டெவில் – உள்ளுக்குள் இருப்பது கடவுளா, சாத்தானா?

டி.ஆர்.ராஜேந்தர் ஒரு வெற்றிகரமான நடிகராக, கதை வசனகர்த்தாவாக, இயக்குனராகத் திகழ்ந்தாலும், இசையமைப்பாளர் என்பதே அவருக்கான முதல் அடையாளம்.

பாடலாசிரியராகப் புகழ்பெற விரும்பிய கங்கை அமரன் கூட, புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பல படங்களில் பங்களிப்பைத் தந்தார்.

அவர்களது பாணியில் அனைத்து நுட்பங்களிலும் தங்களது பெயரைப் பொறிக்கும் வகையில் பின்னாட்களில் இயக்குனர்கள் பாக்யராஜ், பாண்டியராஜன் போன்றவர்கள் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தனர்.

சமீபகாலத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடுத்தபடியாக அந்த வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு இயக்குனர் மிஷ்கின். இவர் இசையமைத்துள்ள ‘டெவில்’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

டெவில் என்ற பெயரே இந்த படம் புதிர்த்தன்மை கொண்டது என்று சொல்லிவிடும். அதையும் தாண்டி, இந்த படம் நமக்குத் தரும் ஆச்சர்யம் என்ன?

உறவை மீறிய காதல்!

ஹேமா (பூர்ணா) என்ற பெண்ணும், அருண் (த்ருகுன்) எனும் ஆணும் தொடர்ந்து பலமுறை சந்திக்கின்றனர். அதற்குக் காரணம் ஒரு விபத்து.

ஹேமா ஓட்டி வந்த கார், அருண் பைக் மீது மோதுகிறது. அதில், அருணின் கை உடைந்துவிடுகிறது.

தனியாக வசிக்கும் அருணுக்கு உதவும் நோக்கில் உணவு எடுத்துச் செல்லத் தொடங்கும் ஹேமா, தொடர்ந்து அவருடன் நட்பாகப் பழகுகிறார்.

அது காதலாகக் கனிவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஹேமா ஏற்கனவே திருமணமானவர்.

ஹேமாவும் அலெக்ஸும் (விதார்த்) ஒன்றாக ஒரே வீட்டில் ஓராண்டாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்குள் இடைவெளி பெரிது. அதற்குக் காரணம் ஒரு மோசமான சம்பவம்.

தனது அலுவலகத்தில் பணியாற்றும் சோபியா (சுபஸ்ரீ ராயகுரு) மீது பித்து கொண்டிருக்கிறார் அலெக்ஸ். அவருக்கென்று தனியாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தந்திருக்கிறார். பகலிரவு பாராமல் அவர் பின்னாலேயே செல்கிறது அலெக்ஸின் மனது.

ஒருநாள் அலுவலகத்தில் அலெக்ஸும் சோபியாவும் தனிமையில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார் ஹேமா. அது உண்டாக்கிய இடைவெளியினால், இருவரும் ஒரே வீட்டில் தனியாக வாழ்கின்றனர்.

திடீரென்று சோபியாவுக்கும் வேறொருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதை அறிந்ததும் அலெக்ஸ் நொறுங்கிப் போகிறார். ஹேமாவிடம் மண்டியிட்டுத் தனது நிலையைச் சொல்லிக் கதறுகிறார். ‘உனக்கு இழைத்த துரோகத்தின் வழி இப்போது தெரிகிறது’ என்கிறார்.

புதிதாக முளைத்த காதலா? பெற்றோர் பார்த்துவைத்த திருமணமா என்று அந்தக் கணத்தில் யோசிக்கிறார் ஹேமா.

கணவரே போதும் என்று முடிவெடுத்தபிறகு, அருணை நேரில் சந்தித்து தனது நிலையை விளக்குகிறார். ஆனால், அவருக்கு அது ஆற்றாமையைத் தருகிறது.

அதையடுத்து, ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்யும் அருண் நேராக நள்ளிரவில் ஹேமாவைத் தேடி வருகிறார். ‘போ’ என்று ஹேமா துரத்தினாலும், அவரால் தன்னிலையைக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை.

