உங்கள் தோழனாக இருக்கும் ஒரு புத்தகம்!

கோபிநாத் என்று சொல்வதை விட நீயா நானா கோபிநாத் என்று சொன்னால் தான் கூகுளுக்கும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும்.

மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கக்கூடிய விடயங்களை கலந்துரையாடும் நிகழ்ச்சியில் ஒரு புதுமையைப் படைத்தவர் அவர்.

நீயா நானாவைப் பார்த்து பல நிகழ்ச்சிகள் உருவாகின. ஆனால் நீயா நானாவைப் போல ஆக எந்த நிகழ்ச்சியாலும் முடியவில்லை. யாரும் கோர்ட் கோபிநாத் ஆக முடியவில்லை.

ஏன்? ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேசப்படும் விடயங்களிலும், தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிலும், தான் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் இடையறாது கற்றுக் கொண்டிருப்பது தான் காரணம்.

அதனால் தான் கிரிக்கெட்டில் தோனியைப் போல, ரியாலிட்டி டாக் ஷோ எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின் மன்னனாக அவர் திகழ்கிறார்.

‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’ – இதுதான் புத்தகத்தின் தலைப்பு. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட என்பதைப் போல எடக்கு முடக்கான தலைப்பு இது. நா ஏன் இத வாங்கக் கூடாது? நா வாங்குவேன் என முரண்டு பிடித்து வாங்கிய புத்தகம் இது.

ஆயிரமாயிரம் சுயமுன்னேற்ற நூல்களில் இதுவும் ஒன்று. ஆனால் அந்த ஆயிரத்திலும் தனித்துவமாகத் தெரியும் ஒன்று இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி சோறு பதம் என்பார்கள். அது

போல முன்னுரையே இந்த புத்தகம் ஏன் சிறந்தது என்பதற்கு சாட்சி சொல்லும்.

“இந்த புத்தகத்தில் நான் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பில் நான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பயணங்கள் இவை எனக்குச் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ” என்கிறார் கோபிநாத்.

அனுபவத்தை விட மிகச்சிறந்த ஆசானாக யார் இருந்துவிட முடியும்? அந்த அனுபவத்தை மிகச்சரியாக இன்னொருவருக்குக் கொடுப்பதில் கோபிநாத் வல்லவர்.

இந்தப் புத்தகத்தின் மதிப்பு என்னவென்றால், புத்தகம் வெளியாகி 10 ஆண்டுகளில் 25 தடவைகள் பதிப்பிக்கப்பட்டது என்பது தான்.

அந்த அளவுக்கு எந்தவொரு தரப்பு வாசகர்களினாலும் தேடப்படும் புத்தகமாக இது இருக்கிறது.

“இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் இது உங்களுக்கு… உங்களை அடையாளம் காட்டும். உங்கள் சிறப்பியல்புகளையும் உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.

ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிற போது நாம் கால்குலேட்டரை தேடுகிறோம். அதனால் உங்களுக்கு கணக்கு தெரியாது என்பதல்ல.

இந்த புத்தகம் ஒரு கால்குலேட்டர். உங்களுக்கு தெரிந்ததை… நீங்களே வேகமாக புரிந்து கொள்ள இது எழுத்து கால்குலேட்டர்!”

எவ்வளவு அழகான முன்னுரை விளக்கம் பாருங்கள். மற்றைய புத்தகங்களை போல எழுத்தாளர் தான் கூறிய எதையும் பின்பற்றுமாறு கூறவில்லை.

உங்கள் வாழ்க்கைக்கு எது எப்படி பொருந்துகிறதோ அப்படி இந்த புத்தகத்தின் கணக்கீட்டு முறைமகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழமையான சுயமுன்னேற்ற நூல்களை போல வார்த்தை அலங்காரங்களின் மூலம் மாயாஜாலம் காட்டாமல், நம் அன்றாட வாழ்வில் இருந்தே எடுத்துக்காட்டும் உதாரணங்கள் மனதுக்குள் பட்டென்று ஒட்டிக் கொள்கிறது.

அதுவே படிக்கவும், இந்த புத்தகம் நமக்கு பிடிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது.

மறுபடியும் சொல்கிறேன், இது வழமையான சுயமுன்னேற்ற நூல்களை போன்றது அல்ல. உங்களின் ஒரு தோழனாக உங்கள் தோளில் கைபோட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு புத்தகமாகவே இருக்கும்.

வாழ்க்கையில் முன்னேற விரும்பும், வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரின் கைகளிலும் இந்த நூல் இருக்க வேண்டும். ஏனெனில் இது ஒரே நாளில் உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு புத்தகம் அல்ல. உங்களோடு சிநேகமாக ஒரு உரையாடலை மாத்திரம் நிகழ்த்திச் செல்லும் புத்தகம் இது. தீர்மானங்களை மேற்கொள்ளும் சுதந்திரத்தை உங்களுக்கே வழங்கிவிட்டுச் செல்லும் நூல் இது. உங்களுக்கு அதிகாரத் தொனியில் கட்டளையிடாத புத்தகம் இது. ஆகவே, ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

புத்தகம்: ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க – 1
எழுத்தாளர் – கோபிநாத்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் – 112

#Please_Intha_Puthakaththai_Vangatheenga_Part_1_Book #C_Gobinath #ப்ளீஸ்_இந்தப்_புத்தகத்தை_வாங்காதீங்க_1 #கோபிநாத் #நீயா_நானா_கோபிநாத்

You might also like