த 25-வது திரைப்படம். பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், கொஞ்சம் அப்பாவித்தனத்தோடும் குயுக்தியோடும் இருப்பவராகத் தன்னைத் திரையில் காட்டிக் கொள்வதில் மனிதர் கலக்கிவிடுவார்.

இதிலும் அப்படியே! தாடி, மீசையில் நரை தெரிய, லேசான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் வந்து போயிருக்கிறார்.

‘சிக்சர்’ போன்ற படங்களால் அவர் கவனம் பெற்றாலும், ‘ஆர்கேநகர்’ போன்றவை ரசிகர்களின் பார்வையில் படாமலே போயிருக்கின்றன.

காட்சியாக்கத்தில் இருக்கும் நேர்த்தி குறைவும், சந்தைப்படுத்துதலில் இருக்கும் போதாமையுமே அதற்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தால், எதிர்காலத்தில் நிறைய வெற்றிப் படங்களைத் தரலாம்.

ஏனென்றால், அவரது பெரும்பாலான படங்கள் ஒரு கதையாக நம்மை ஈர்ப்பவைதான்.

வைபவ்வின் ஜோடியாக வரும் சரஸ் மேனனுக்கு ஒரு பாடல், இரண்டொரு காதல் காட்சிகளைத் தந்திருக்கிறார் இயக்குனர். சட்டென்று கவரும் வகையிலும் அவரது தோற்றம் இருக்கிறது.

முகத்தில் கடுமையைப் படரவிடும் தான்யா ஹோப், இதில் காதல் காட்சிகளில் நடித்து நம்மைக் கடுப்பேற்றவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து போக்கும் அவர், வைபவ் பாத்திரத்துடன் உடனடியாக ‘ஜெல்’ ஆவதாகக் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.

‘க்ரைம் ஸ்டோரி’ எழுதுவதன் மூலமாகக் காவல் துறையின் விசாரணைக்கு உதவும் வைபவ்வின் வீட்டில் நந்திதாவின் புகைப்படங்களும் இருக்கும்.

ஏன் அவரது படம் அங்கிருக்கிறது என்பதற்கு பிளாஷ்பேக்கில் விளக்கம் தருகிறார் இயக்குனர்.

அந்த பகுதியில் நந்திதாவின் நடிப்பு அருமையாக உள்ளது. அவரது மகளாக வரும் பிரனதி நம்மைச் சட்டென்று ஈர்க்கிறார். ‘சாட் பூட் த்ரி’க்கு பிறகு இது நல்லதொரு வாய்ப்பு.

இன்னும் சக்தி சரவணன், அவரது மனைவி, மகனாக நடித்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வருபவர் என்று சிலர் திரையில் வந்து போகின்றனர்.

அவர்களை மீறி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனாக நடித்த பத்மனும், கான்ஸ்டபிளாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியும் முக்கியத்துவம் பெறுகிறார். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்திக்கு வேறொருவர் குரல் கொடுத்திருப்பது தான் ஒட்டவில்லை.

பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு, பிரேமில் கருப்பு, சாம்பல் வண்ணங்களைக் கலந்து நம்மை ‘த்ரில்’ மூடுக்கு கொண்டு செல்கிறது. அதேநேரத்தில், பிளாஷ்பேக் காட்சிகளில் ‘பளிச்’சென்றிருக்கும் பிரேம்களை கண்ணில் காட்டியிருக்கிறது.

‘இதெல்லாம் பார்க்க வேண்டுமா’ என்றெண்ணும் சில விஷயங்களைத் திரையில் காட்டுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அந்த வகையில், மணிமொழியன் ராமதுரையின் கலை வடிவமைப்பு நம்மைக் கவனிக்க வைக்கிறது.

அரோல் கரோலியின் இசையமைப்பில் பாடல்கள் ‘கேட்கலாம்’ ரகம். அதனை மீறி, அதிரும் பின்னணி இசையால் காட்சிகளுக்கு அவர் உயிரூட்ட முயன்றிருக்கிறார்.

முனீஸின் படத்தொகுப்பானது ‘சில காட்சிகளைக் காணோமே’ என்று நம்மை யோசிக்க வைக்கிறது. முதல் பாதியில் பரபரப்பையூட்டும் வகையில் படத்தைத் தொகுத்தவர், இரண்டாம் பாதியில் அதனைத் தொலைத்திருக்கிறார்.

