சில நாயகர்களைப் பார்க்கும்போது, இவர்கள் எப்படி நாயகர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள் என்று தோன்றும். காரணம், பொதுவெளியில் நாமாக வரையறுத்து வைத்திருக்கும் நாயக பிம்பம்.
அப்படிப்பட்டவர்களையே நாம் ஆராதிக்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில், அவற்றை உடைத்துச் சுக்குநூறாக்குபவர்களையும் கொண்டாடுகிறோம்.
அப்படிப் பார்த்தால், இரண்டாவது வகையறாவைச் சேர்ந்தவர் பிரிட்டிஷ் நடிகர் ஜேசன் ஸ்டேதம்.
ஆறடி உயரம், ஆஜானுபாகுவான உருவம், வழுக்கைத் தலை, மெல்லிய குரல், பூனை நடை என்று நம்மவர்கள் கொண்டிருந்த பல வரையறைகளுக்கு அப்பாற்பட்டு தோற்றமளிப்பவர்.
அவர் நடித்த ‘தி ட்ரான்ஸ்போர்ட்டர்’, ‘டெத் ரேஸ்’, ‘கிராங்க்’, ‘தி எக்ஸ்பேண்டபிள்ஸ், ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படங்கள் பல பாகங்களைக் கண்டுள்ளன; அவை ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘ஸ்நாட்ச்’, ‘தி இத்தாலியன் ஜாப்’, ’ரிவால்வர்’, ‘கயாஸ்’, ‘தி பேங்க் ஜாப்’, ‘ராத் ஆஃப் மேன்’ உள்ளிட்ட படங்கள் வேறு வகைமைகளில் அமைந்திருந்தாலும், அவற்றின் அடிநாதமாக ஆக்ஷனே இருந்தது.
ஆதலால், ஆக்ஷன் பட விரும்பிகளுக்குப் பிடித்தமானவராகத் திகழ்பவர் ஜேசன் ஸ்டேதம் என்று தாராளமாகச் சொல்லலாம்.
தற்போது, ஜேசம் ஸ்டேதம் நடிப்பில் ‘தி பீகீப்பர்’ (The Beekeeper) ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது இப்படம்?
முதியோரைக் குறிவைக்கும் கும்பல்!
உலகம் முழுக்கவிருக்கும் முதியோரிடம் இருந்து, அவர்களது ஆயுட்காலச் சேமிப்பைக் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று அமெரிக்காவில் இயங்கி வருகிறது.
‘இணையச் சிக்கல்களைத் தீர்க்கிறேன் பேர்வழி’ என்று கூறி, தனியாக வாழும் முதியோரைக் குறிவைத்து, அவர்களது கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து வருகிறது.
மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் வாழும் எலோயிஸ் பார்க்கர் (பிலிசியா ரஷாத்) எனும் பெண்மணி, தனது கம்ப்யூட்டரில் வரும் அபாய எச்சரிக்கையைப் பார்த்து ஒரு இணைய நிறுவனத்தைத் தொடர்பு கொள்கிறார்.
அப்போது, தவறுதலாக அவரது வங்கிக் கணக்கில் 50,000 டாலர் செலுத்தப்பட்டதாக எதிர்முனையில் இருப்பவர் தெரிவிக்கிறார்.
அதனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கில், இணைய வழி பணப்பரிமாற்றத்தை மேற்கொள்கிறார் எலோயிஸ். அதற்குள், அவரது வங்கி மற்றும் காப்பீட்டு கணக்குகளை ‘ஹேக்’ செய்கிறது அந்தக் கும்பல்.
மிகச்சில நொடிகளில் எலோயிஸின் ஆயுட்காலச் சேமிப்பைக் கபளீகரம் செய்கிறது. அவர் நிர்வகித்துவரும் அறக்கட்டளையொன்றின் பணமும் அதில் பறிபோகிறது.
அதனை அறிந்ததும், அவர் செய்வதறியாது திகைக்கிறார். அவமானம் வந்து சேருமே என்று பதைபதைக்கிறார். அதற்கடுத்தநாள், தாயைக் காண வந்த எலோயிஸ் மகள் வெரோனிகா, அவரது மரணத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
எலோயிஸ் வீட்டு வளாகத்தில் தங்கியிருக்கிறார் ஆடம் க்ளே எனும் நபர். தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அந்த நபர், முந்தைய தினம் தான் எலோயிஸ் வீட்டு ‘ஸ்டோர் ரூமில்’ இருந்து ஒரு தேன்கூட்டை எடுத்துச் சென்றிருக்கிறார்.
