காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும்
காதலின் சுவை உப்பு தான்
கலக்கும் தன்மை கொண்டதுதான்
கலந்த பின்
திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது
அதனை என்ன செய்ய?
உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத
பைத்திய நிலையும்
வெற்றிப்பறையில் எழும் சத்தம்
வேகாள வெப்பத்தோடு உயர்வதுபோல
தகிக்கும் அகம் வாய்த்த மாய உடல்

காதலைப் போற்றுவதற்கு
இதற்கு மேல் அதிகாரம் ஏதேனும் உண்டா?
காலச்சக்கரத்தை மூளையாகப் பெற்றது
காதல் இன்றி வேறு என்ன?
தட்டையாகப் பறந்து செல்லமுடியாத
ஆழங்களை வேராகப் பெற்ற
கணங்கள் எல்லாம்
முத்தங்களை ஊற்றெடுக்கிற சூத்திர அச்சு

நீங்கள் எத்தனை முறை சம்மதித்தாலும்
காதலை காதலாகவே கைக்கொள்ளும்
விரல்கள் தனித்தனி நேர்கோட்டில் பயணிப்பவை
இதுதான் இயக்கவியல் விதி

எங்கேயும் அவை இணைந்துவிடக்கூடாது
இணையும் புள்ளியில் காதலின் கதிரியக்கம் மாறுபடும்
வலமிருந்து இடம் காலச்சக்கரம் சுழலும்
மாயச்சூத்திர அச்சின் சில கணக்குகள் முடிவு பெறும்போது
இயற்கையின்
நீட்சிமிக்க நீலவிதானக் கைகள் விரியும்
வாழ்கையின் உள்ளக்கால் உறுத்தும்
வைராக்கியம் என்பதற்கு காதலே தாய்

கைக்குழி இரகசியமாக பொத்திவைக்கமுடியாத
வெயில்மேனி காதலுக்கு
அதனை மடியில் கிடத்தி
ஏகாந்தம் தெளித்து

கொஞ்சிப் பேசினால்
உரையிடப்படாத இலக்கணங்களை
ஞானமாக ஊட்டும்

நீங்கள் எத்தனை முறை சம்மதிக்க மறுத்தாலும்
வஸ்திரங்கள் ஏதும் உடுத்திக் கொள்ள விரும்பாத
காதலின் நிர்வாணம் போல்
இவ்வுலகில் மகோன்னதம் ஏதேனும் உண்டோ
தேவை ஒரே ஒரு அகம்
உட்சுழலும் விதி யாவும் எதற்கும் ஒன்றே
காதலின் உயிர் நன்றியின் நளினக் கண்களால் ஆனது

நன்றி: தேன்மொழி தாஸ் பேஸ்புக் பதிவு

You might also like