இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி ‘தேசிய வாக்காளர் நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.
18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவராகாக் கருதப்படுகிறார்.
சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்தியக் குடியுரிமைப் பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்.
தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அந்த சமயத்தில் வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதை இது எதிர்நோக்குகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது.
தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான்.
வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை இன்று கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் ‘வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்’ என்பதாகும்.
இந்த தினத்தை கொண்டாடும் வகையில் புதுதில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.
தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை, தேர்தல் மேலாண்மை, எளிமையான தேர்தல், வாக்காளர் விழிப்புணர்வு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.