புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை.

“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”

என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,

“செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா! என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா”

என்பன போன்ற புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார்.

ஏ – செல் தூக்குக் கொட்டடியின் அருகில் இருக்கிறது. அதில் கூத்தக்குடி சண்முகம், எம்.வி.சுந்தரம், மதுரை வி. கருப்பையா போன்ற முக்கியமான தோழர்கள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கேட்கும்படியாகக் கம்பீரமாக உரத்த குரலில் பாடினார்; பேசினார்.

அப்பொழுது இரவு 2 மணி.

“தோழர்களே இன்னும் ஒன்றிரண்டு மணி நேரமே இருக்கிறது. கழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணியும் தூக்குக் கயிற்றின் நிமிடங்களாகும்; மணிகளாகும். கடைசி முறையாகச் சொல்லுகிறேன்.

உலக சமாதானத்திற்காகவும், பாட்டாளி மக்களின் நல்வாழ்வுக்காகவும் அனைவரும் பாடுபட வேண்டும் என்பதே எனது இறுதி வேண்டுகோள். அதை நிறைவேற்றுங்கள்” என்று தன் சக்தி முழுவதையும் பிரயோகித்துத் தோழர்களை அறைகூவினார்.

நிசப்தம் குடி கொண்டிருந்த அந்த இரவில் சில மணி நேரங்களுக்குள் தூக்கில் மடியப் போகும் ஒரு வீரத் தியாகியின் உரத்த குரல், புனிதமான சொற்கள் மதுரை ஜெயில் முழுவதையும் ஆட்கொண்டது.

எல்லோரும் உடல் சிலிர்த்து நின்றார்கள்.

காலை 4.15 மணிக்கு அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். மெதுவாகக் கம்பி வேலியின் கதவு திறக்கப்படுகிறது.

இப்பொழுது நல்ல இருட்டு. பிறகு நமது அருமை பாலுவின் தூக்குக் கொட்டடி திறக்கப்படுகிறது.

நாதாங்கியின் சத்தம் கணீர் என்று கேட்கிறது. பாலுவின் கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது. புஜங்கள் இறுக்கப்படுகின்றன கண்டத்தை விட்டு கீழிறங்கும்போது,

“புரட்சி ஓங்குக! கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!”

என்று பாலு கோஷம் கொடுத்தார். அவ்வளவுதான் இரவு முழுவதும் கண் விழித்திருந்த ‘A’ செல் தோழர்கள் தம் சக்தி முழுவதையும் திரட்டிக்கொண்டு கோஷம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

“காம்ரேட் பாலு ஜிந்தாபாத்!
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத்!
தொழிலாளர் வர்க்கத்துக்கு ஜே!
செங்கொடிக்கு ஜே!”

என்ற கோஷங்கள் ஜெயிலை அதிர வைத்தன.

அதைத் தொடர்ந்து 9வது பிளாக்கில் இரவு முழுவதும் தூங்காதிருந்த 60 தோழர்களும் ஆக்ரோஷத்துடன் மேற்படி கோஷங்களைக் கோஷித்தார்கள். அதுபோலவே ரிமாண்டில் உள்ள 60 தோழர்களும் சிறை இடிபட முழங்கினர்.

தோழர் பாலுவை அதிகாரிகள் தூக்கு மேடைக்கு இட்டுச் செல்கிறார்கள். போகும் வழியில் ராமநாதபுரம் சதி வழக்கில் ‘A Class’ தோழர்கள் புரஃபஸர் M.G. நாயரும், ஆவுடையப்பனும் லாக்கப் ஆகியிருக்கிறார்கள்.

அவர்களும், “பாலு வாழ்க!” என்று முழங்கினார்கள்.

அதற்கு பாலு “பாலு வாழ்க என்று சொல்லாதீர்கள்; புரட்சி ஓங்குக, கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத் என்று கோஷியுங்கள்” என்று சொன்னார்.

போகும்போதே புரட்சி முழக்கங்களை முழங்கிக்கொண்டே போனார். தூக்கு மேடையில் ஏறியாகிவிட்டது. முகத்தைத் துணி மறைத்து விட்டது.

என்றாலும்,

“புரட்சி ஓங்குக! கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!”

என்று முழங்கிய வண்ணமே தூக்கு மேடையில் நின்றார்.

ஜெயிலின் நாலா திசைகளில் இருந்தும்,

“காம்ரேட் பாலு ஜிந்தாபாத்”

என்ற கோஷங்கள் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.

தூக்கு மேடையில் ஏறுகையிலும் கூட பாலுவின் வாய் ஒலித்த கடைசி ஓசை,

“கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக” என்பதுதான்.

பாலுவின் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டு விட்டது. பாலுவைத் தாங்கி நின்ற பலகையின் விசை உருவி விடப்பட்டது. பாலுவின் உடல் விழுகிறது. உயிர் போகிறது. உடல் தொங்குகிறது. வார்டர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

அதிகாரி கள் கண்ணீர் விடுகிறார்கள். பொது மக்கள் அண்டம் இடிபட ஆயிரக் கணக்கில் கதறிக் கதறி கோஷிக்கிறார்கள்.

சிறையில் 22.02.1951 அன்று காலையில் கருப்புக்கொடி தாங்கி தலை கவிழ்ந்து ஊர்வலம் செல்கிறது.

– ஐ.மாயாண்டி பாரதி

You might also like