இயக்குனர் வடிவமைத்த திரைக்கதையும் அதற்கொரு காரணம். இந்தக் கதையில் முக்கியமான பிரச்சனையொன்றைப் பேசுகிறார் இயக்குனர் ஷெரிஃப். அது பார்வையாளர்களுக்கு ‘ஷாக்’ தரும் என்றும் யோசித்திருக்கிறார்.

ஆனால், அதனை அருவெருப்பாக உணராத வகையில் மிக அழுத்தமாகத் திரையில் சொல்வதில் இடறியிருக்கிறார்.

சறுக்கும் இடங்கள்!

மூன்று நாயகிகள் இருந்தும், திரைக்கதையில் அவர்கள் ஒருவருக்கும் முக்கியத்துவம் தராமல் விட்டிருக்கிறது திரைக்கதையின் போதாமை. அதுவே முதல் சறுக்கலாகத் தென்படுகிறது.

‘புதைக்கப்பட்ட இடத்தில் பிணங்கள் ஏன் காணாமல் போகின்றன’ என்ற ஒற்றைக் கேள்விக்குப் பின்னால் கதை நகர்கிறது. அதனைத் தொடர்ந்து செல்லும்போதுதான் எரிக்கப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் கிடைப்பதாக நகர்கிறது திரைக்கதை.

அது தரும் சஸ்பென்ஸை தக்க வைத்து அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்குப் பதிலாக, அந்த பிணங்கள் என்னவாகின்றன தெரியுமா என்று சொல்ல ஆரம்பிக்கும்போது சறுக்குகிறது திரைக்கதை.

தான் சொல்லவரும் விஷயம் ‘தணிக்கை’யில் ‘கட்’ ஆகிவிடும் என்பதையும் மறந்திருக்கிறார். அதுதான் ‘ரணம் அறம் தவறேல்’ படத்திலுள்ள முக்கியப் பிரச்சனை.

இதற்கு மேல் நாம் சொல்லப்போகும் விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ வகையறாவில் சேர்ந்துவிடும். ஆதலால், அதனை விரும்பாதவர்கள் இந்த வரியோடு நின்றுவிடலாம்.

இந்த படத்தின் திரைக்கதை கிட்டத்தட்ட மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ படத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்வது வில்லனா அல்லது வேறு நபர்களா என்று ‘யுத்தம் செய்’ படத்தில் நமக்குத் தெரிய வருமிடம் ரொம்பவும் சுவாரஸ்யம் தரும். இதிலும் அப்படியொரு இடம் வருகிறது. ஆனால், அதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அளவுக்குக் காட்சிகள் இல்லை.

சினிமா இயக்குனராக நினைத்த வைபவ்வுக்கு நினைவுகள் மறந்துபோவது ஒரு முக்கியப் பிரச்சனை.

அப்படிப்பட்டவர் விபத்தில் அடிபட்டு நினைவுகளை மீட்டெடுக்கப் போராடும் காலகட்டத்தில், ஏன் காவல் துறைக்கு ‘க்ரைம் ஸ்டோரி’ எழுதிக் கொடுத்தும், சிதைந்த நிலையில் இருக்கும் முகங்களை வரைந்தும் தருகிறார். அதற்குத் திரைக்கதையில் பதில் இல்லை.

’கோ’ (கோ-டைரக்டர் என்பதன் சுருக்கமாம்) என்றழைத்துக்கொண்டு வைபவ் உடனே ஏன் ஒரு உதவி இயக்குனர் திரிகிறார்? அதற்கும் பதில் இல்லை.

வைபவ் மற்றும் நந்திதா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் தனித்தனியே வருகின்றன. அவை இரண்டும் ஒன்றோடொன்று சம்பந்தப்படுகிறதா என்பதற்கான காரணத்தை இறுதியாகச் சொல்கிறார் இயக்குனர் ஷெரிஃப்.

எல்லாம் ஓகே. ஆனால், அவற்றை அழுத்தம் திருத்தமாக, தெளிவாகச் சொல்லியிருக்கலாமே என்பதுதான் வருத்தம்.

அந்தச் சறுக்கலைச் சரி செய்திருந்தால் இந்த படம் சிறந்த ‘த்ரில்லர்’ ஆக உருமாறியிருக்கும். அதனைச் செய்யாத காரணத்தால், முக்கால் கிணறு தாண்டியபிறகு அந்தரத்தில் நின்றுவிடுகிறது ‘ரணம் அறம் தவறேல்’.

– உதய் பாடகலிங்கம்

You might also like