மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!

பிரச்சனைகளுக்கான எந்தவொரு தீர்வையும் நகைச்சுவையின் துணைகொண்டு சொல்லும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதனை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணனைக் கலைவாணர் ஆக்கியது அந்த உத்திதான். எம்ஜிஆரை மக்கள் திலகம் ஆக்கியதும் அதுதான்.

அந்த வழியில் பலர் தமிழ் திரையுலகில் தங்களால் இயன்ற கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

அந்த வரிசையில், மது போதையில் திளைப்பவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்கிறது ‘லோக்கல் சரக்கு’ திரைப்படம். இதனை இயக்கியிருப்பவர் எஸ்.பி.ராஜ்குமார்.

‘சுறா’ படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பார்த்து நாக்கை ஒருபக்கமாக இழுத்து ‘இதயம் வெடிச்சிராமே’ என்று வடிவேலு சைகை காட்டுவாரே. அந்த காமெடிக்கு சொந்தக்காரர் இவர் தான்.

இந்த படத்திலும் யோகிபாபு, சிங்கம்புலி, சாம்ஸ் என்று சொல்லத்தக்க கலைஞர்களின் துணையோடு நம்மைச் சிரிக்க வைக்கவும் சிந்திக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.

முயற்சி பலன் தந்திருக்கிறதா?

போதையின் உச்சத்தில்..!

கதையின் மையமாகத் திகழும் ஒரு நடுத்தர வயது இளைஞன். அவருக்கு ஒரு தங்கை.

எந்நேரமும் மதுவே கதி என்று கிடக்கும் சகோதரனைத் திட்டிச் சலித்து, அதனை மொபைல் போனில் பதிவு செய்து அவர் ஒலிக்கவிடுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

அந்த இளைஞனுக்கு நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்கள் அனைவரும் அவரோடு மது அருந்துபவர்கள் தான். எப்படியாவது இன்றைய தினம் மது அருந்திவிட வேண்டும் என்பதைத் தவிர அவருக்குப் பெரிதாக வாழ்வில் லட்சியங்கள் கிடையாது.

அவரது வீட்டின் அருகே ஒரு அழகான இளம்பெண் குடி வருகிறார். வந்த முதல் நாளே, ‘என்னை யார் என்று தெரிகிறதா’ என்று அவரிடம் கேட்கிறார். அவர் கேட்கும் போதெல்லாம், மது அருந்தப் பணம் கொடுக்கிறார். ஏன் அவ்வாறு செய்கிறார்?

இடைவேளையில் அதற்கான பதில் கிடைக்கிறது. கூடவே, இருவருக்கும் திருமணமும் நிகழ்கிறது.

ஏன் அந்தப் பெண் அந்த குடிகார இளைஞரைத் திருமணம் செய்ய வேண்டும்? இருவரையும் பிணைப்பது எது? அதன்பிறகாவது அந்த இளைஞர் மனம் திருந்தினாரா என்று சொல்கிறது ‘லோக்கல் சரக்கு’ படத்தின் மீதி.

போதையின் உச்சத்தில் என்ன செய்தோம் என்றே தெரியாத ஒரு நபரே இக்கதையின் நாயகன்.

‘கட்டிங் போட பத்து ரூபா வேணும்’ என்று முன்பின் தெரியாதவர்களிடமும் கூட கடன் கேட்பவர். அதனால் விளையும் அவமானங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ துடைத்துக்கொள்ளத் தயாராக இருப்பவர்.

சமூகத்தில் அப்படிப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்கூடாகக் காண்பதால், இக்கதையின் போக்கு நமக்கு அந்நியமாகத் தெரியவில்லை.

நல்லதொரு முயற்சி!

தினேஷ்குமார், யோகிபாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி, சென்றாயன், சாம்ஸ், வையாபுரி, வினோதினி, சிங்கம்புலி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

‘நான் ஒரு வேஸ்டுமா’ என்று நாயகியிடம் சொல்லும் இடத்திலாகட்டும், வில்லனிடம் காலில் விழுந்து கதறுவதாகட்டும், படம் முழுக்க மிகச்சாதாரணமானவனாக நடிக்கப் பெரும் துணிச்சல் வேண்டும்.

அது தன்னில் நிறைய உள்ளது என்பதை உணர்த்தியதோடு திறம்பட நடித்துள்ளார் டான்ஸ்மாஸ்டர் தினேஷ்குமார்.

