அன்று பார்த்தவை எல்லாம் மாறிவிட்டதே!

– கோவி. லெனின்

பயணத்தின்போது நண்பர்களுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மை. களைப்பில் எப்போதேனும் அசந்து தூங்கினால் சட்டென எழுப்பி, “இது எந்த இடம்னு சொல்லு?“ என்பார்கள்.

ரயில் பயணமாக இருந்தால் கண்விழித்த நொடியில் சொல்லிவிடுவேன். சாலை வழிப் பயணம் என்றால் ஓரிரு முறை இமைகள் படபடத்தபின் பதில் வந்துவிடும்.

திருவாரூர் – தஞ்சாவூர் பாதையில் பகலாக இருந்தாலும், இரவாக இருந்தாலும் எந்த இடம் என்பதை சில நொடிகளில் என்னால் சொல்லிவிட முடியும்.

கல்லூரிப் பருவத்தின் 3 ஆண்டுகால ரயில் பயணத்தின் நினைவுகள் 30 ஆண்டுகள் கடந்தபிறகும் மனதில் அப்படியே உறைந்திருக்கும்.

இப்போதும் அந்தப் பாதையில் ரயில் பயணம் என்றால் வழியில் உள்ள கேட்களைக் கடக்கும்போதும், சாலைப் பயணத்தின் போது கேட் மூடியிருந்தால் கொஞ்ச நேரம் இறங்கி நின்று இளைப்பாறுகையிலும் இளமையின் நினைவுகள் ஊஞ்சலாடும்.

இந்த முறை பயணிக்கும்போது நண்பர்கள் யாரும் அருகில் இல்லையென்றாலும், “இது எந்த இடம்?” என்ற கேள்வியைக் கேட்டு, விடை தெரியாமல் குழம்பியது மனது. குறுக்கிடும் ரயில்வே கேட்டுகளைக் காணவில்லை.

அதைவிட ஆச்சரியம், “நூறு மீட்டர் கடப்பதற்குள் ஒரு வளைவாவது இருந்தே தீரும் எங்கள் டெல்டா பகுதியில் இத்தனை நேரான சாலையா? வழி தவறிப் பயணிக்கிறோமா?“ என்ற எண்ணம் தோன்றியது.

நாகை – கூடலூர் – மைசூரு நெடுஞ்சாலை என்று பெயர் மட்டும் பெரிதாக இருந்தாலும் வளைந்து நெளிந்தும், பள்ளம் – படுகுழியாகவும், 5 ரயில்வே கேட் குறுக்கிடும் வகையிலும் இருந்த திருவாரூர் – தஞ்சாவூர் சாலைக்கு உண்மையான விடியல் இப்போதுதான் பிறந்திருக்கிறது.

புறவழிச்சாலைத் திட்டத்தை கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசிடம் முனைந்து கொண்டு வந்தபோதும், அடுத்த பத்தாண்டு காலத்தில் மாநிலத்தை ஆண்டவர்களும், ஒன்றியத்தை ஆள்பவர்களும் கண்டுகொள்ளவில்லை.

மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் ஒரு சில நிர்வாக சிக்கல்களால் ஆமை வேகத்திலேயே வேலை நகர்ந்தது.

வேளாங்கண்ணி, நாகூர் போன்ற திருத்தலங்களுக்கு செல்லக்கூடிய வெளிமாநிலப் பயணிகளும், பக்கத்து ஊர்களில் இருந்து வரும் நண்பர்களும் இது பற்றி குறைப்பட்டும் முறையிட்டும் வந்த நிலையில், தற்போது உரிய அக்கறை செலுத்தப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிந்து, புறவழிச்சாலை நல்ல முறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஊர்கள் வழியே பயணிக்கும் பழைய சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் எம்.எல்.ஏ.வும் மாவட்டக் கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன், தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், ஒன்றிய – மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் திட்டம் நிறைவேறத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி.

கோவி. லெனின்

ஊரில் எங்கள் வீடு அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டரில் புறவழிச் சாலையைப் பிடித்தால் நான் படித்த பூண்டி புஷ்பம் கல்லூரி வரை (45 கி.மீ) எந்தக் குறுக்கீடும் இல்லை. 40 நிமிட அளவில் போய்விடலாம். எப்புட்றா?

(கல்லூரிக் காலத்தில் ஒன்றரை மணி நேரமாகும்)பல காலமாகக் கண்ணில் பட்ட கட்டடங்கள், சிறுபாலங்கள், அதன் கீழ் சலசலக்கும் சிற்றாறுகள், கரையோர மரங்கள், பழைய எனாமல் போர்டை இன்னமும் மாற்றாத கடைகள், ஔிமதி போன்ற அழகிய பெயர்களைக் கொண்ட கிராமங்கள் ஆகியவற்றைப் பயண வழியில் காண முடியவில்லை.

“அன்று பார்த்தவை எல்லாம் மாறிவிட்டதே!” என்ற ஏக்கத்தைவிட, “இப்போதாவது இந்த மாற்றம் வந்ததே” என்ற நிறைவுதான், மனதின் நினைவுகளின் மேல் மகிழ்ச்சியைப் பூசி விளையாடியது.

நன்றி: கோவி. லெனினின் பேஸ்புக் பதிவு

You might also like