மீண்டும் பரவிக் கொண்டிருக்கும் எலிக் காய்ச்சல்!

தலையங்கம்:

எப்போதுமே மழைக்காலம் அல்லது பனிக்காலம் தொடங்கும்போதோ நிறைவுபெறும்போதோ வெவ்வேறு விதமான தொற்று வியாதிகள் பரவுவது இயல்பான ஒன்றுதான்.

அதேமாதிரிதான் தற்போதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis)  என்கிற எலிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக சிறுவயதுக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இதே எலிக் காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்த விபரீதமும் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எலிக் காய்ச்சல் பல்வேறு சந்தர்ப்பங்களில் பரவி சில நூற்றுக்கணக்கான உயிர்களைக் கூடப் பலி வாங்கியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குறிப்பாக வட சென்னை பகுதிகளில் உள்ள வில்லிவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட நெருக்கடியான பகுதிகளில் ஒரே மாதத்தில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

அப்போது முதலில் ‘மர்மக் காய்ச்சல்’ என்று சொல்லிக் கொண்டிருந்த அரசுதான் பின்னர் பரவிக் கொண்டிருப்பது எலிக் காய்ச்சல் என்று அறிவித்தது. 

சரி, எலிக் காய்ச்சல் எம்மாதிரியான விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்?

எலியின் கழிவுகள் தேங்கியிருக்கும் நீரிலோ அல்லது குடிநீரிலோ கலந்து பரவுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அப்படி பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மேலும் மேலும் பலவீனமடைந்து எலும்பும் தோலுமாக பாதிக்கப்பட்ட நபர் காட்சியளிக்கும் அளவிற்கு போகும்.

உண்ணும் உணவு சக்தியாக மாற்றப்படாமல் போகும் முக்கியமான விளைவுதான் எலிக் காய்ச்சலில் தீவிரத்தை புலப்படுத்தும். 

அதாவது சுருக்கமாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட நோயாளி எந்த சத்தான உணவை உட்கொண்டாலும் அந்த உணவு எனர்ஜியாக உருமாறாது.

இந்த நிலையே நீடித்தால், அந்த நோயாளி உயிரிழக்கும் வரையிலான ஆபத்தில் போய்முடியும். உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்ட நோயாளி அதிலிருந்து விடுபடவும் முடியும்.

இப்படிப்பட்ட எலிக் காய்ச்சல் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் நோய் தடுப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை எலிக் காய்ச்சல் தாக்கும் பட்சத்தில் அதன் தீவிரமான எதிர்விளைவுகளை அந்தப் பிஞ்சு உடம்புகள் எப்படித் தாங்க முடியும்?

சென்ற அதிமுக ஆட்சியின்போது டெங்கு காய்ச்சல் பரவலால் பதினோரு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் சொல்லப்பட்டபோது திமுகவின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின், “தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடக்கிறது” என்று விமர்சித்தார்.

இப்போது எலிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிற நிலையில், அதன் தீவிரம் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பதால், தமிழக சுகாதாரத்துறையும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் விழிப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது என்பதை மட்டும் இப்போதைக்கு உணர்த்துவோம்.

You might also like