நாயகியோடு நிற்கும் காட்சிகளில் தனது உயரம் குறைவு என்பதை இயக்குனர் அடிக்கோடிட்டுத் திரையில் காட்டுவதை ஏற்றிருப்பது அவரது பெருந்தன்மை.

நாயகியாகத் தோன்றியிருக்கும் உபாசனா, இதுவரை தமிழில் நான்கைந்து படங்கள் நடித்திருக்கிறார். அப்படங்கள் பெரியளவுக்குக் கவனம் பெறவில்லை. இதிலும் அவரது தோற்றம்தான் அழகுற வெளிப்பட்டிருக்கிறது.

யோகிபாபு இதில் வழக்கமான தனது பாணியை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் வருமிடங்கள் சிரிப்பூட்டுகின்றன. ‘நீ எங்கப்பா சிரிக்கிற மாதிரி காமெடி பண்ணுவ’ என்று அவரை தினேஷ் கலாய்க்கும் வசனங்களும் படத்தில் உண்டு.

உபாசனாவுடன் வரும் வினோதினியும், முன்னணி நாயகனாகப் பாத்திரம் ஏற்றிருக்கும் சாம்ஸும் வரும் காட்சிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ரகம்.

சென்றாயன், அவரது ஜோடியாக வருபவர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, வையாபுரி, ஈஸ்வர் சந்திரபாபு போன்றவர்களும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

பழனியின் ஒளிப்பதிவு, முஜீப் ரஹ்மானின் கலை வடிவமைப்பு ஆகியன திரையில் ‘வீடியோ’ பதிவு பார்த்த எபெக்டை உண்டுபண்ணுகின்றன.

கேஸ்ட்ரோவின் படத்தொகுப்பு இன்னும் ‘இறுக்கமாக’ அமைந்திருக்கலாம். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசை பெரியளவில் நம்மை ஈர்ப்பதாக இல்லை.

மேலே சொன்ன அனைத்துக்கும் ’பட்ஜெட் குறைவு’ என்பதே காரணம் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால், அக்குறைகளை மறைக்கும் அளவுக்குச் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் என்பதே நமது வருத்தம்.

‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ படங்களுக்குப் பிறகு ‘சுறா’வை இயக்கியவர் எஸ்.பி.ராஜ்குமார்.

அதன்பிறகு காமெடியில் வேறொரு இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்ப்புக்கு மாறாக, பெரும் இடைவெளியில் சிறு படங்களைத் தந்து வருகிறார். ‘லோக்கல் சரக்கு’ படமும் அதில் சேர்கிறது.

இயக்குனரின் சமூக அக்கறை!

மது போதையில் விழ வேண்டாம் நண்பர்களே என்று எஸ்.பி.ராஜ்குமார் கதை சொல்லியிருக்கும் விதம் நம்மை நிச்சயம் ஈர்க்கும். அந்த வகையில், மதுவுக்கு அடிமையானவர்களுக்குப் பாடம் சொல்லித்தருவதாக உள்ளது இப்படம்.

போலவே, பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டும் வக்கிர எண்ணத்திற்குத் துணை போக வேண்டாம் என்ற குரலும் இதில் இடம்பெற்றுள்ளது. இக்கருத்துகளைப் புகுத்திய துணிச்சலை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.

அதையும் மீறி, இப்படத்தில் இருக்கும் குறைகள் நம்மை தியேட்டருக்குள் நுழைய விடாமல் தடுக்கக்கூடியவை என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தனைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் கூட மிகசுவாரஸ்யமாக ‘கட்’ செய்யப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் போதிய வரவேற்பு இல்லாமல் தடுமாறுகிறது ‘லோக்கல் சரக்கு’.

மது குடிப்பதைக் கொண்டாட்டமாக முன்வைக்கும் படங்களுக்கு மத்தியில், ‘அது வேண்டாமே’ என்று சொல்லும் படங்கள் நிச்சயம் நம் சமூகத்துக்குத் தேவை.

திரையில் யதார்த்தம் நிறைந்திருக்கும் வகையில், மலையாளப் படங்கள் பாணியில் இதனை மிக எளிமையானதொரு நகைச்சுவை படமாகத் தந்திருந்தால் வரவேற்பு வேறுவிதமாக அமைந்திருக்கும்.

அதையும் மீறி நல்லதொரு கதையாக, நகைச்சுவை நிரம்பிய சில காட்சிகளாக, இப்படம் நம்மைக் கவரும். அது போதும் என்பவர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like