என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு!

– சுந்தர ராமசாமி

கிளம்பும் நேரம். மாமா, என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

அவரும் புளிமூட்டையும் மட்டும் உள்ளே வந்து படுக்கைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, என்ன உடம்புக்கு என்று கேட்டார்.

அம்மா விவரங்கள் சொன்னதும், கவலைப்படாதீர்கள். எனக்கு ஜோஸ்யம் தெரியாது. அதில் நம்பிக்கையும் இல்லை. இப்போ ஒன்று சொல்கிறேன்.

இன்னும் பத்து வருடத்தில் இந்தப் பையன் ஆரோக்கியம் அடைந்து, கெட்டிக்காரனாகவும் ஆகிவிடுவான். அப்படி ஆகிவிட்டால் நான் சொன்னேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னால் அந்த விஷயத்தை என்னிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள் என்றார். உனக்கு இரண்டு, மூன்று பாட்டுக்களாவது பாடிக் காட்ட நினைக்கிறேன்.

சமீபத்தில் என்ன படம் பார்த்தாய் என்று கேட்டார். எதுவும் பார்க்கவில்லை, பார்த்து வெகுநாளாகிவிட்டது என்றேன்.

புளிமூட்டையைப் பாா்த்து ராமசாமி, தம்பிக்கு அருமையாகப் பாடி காட்ட வேண்டும் என்று முறைப்பதும், அவா் பயப்படுவதுபோல் நடிப்பதுமாகச் சிறிது நேரத்துக்குச் சில தமாஷ் எல்லாம் செய்து சிரிக்க வைத்தார்கள். பாட்டும் பாடினார்கள்.

அம்மா அவர்கள் இருவருக்கும் ஸ்பெஷலாக ஓவல்டின் கலந்து கொடுத்தாள். குடித்துக்கொண்டே எனக்கு காப்பி, டீதான் ரொம்ப பிடிக்கும் என்றார்.

என் அக்காவுக்குக் குழந்தை பிறந்ததும், டி.ஏ.மதுரத்தையும் கூட்டிக்கொண்டு, குழந்தைக்கு உடுப்பெல்லாம் வாங்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்.

மதுரம் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து குழந்தையைக் கொஞ்சி மகிழ, அவரும் அருகில் அமர்ந்து, இருவருமாகப் பாட, 30 நாட்கள் கூட ஆகாத குழந்தை, பாட்டை கவனித்துக் கேட்கிறாள் என்று சொல்வதைக் கேட்டு எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம்.

இதெல்லாமே சிறுசிறு விஷயங்களாக இருந்தாலும் எனக்கு மறக்க முடியாத விஷயங்களாக இருந்தன. மாநாடு நடக்கும் சமயத்தில் இரண்டு தடவையாவது அவா் வீட்டிற்கு போய் இருப்பேன்.

அவர் எல்லோரையுமே மிக நுட்பமாகக் கவனித்து, அந்தந்த நேரத்துக்கான விஷயத்தைச் செய்வார்.

அது பெரிய சாமர்த்தியம். நமக்குப் பரபரப்பு ஏற்பட்டால் யாரிடம் பேசுகிறோம். யாரை கவனிக்க வேண்டும் என்கிற குழப்பம் வந்துவிடும்.

அந்தக் குழப்பமே அவருக்கு கிடையாது. ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு அந்தக் காரியத்தைக் கச்சிதமாக செய்வார்.

– காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிற ‘நினைவோடை’ நூலிலிருந்து…

You might also like