அந்த நேரத்தில், அலெக்ஸ் அங்கு வருகிறார்; இருவரையும் ஒன்றாகப் பார்க்கிறார். அதன்பின் என்ன நிகழ்ந்தது என்பது மீதிக்கதை.

ரத்தக் கறையுடன் இருக்கும் பிணம் இழுத்துச் செல்லப்படுவதில் இருந்து தொடங்குகிறது திரைக்கதை. அதுவே, படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எப்படியிருக்கும் என்ற யூகிப்புக்கு வழி வகுக்கிறது.

அதையும் மீறி, பின்பாதியில் கதை நகரும் திசை அனைத்தையும் காட்டுகிறார் இயக்குனர் ஜிஆர் ஆதித்யா. ஆனால், அது தெளிவில்லாமல் இருப்பது தியேட்டரில் கூக்குரல்களை அதிகரிக்கச் செய்கிறது.

மெலடி இசை!

விதார்த்துக்கு இதில் எந்நேரமும் வேலை, சக பணியாளர் மீதான மோகம் என்று திரியும் ஒரு பாத்திரம். அதனை மிகச்சரியாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

த்ரிகுன்னுக்கு இதில் தனது இளமையையும் அழகையும் வெளிக்காட்டும் பாத்திரம். வசன உச்சரிப்பு தெளிவாக இருப்பதே, அவரது நடிப்பை இன்னும் அழகாக்கிவிடுகிறது.

பூர்ணா இந்தக் கதையின் மையம் என்றே சொல்லலாம். அவருக்கே படத்தில் காட்சிகள் அதிகம்.

அதனை உணர்ந்து, கொஞ்சம் கூடத் தன் பாத்திரத்தைப் பார்வையாளர்கள் கிண்டலடித்துவிடாதவாறு கவனமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், பின்பாதியில் அவரது நடிப்பு கொஞ்சம் அதீதமாகத் தென்படுகிறது.

சுபஸ்ரீ ராயகுருவுக்கு இதில் பெரிதாக வேலை இல்லை. கவர்ச்சியாக வந்து, கொஞ்சமாய் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து ரமா, ரம்யா உட்படச் சிலர் திரையில் வந்து போயிருக்கின்றனர்.

பெரும்பாலான காட்சிகள் மேற்சொன்ன நால்வரைச் சுற்றியே சுழல்வதால் மற்றவர்களுக்கு இடைவெளியைப் பூர்த்தி செய்யும் வேலைதான்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார், மிகச்சில இடங்களில் நகர்ந்தலையும் கதையில் ஒவ்வொரு காட்சியையும் புதிதாக உணரச் செய்யப் பாடுபட்டிருக்கிறார். முன்பாதிக்கும் பின்பாதிக்குமான வேறுபாட்டில் அவர் கவனம் செலுத்தியிருப்பது அருமை.

கலை இயக்குனர் மரியா கெர்லி ஆண்டனி, ஆடை வடிவமைப்பாளர் ஷமீமா அஸ்லாம் ஆகியோர் ஒளிப்பதிவாளரின் எண்ண வண்ணங்களுக்கு உதவிகரமாகப் பணியாற்றியுள்ளனர்.

படத்தொகுப்பாளர் இளையராஜா பின்பாதியில் தன் கவனத்தை முழுமையாகச் செலுத்தத் தவறியிருக்கிறார்.

ஜி.ஆர்.ஆதித்யாவின் கதை, திரைக்கதை வசனத்தில் மொத்தப்படமும் செயற்கைப்பூச்சுகள் இன்றிக் காட்சியளிக்கிறது.

திருமண உறவுக்கு மீறிய காதலை முன்வைக்கும் வெளிநாட்டுப் படங்கள் குறித்து சில தகவல்கள் கேள்விப்பட்டிருப்போம். அவற்றின் சாரத்தை இதில் காண முடிகிறது.

