– இந்திரன் பதிவு
இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார்.
இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (Metropolitan Museum of Art) நியூயார்க்கில் இருக்கிறது.
படுக்கையில் அமர்ந்திருக்கும் சாக்ரடீசுக்கு விஷம் கொடுப்பவன் கண்களை மூடிக் கொள்கிறான். சாக்ரடீஸ் கதறி அழும் சீடர்களிடம் பேசிக் கொண்டே மிகச் சாதாரணமாக விஷக் கோப்பையை வாங்குகிறார்.
சாக்ரடீசின் கால் இருக்கும் பக்கத்தில் (விஷம் கொடுப்பவனின் பக்கத்தில்) வெள்ளை அங்கி போர்த்தி தலை கவிழ்ந்து சாக்ரட்டிசைப் பார்க்காமல் எதிர்த்திசையில் திரும்பி அமர்ந்திர்ப்பவன்தான் பிளாட்டோ.
சாக்ரடீசின் முக்கிய சீடனாகிய பிளாட்டோதான் இம்மரணக் காட்சியை வார்த்தையாக எழுதி இருக்கிறான். பிளாட்டொ இம்மரணத்தை எழுதி வைக்காதிருந்தால் சாக்ரடீசின் மரணம் உலக சரித்திரத்துக்குத் தெரிய வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
70 வயதான சாக்ரடீசின் மரண தண்டனை நாளன்று காலை முதல் மாலை வரை தன் நண்பர்களிடம் ஆத்மாவின் இயற்கை குறித்து விவாதங்கள் நிகழ்த்தினார். பின்பு குளிக்கப் போனார்.
குளித்தபின் தன் 2 மகன்களையும், பெண்மணிகளையும் பார்க்க விரும்பினார். பார்த்துப் பேசி அவர்களை அனுப்பியபின் கண்ணீருடன் நின்றிருந்த நண்பர்களிடம் வந்தார்.
அப்போது சிறை அதிகாரி சாக்ரடீசின் நேரம் நெருங்குவதை நினைவூட்டினார். அவரது மரியாதையான நடத்தைக்காக சிறை அதிகாரி கண்ணீருடன் நன்றி கூறினார். சாக்ரடீஸ் கண்ணீருடன் தன் சீடர்களிடம் கூறினார்.
“எனக்காக அவர் கண்ணீர் விடுவதைப் பாருங்கள். நாம் அவர் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வோம்” உடனே சிறைப் பையனிடம் விஷம் கலந்த பானத்தைக் கொண்டு வருமாறு சாக்ரடீஸ் கேட்டார்.
மரண தண்டனைக்கான நேரம் இன்னமும் வரவில்லை, மாலை இன்னமும் மறையவில்லை என்பதை நண்பர்கள் அவருக்கு நினைவூட்டினார்கள். ஆனால் மரணத்தை இனியும் தள்ளிப்போட அவர் விரும்பவில்லை.
விஷம் நிரம்பிய கோப்பை கொண்டு வரப்பட்டது. நடுக்கமோ, நிறத்தில் மாற்றமோ இன்றி முக மலர்ச்சியுடன் விஷத்தை அருந்தினார்.
கடவுளுக்கு படையலாக விஷத்தின் ஒரு பகுதியை அளிக்க முடியுமா எனக் கேட்டார்.
ஆனால் அந்த பானத்தில் மரணத்துக்குப் போதுமான அளவு மட்டுமே விஷம் கலந்திருப்பதாக சொன்னவுடன் புரிந்து கொண்டார்.
இப்போது அவரது நண்பர்கள் அழத் தொடங்கினார்கள். அதைப்பார்த்து கலக்கம் அடைந்து அவர் சொன்னார்.
“நீங்கள் என்னை ஆச்சரியப் படுத்துகிறீர்கள். என் வீட்டு மக்கள் இவ்வாறு செய்வார்கள் என்பதற்காகவே அவர்களை நான் அனுப்பிவிட்டேன். முடிவை மதிக்கத்தக்க முறையில் அமைதியாக இருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் அவருக்கு முன்னரே சொல்லியிருந்தபடி அறைக்குள் உலாவத் தொடங்கினார்.
விஷம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. பிறகு அதற்கு மேல் நடக்கமுடியாமல் படுத்துக் கொண்டார்.
முதலில் அவரது பாதங்களும், பின்னர் கால்களும், கீழ்ப்பகுதிகளும் விறைத்துக் கொள்ளத் தொடங்கியபோது முகத்தை மூடி இருந்த துணியை திடுமென தூக்கி எறிந்தார். மிருதுவான குரலில் சொன்னார்:
“க்ரைடன், அலெஸ்பியஸ் என்பவருக்கு நாம் ஒரு சேவலைக் கொடுக்கவேண்டும். அதை மறக்காமல் கொடுத்துவிடுங்கள்.”
“அது நிச்சயம் கொடுக்கப்படும்” என க்ரைடன் சொன்னார்.
“வேறு ஏதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டுமா?”
சாக்ரடீசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் இறந்துவிட்டிருந்தார்.
இவை அனைத்தும் சாக்ரடீசின் பிரதான சீடர் பிளேட்டோ (427 – 347 கி.மு.) எழுதி வைத்தது. அடிக்கடி படித்து கண்ணீர்விட்ட இந்தக் காட்சியை ஓவியத்தின் மூலம் நினைவூட்டிய முகம்மது அப்துல் ரபீஃக் அகம்மது லுத்ஃபி (Mohamed Abdul Rafeeq Ahamed Luthfi)-க்குக்கு நன்றி.
இந்த ஓவியம் பிளேட்டோவின் பதிவுக்கு எந்த அளவுக்கு உண்மையாய் இருக்கிறது எனச் சொல்லத் தெரியவில்லை.
டாவின்சியின் மோனோலிசாவிலிருந்து உலகப் புகழ்பெற்ற பல ஓவியங்களின் அசல் ஓவியங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்த எனக்கு ஓவியர் ஜாக்யூஸ் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) 1787-ல் தீட்டிய மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்-ஐ பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
#ஓவியர்_ழாக்_லூயிஸ்_டேவிட் #Jacques_Louis_David #மெட்ரோ_பொலிடன்_மியூசியம்_ஆஃப்_ஆர்ட் #Metropolitan_Museum_of_Art #நியூயார்க் #சாக்ரடீஸ் #Socrates #newyork