நாட்டுப்புறக் கதைகள் சொல்லும் சாமிகளின் பிறப்பும் இறப்பும்!

நூல் அறிமுகம்:

மனிதர்களுக்கு தானே பிறப்பும் இறப்பும்? சாமிகள் பிறந்து இறப்பார்களா? என்ற கேள்வியோடு தான் ச.தமிழ்ச்செல்வனும் இந்நூலை ஆரம்பிக்கிறார்.

இதுவரை சாமிகளை மதம் வாரியாக பிரித்து வைத்திருப்பதுதான் தெரியும். ஆனால் சாமிகளின் வேறு ஒரு வகைப்பாட்டை இங்கு தமிழ்ச்செல்வன் அறிமுகம் செய்கிறார்.

ஏழைச்சாமி – பணக்காரச்சாமி என்பதுதான் இந்த புதிய வகைப்பாடு.
இதென்ன புதுசா இருக்கே. இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியும் ஆர்வத்தில் படிக்கும்போது அருமையான ஒரு விளக்கம் வருகிறது.

ஏழைகள் பணம் இல்லாமல், வீடு வசதிகள் இல்லாமல் இருப்பார்கள். பணக்காரர்கள் அதிக பணமும் வசதியான வீடும் இருப்பிடமும் கொண்டிருப்பார்கள்.

அதேபோல் தனக்கென ஒரு கோவில் கூரை இல்லாமல் கல்லாகவும் சிறு சிலையாகவும் ரோட்டோரங்களில் இருக்கும், ஏழைகள் கும்பிடும் சாமிகள் ஏழைச்சாமிகள் என்றும் பெரிய பெரிய கோவில்கள் லட்சக்கணக்கில் உண்டியலில் பணம் என வசதியாக இருக்கும் சாமிகள் பணக்கார சாமிகள் என்ற விளக்கத்தைத் தருகிறார்.

ஏழைச்சாமிகளாக ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் இருக்கும் பல சாமிகள் ஒரு காலத்தில் மனிதர்களாக இருந்தவர்கள்.

இம்மனிதர்கள் பல்வேறு சமூக காரணங்களால் உயிர்விட நேர்ந்தபோது பிற மனிதர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே அவர்களை சாமியாக்கி கும்பிட ஆரம்பித்தார்கள் என்பதை மதுரை வீரன் சாமியான கதையை கூறி தெளிவுபடுத்துகிறார் தமிழ்ச்செல்வன்.

சாமியின் பெயரை வைத்து மனிதர்களை என்னவெல்லாம் பாடுபடுத்துகிறார்கள் என்று காலம் தொட்டு தற்காலம் வரை நாம் பார்த்து வரும் சூழலில் “மனிதரிடம் அடிவாங்கும் சாமிகள்” தலைப்பில் தேனி மாவட்டத்தில் முத்தாலம்மன் என்ற அம்மன் சாமி உருவான கதையை கூறி அச்சாமியை கும்பிட வருபவர்கள் முதல் நாள் சிலை செய்து எடுத்து வர வேண்டும்.

மறுநாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்து அவளை கும்பிட்டு அன்று இரவே அச்சிலையை ஆற்றங்கரையில் அடித்து நொறுக்கி விட வேண்டும்.

உலகுக்கே ஒளி தரும் சாமிகள் நம் குடும்பத்திற்கும் ஒளி தரும் என்று நம்பி சாமிக்கு தினமும் விளக்கேற்றி வருவது இன்றும் பல வீடுகளில் வழக்கம். ஆனால் நெருப்பு கேட்டு பரிதவித்த சாமிகளின் வரலாறும் இங்கு உண்டு.

குடும்ப சாமி, குலசாமி, கும்பிடாத சாமி, பிடி மண்ணால் உருவாகும் சாமிகள் என்று தென் மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் குடும்பங்களில் சாமியாக வழிபடப்பட்டு வரும் மனிதர்கள் குறித்த விவரங்களை மிக எளிதாக தொகுத்து வழங்கி உள்ளார்.

இப்படிப்பட்ட சாமிகள் இந்து மதத்தில் மட்டும் தான் உள்ளனவா? என்ற கேள்வி இயற்கையாகவே வாசிக்கும்போது தோன்றுகிறது. அதற்கும் அடுத்த சில கட்டுரைகளில் விளக்கம் கிடைக்கிறது.

