கொரோனாவுக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனாவுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களைவிட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் சார்ந்த பிரச்சினை சிலருக்கு ஒரு வருடம் வரை நீடிக்கிறது.

மீதமுள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பிரச்சினையுடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சீனர்களை விட இந்தியர்களுக்குத் தான் அதிக நோய்த்தொற்றுகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் அதிக குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக 207 நபர்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து வேலூர் சிஎம்சி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் டி.ஜே. கிறிஸ்டோபர் (நுரையீரல் மருந்துப் பிரிவு) கூறும்போது, “கொரோனா பாதிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்து ஆய்வு முடிவுகளிலும் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது” என்றார்.

மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சலில் பெந்த்ரே (நுரையீரல் துறை தலைவர்) கூறும்போது, “மிதமான மற்றும் தீவிரமான கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்படவேண்டும். மேலும் ஸ்டீராய்டு சிகிச்சையும் அளிக்கப்படவேண்டும்.

இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படும்போது 95% நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு, பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இதில் 5% நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினையுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்கிறார்.

நன்றி: தினத்தந்தி

You might also like