உலக வானொலி தினம்: சில நினைவுகள்!

ராஜேந்திரன் அழகப்பன்:

ரேடியோ காலமாற்றத்தில் எத்தனையோ வடிவங்களாக மாறிவிட்டது. ஆனால் 70, 80 காலங்களில் ரேடியோதான் உலகம் என்றிருந்தது. அப்போது எல்லாம் ரேடியோ சிலர் வீடுகளில் தான் இருக்கும்.

கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்கும், பெரிய சைஸ் மரப்பெட்டி போல் அமைந்திருக்கும். அதற்கும் உரிமம் (லைசன்ஸ்) ரேடியோ பெட்டிக்குள் எண் இருக்கும்.

அதிகமாக ரேடியோ கேட்பது நரிக்குறவ சமுதாய மக்கள்தான் ரேடியோக்களை தோளில் சுமந்தபடியே கேட்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

திருச்சி வானொலி செய்தி கேட்பார்கள். ஆனால் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது இலங்கை வானொலி தான்.

இலங்கை வானொலியில் சினிமா பாட்டுகள், ஒலிச்சித்திரம், செய்திகள், அறிவிப்பாளர்கள் என எழுதிக் கொண்டே போகலாம். அடுத்து என்ன பாட்டு வரும் என்ற எதிர்பார்ப்பே சுவாரஸ்ம்தான்.

நான் 4-ஆம் வகுப்பு பயிலும்போது எனது தந்தையார் மலேசியாவில் இருந்து பேட்டரி ரேடியோ பானாசோனிக் வாங்கி வந்தார்கள் இரவெல்லாம் டியூனை திருப்பி திருப்பி பார்த்தே ஞாபகம் மறக்கமுடியாதது.

பின்னாளில் பன்பலை வானொலி கல்லுாரி காலங்களில் வந்தது. புதிய பாடல்கள், பழைய பாடல்கள் என கேட்டுக் கொண்டே இருந்த காலம், கிரிக்கெட் வர்ணனை ரேடியோவில் தான் கேட்டோம்.

என்னதான் டேப் ரிக்காடர் வந்தாலும் வானொலியில் பாட்டு கேட்பது சுகம்தான், தொலைக்காட்சிகள் வந்தபோதும் ரேடியோ மோகம் ஒருநாளும் குறைந்து போகவில்லை.

குறிப்பாக இலங்கை வானொலி போல் மலேசியா, சிங்கப்பூர் வானொலிகளின் தமிழ் சேவை அளப்பறியது.

அதுபோல் பிபிசி செய்தி தினமும் எப்படியாவது நம்ம ஐயாக்கள் டியூன் வைத்துக் கேட்டதை பார்த்திருக்கிறேன். சீனாவிலிருந்து கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் ஒளிபரப்பு உள்ளது.

இன்று விஞ்ஞான முன்னேற்றத்தில் ஊருக்கு ஒரு பன்பலை என பாடல்களையும் செய்திகளையும் அள்ளித் தெளிக்கிறார்கள்.

பணியிடங்களில் பெரும்பாலும் பணிச்சுமை தெரியாமல் வேலை பார்ப்பவர்களுக்கு வானொலியே ஊக்க மருந்து எனலாம்.

இரவு நேரப் பணியாளர்களின் சொர்க்கம் என்றால், அவை வானொலிகள்தான். வானொலி குறித்து எழுதிக்கொண்டே போகலாம் அவளவு நினைவலைகள் உள்ளன. இன்று உலக வானொலி தினம் நாமும் கொண்டாடுவோம்.

நன்றி: பேஸ்புக் பதிவு.

You might also like