கிறிஸ்துவ மதத்தில் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை பரப்ப வந்த பாதிரியார்கள் பலரும் நோயுற்ற மக்களுக்கு வைத்தியங்கள் பார்த்து அவர்களுக்கு பல்வேறு விதங்களில் உதவி செய்த பாதிரியார்களை இன்றும் அக்கிராமங்களில் சாமியாக கும்பிட்டு வருகிறார்கள்.

கிறிஸ்துவ மத அடையாளங்களான குருசடிகள் பல தென் மாவட்டங்களில் காண முடிவதற்கான விளக்கம் இந்நூலில் கிடைக்கிறது.

பிராமணப் பெண்ணை காத்த இஸ்லாமிய பக்கீருக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் தர்காவை பற்றிய குறிப்பும் அவரை இஸ்லாமிய தெய்வமாக வழிபடுவதற்கான நிகழ்வும் நெகிழ்ச்சியானது.

அதேபோல் தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து தெய்வமாக போற்றப்பட்ட பிற மதத்தை சார்ந்தவரின் பெயரையும் அனைத்து மதங்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களையும் தருகிறார்.

மக்கள் மனதளவில் மதம் கொண்டு இருக்கவில்லை என்பதனை இதில் தெளிவாக புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் மதத்தை பயன்படுத்தி கலவரங்களை உருவாக்கும் கூட்டத்தினரையும் நாம் அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளது.

இப்படி பல்வேறு சாமிகள் பற்றி கூறி வரும் வேளையில் கிறிஸ்துவத்திற்கு சாதி வேற்றுமைகள் இல்லை என மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பிற்காலங்களில் சாதியோடு மதம் மாறியதால் கிறிஸ்தவ மதத்திலும் உலகில் எங்கும், எந்த நாட்டிலும் இல்லாத சாதிய வேறுபாடுகள் உருவானதையும் அதனால் உருவான “டவுசர் சர்ச்” வடிவம் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

இதனைப் படித்த பிறகுதான் தமிழகத்தில் உள்ள சர்ச்சுகள் அனைத்தும் சிலுவை வடிவத்தில் இருப்பதற்கான அடிப்படை இதுதான் என்ற விவரம் தெரிகிறது.

இப்படி சாதாரண மனிதர்களின் சாமிகளாக இருக்கும் சாமிகள் தவிர்த்து மதங்களுக்கான சாமிகளாக பெரிய பெரிய கோவில்களும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கும்பிட முடியும் என்ற நிலையும், குறிப்பிட்ட உணவு வகைகள் மட்டுமே அச்சாமிகளுக்கு ஏற்றவை என்றும் கூறி இன்றைய காலத்தில் நடந்து வரும் சாமிகள் குறித்த கதைகளையும் விளக்கியுள்ளார்.

மனிதன் குழுக்களாக கூடி வாழ ஆரம்பித்த காலத்தில் தனக்கு புரியாதவைகளை சாமி என்று பெயரிட்டு வழிபட்டதன் வரலாற்றை முதல் அத்தியாயத்தில் கூறி இருப்பதை நினைவு கூர்ந்து குழப்பங்கள் இல்லாத நிலையில் மனிதர்கள் வாழும் சூழல் இருந்தால் கடவுள்கள் மீதான நம்பிக்கை அற்றுப்போய் சாமிகள் இல்லாத சூழலும் உருவாகும் என்று கூறி கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வியோடு இந்நூலை முடிக்கிறார்.

ஒரு சாமியின் பெயரால் ஒரு சாமியின் இடத்தில் இன்னொரு சாமிக்கான கோவில் எழுப்பப்பட்டிருப்பது கொண்டாட்டமாக மாற்றப்பட்டுள்ள இந்த மதத்தில் சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்ற நூல் என் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வாயிலாக, கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

******

நூல்: சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
பக்கம்: 64
விலை: 57

#சாமிகளின்_பிறப்பும்_இறப்பும் #ச_தமிழ்ச்செல்வன் #samigalin_pirapum_erapum #sa_tamilselvan #சாமி #தெய்வம் #குலசாமி #நாட்டுப்புறக்_கதைகள் #மதநல்லிக்கணம் #தஞ்சை #இந்து #சாதி 

You might also like