பின்பாதியில் இந்த கதையில் ஹாரர், த்ரில்லர் தன்மையைப் புகுத்தியிருந்தாலும், அதனால் பெரிதாகப் பயன்கள் கிடையாது என்று உணரத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

‘டெவில்’ மூலமாக முதலில் நம் மனதில் பதிவது இயக்குனர் மிஷ்கின் தான். அவரே இதன் இசையமைப்பாளர்.

விதார்த், சுபஸ்ரீ சம்பந்தப்பட்ட பாடல் தவிர, மற்ற நான்கிலும் மெலடியை ஆறாக ஓட விட்டிருக்கிறார்.

இசையமைப்பாளராக மிஷ்கின் தந்திருக்கும் ‘நிலவு உருகுதே’, ‘மனசும் மனசும்’, ‘விடியல் தேடும் மனிதர்க்கு’, ’எனக்குள்ளே எனக்குள்ளே’ பாடல்கள், இரையைத் தேடும் எறும்புகள் போன்று மெல்ல மனதுக்குள் ஊருகின்றன.

அதேநேரத்தில், பின்னணி இசையில் மேற்கத்திய தாக்கம் அதிகம் தென்படுகிறது. அது, மிஷ்கின் பார்த்த உலகப் படங்கள் பலவற்றின் பிரதிபலிப்பாக இருக்கலாம் அல்லது அவர் இதுவரை தன் படங்களில் நிறைக்க விரும்பிய இசை எனவும் கொள்ளலாம்.

சரியும் பின்பாதி!

நான்கு பாத்திரங்கள். அவற்றுக்கு இடையேயான உறவுச் சிக்கல்களால் எவ்வாறு ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது என்று சொல்கிறது ‘டெவில்’. இந்தக் கதையில் மிஷ்கின் ஒரு கடவுளரைப் போன்று தோன்றியிருக்கிறார்.

அதனைச் சொல்வது ‘ஸ்பாய்லராக’ இருந்தாலும், அதுவே கதையில் திருப்பங்களுக்குக் காரணமாக விளங்குகிறது.

திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் ஒரு ஜோடியின் வாழ்வைச் சுக்குநூறாக்கும் என்கிறது இப்படத்தின் திரைக்கதை.

அந்த ஜோடி பிரிந்தால் என்னவெல்லாம் நிகழும், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று பல வாய்ப்புகளை ஆராய்கிறது.

அதனால் த்ரில்லர், ஹாரர், ட்ராமா, மிஸ்டரி என்று பலவாறாகப் பயணித்து, இறுதியில் ‘பேண்டஸி’யாக முடிவடைகிறது.

அதனை ஆன்மிகமே நம்மைக் கடைத்தேற்றும் என்று எடுத்துக்கொள்ளலாம். நல்லதொரு காமமே வாழ்வைக் கடவுள் போல வழிநடத்தும் என்றும் கொள்ளலாம்.

எது நமக்கானது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. வித்தியாசமான கதை சொல்லலைக் கொண்டு அதனை உணர்த்தியிருக்கிறது ‘டெவில்’.

மெதுவாக நகர்ந்து, மிகநுணுக்கமாகச் சில மாற்றங்களை எடுத்துச் சொல்கிறது ‘டெவில்’. பரபரப்பை விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் அது ஒவ்வாமையைத் தரும்.

‘பரவாயில்லை, வழக்கத்திற்கு மாறான திரையனுபவம் கிடைத்தால் போதும்’ என்பவர்களுக்கு ‘டெவில்’ பிடிக்க வாய்ப்புண்டு.

திரையில் பிரமாண்டத்தை விரும்பாத ரசனைத்தன்மையோடு, கொஞ்சம் பொறுமையும் தேவைபப்டும். அது மட்டுமல்லாமல், நம்முள் இருப்பது கடவுளா, சாத்தானா என்ற தெளிவோடும் இருப்பது அதற்கு அவசியம்.

அதில் தெளிவாக இருந்தால், ‘டெவில்’ படத்தில் இருக்கும் தெளிவின்மையைப் புறக்கணித்துவிடலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like