இறகைப் போல மிருதுவானவர்!

-கே.பி. கூத்தலிங்கம்.

’இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி-13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஆங்கில கவிதைகளுக்காக ஷைன் (SHINE) என்னும் இதழையும் தொடர்ந்து தன் சொந்த பொருட்செலவில் நடத்தி வந்தார்.

இந்தியா முழுமையிலும் எல்லா மாநிலங்களிலிருந்தும் பல கவிஞர்கள் இந்த இதழில் தொடர்ச்சியாகப் பங்களித்து வந்தார்கள்.

நெய்தல் இலக்கிய வட்டம் என்னும் அமைப்பை நிறுவி மாதாந்திர இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

இதில் பங்கேற்று கவிதை, கட்டுரை, சிறுகதை வாசித்தவர்களில் பலர் இன்று சிறந்த பத்திரிகையாளர்களாகவும் சிறுகதை எழுத்தாளர்களாகவும் புகழடைந்திருக்கிறார்கள்.

கீரனூர் ஜாகிர் ராஜா, செல்வ புவியரசன், வல்லம் தாஜ்பால் என பலரை குறிப்பிட முடியும்.

முத்துப்பேட்டைக்குப் பக்கத்தில் ஒதியடிக்காடு என்னும் கிராமத்தில் பிறந்த அவர், தன் பள்ளிப் படிப்புகளை நீண்ட தொலைவில் இருந்த பட்டுக்கோட்டைக்கு நடந்து வந்தும் சைக்கிளில் வந்தும் படித்தவர்.

ஒரு பழமையான அக்ரஹாரமும் பெரிய மாட்டுச் சந்தையும் சுற்றுவட்ட வேளாண்மை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை விற்பனை செய்யும் திங்கள் சந்தையுமாக இருந்த அந்தச் சிறிய நகரம் வளர்ந்து விரிந்த கதையை நான் அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறேன்.

‘நடை‘ என்னும் தலைப்பில் அமைந்த அவரது சிறுகதை, சாதி சார்ந்த அவமானத்தால் நேர்ந்த மன இறுக்கத்திலிருந்து, அதைத் தொடர்ந்து நிகழும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் எப்படி தன்னை சமன்படுத்திக் கொள்கிறார் என்பதைப் பேசுவது.

நடுத்தரமான நகரம் ஒன்றில் குடியிருக்கும் அவர், சற்று தொலைவில் இருக்கும் கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அக்கிராமத்தில் இருக்கும் தன் அலுவலக நண்பர் இல்லத்திற்கு சென்று அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் அவரோடு சேர்ந்து அலுவலகம் செல்லலாம் என்னும் எண்ணத்தில் நண்பரது வீட்டுக்குச் செல்கிறார்.

நண்பர் இவரைக் கண்டதும் பதட்டமடைகிறார். அவர் இவரை அவரது தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று ஒரு குடிசையைக் காட்டி, “இவரும் ஒங்க சாதிதான், இங்க தங்கிக்கிருங்க; சாப்பாடு கூட இங்கேயே ஒங்களுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டேன்.” என்று சொல்லி, இவரை தோப்பிலேயே விட்டு விட்டு நண்பர் போய்விடுகிறார்.

அங்கு தங்குவதற்கு இருப்புக் கொள்ளாமல் நடு இரவில் அங்கிருந்து புறப்பட்டு, விண்மீன்கள் செழித்த வானத்தை ரசித்துக் கொண்டு, சாலையில் தன் ஆட்டு மந்தையை நடத்திப் போகும் கீதாரியோடு உரையாடிக் கொண்டு தன் வீடு இருக்கும் அந்த நகரத்தை விடியலில் வந்தடைந்தபோது, முதல் நாள் நேர்ந்த அவமானம் கழுவி விடப்பட்டிருப்பதை உணர்கிறார்.

மு.ராமலிங்கம் அவர்களது கவிதைகள் மிகவும் மென்மையானவை. இலக்கியச் சிறகு இதழில் இடம்பெற்ற பல கவிஞர்களின் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து ‘வெயிலொழுகும் குடிசை’ என்னும் தொகுப்பை தன் சொந்த பொருட்செலவில் கொண்டு வந்தார்.

பட்டுக்கோட்டை ராஜா, பேராசிரியர் கோவி. சந்திர சேகரன், தமிழறிஞர் அ.த. பன்னீர் செல்வம், வழக்கறிஞர் பிரகாசம், சாந்தநாத், நவீன் குமார், கோவிந்தராஜன் என அவரது இலக்கிய நண்பர்களோடு இணைந்து நெய்தல் இலக்கிய வட்டக் கூட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் வரையில் தொடர்ந்து நடத்தி வந்தார்.

நவம்பர் -2023 இலக்கியச் சிறகு இதழ்களை அவரே அஞ்சல் அலுவலகம் எடுத்துச் சென்று தபால் தலைகள் ஒட்டி எல்லோருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

குறிஞ்சி வேலன், வளவ துரையன்,  எஸ்ஸார்சி மற்றும் தி.க. சிவசங்கரன் ஆகிய எழுத்தாளர்களோடும் சிற்றிதழாளர்களோடும் வாழ்க்கை முழுவதும் கடிதத் தொடர்பில் இருந்தார்.

அஞ்சல் அட்டை வழியாக ஏராளமான இலக்கிய நண்பர்களைப் பெற்றவர் ராமலிங்கம் அய்யா அவர்கள்.

மு.ராமலிங்கம்

எண்பத்தி நான்கு வயதை எட்டியிருந்தும் வயதின் முதிர்வால் தளர்வடைந்து இருந்த போதிலும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து செயல்பாடு கொண்டிருந்தவர்.

கோவை சிற்றிதழ் சங்கத் தலைவர் குன்றம் மு. ராமரத்தினம் அவர்களால் ‘இதழியல் மூப்பர்’ என்னும் பாராட்டு பெற்றவர்.

அவரது கவிதைகள் போலவே அவர் மிக மென்மையானவர்.

முதிர்ந்து கனிந்த வெள்ளரிப் பழம் அதன் கொடியிலிருந்து தன்னை சேதமில்லாமல் விடுவித்துக் கொள்வதைப் போல …..

என்னும்  மஹா நாராயணியம் உபநிடத கவிதைக்கு ஏற்ப மு.ராமலிங்கம் அவர்கள் அன்றைய விடியல் நான்கு மணிக்கு துயில் எழுந்து தன் இருக்கையில் அமர்ந்தபடி அவர் ஆன்மாவை பிரபஞ்சப் பேரியகத்திடம் ஒப்படைத்து, எல்லையற்ற மோனத்திற்குள் தன்னை கரைத்துக் கொண்டார்.

You might also like