அதிலிருந்த தேனை ஒரு பாட்டிலில் அடைத்து எலோயிஸிடம் கொடுக்க வந்தவர், வெரோனிகாவிடம் சிக்கிக் கொள்கிறார்.
தாயைக் கொன்றது க்ளே என்பது வெரோனிகாவின் சந்தேகம். ஆனால், தடயவியல் ஆய்வுகளின் முடிவில் க்ளே குற்றமற்றவர் என்று தெரிய வருகிறது.
தாயின் வங்கிக்கணக்கில் சேமிப்பு சூறையாடப்பட்டதையும், அந்த அவமானம்தான் அவரது உயிரைப் பறித்தது என்பதையும் வெரோனிகா அறிகிறார்.
அதனை க்ளேவிடம் சொல்கிறார். ‘எஃப்பிஐயில் இருக்கும் என்னாலேயே அந்த கும்பலை நெருங்க முடியுமா என்பது சந்தேகம் தான். நெருங்கினால் மட்டும் அவர்களை என்ன செய்துவிட முடியும்’ என்று புலம்புகிறார்.
அதனைக் கேட்கும் க்ளே, அந்த கும்பலைக் கருவறுக்க முடிவெடுக்கிறார். ‘பீகீப்பர்’ எனும் அரசு உளவுப்பிரிவை நாடுகிறார்.
ஒருகாலத்தில் அதில் பணியாற்றியவர் தான் க்ளே. கிட்டத்தட்ட ‘ஜேம்ஸ்பாண்ட்’ டைப் சாகசங்களைச் செய்தவர்.
சகாக்கள் தரும் தகவல்களைக் கொண்டு, அந்த கால்சென்டர் இயங்குமிடத்திற்குச் செல்கிறார் க்ளே. அந்த இடத்தையே தூள் தூளாக்குகிறார். அப்போதுதான், அந்த நிறுவனத்திற்குப் பின்னால் இருப்பது ஒரு அரசியல் புள்ளியின் மகன் என்பது தெரிய வருகிறது.
அதையடுத்து க்ளே என்ன செய்தார்? அந்த மோசடிக் கும்பலைக் களையெடுத்தாரா? என்று சொல்கிறது ‘தி பீகீப்பர்’ படத்தின் மீதி.
முதியோரைக் குறிவைத்து, அவர்களது வீடுகளை, நிலங்களை அபகரிக்கும் ‘ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்’ பற்றி, ராகவரா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ படம் பேசியது.
அதேபோன்று இணைய வழியில் செயல்படும் குண்டர்களைப் பற்றிப் பேசுகிறது ‘தி பீகீப்பர்’. அந்த வகையில், இது ‘பான் வேர்ல்டு’ படமாக மாறியிருக்கிறது.
ஜேசன் ரசிகர்களுக்கு மட்டும்..!
இந்த படத்தில் ஆடம் க்ளே ஆக ஜேசன் ஸ்டேதம், எலோயிஸ் ஆக பிலிஷியா ரஷாத், வெரோனிகாவாக எம்மா ரேவர் – லேம்ப்மேன் நடித்துள்ளனர்.
வில்லனாக ஜோஷ் ஹட்சர்சன் வந்து போகிறார். அவரது பெற்றோராக ஜெரிமி அயர்ன்ஸ், ஜெம்மா ரெட்கிரேவ் தோன்றியுள்ளனர்.
அவர்களது பாத்திரங்கள் வழமையானது என்றபோதும், அவையே திரைக்கதையில் சில திருப்பங்களுக்குக் காரணமாக உள்ளன.
என்னதான் இதர நட்சத்திரங்களின் ரசிகர்கள் ஜேசன் ஸ்டேதமைக் கிண்டலடித்தாலும், அவருக்கான ரசிகர் படை எப்போதும் அப்படங்களை ரசிக்கத் தயாராக இருக்கிறது.
‘தி பீகீப்பர்’ படம் அவர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும். ஏனென்றால், அவர்களுக்கு மட்டுமேயான ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை கணிசமாகக் கொண்டிருக்கிறது இத்திரைக்கதை.
படத்தில் வன்முறையை வெளிக்காட்டுமிடங்கள் அதிகம் என்பதால், ‘டீன்’ பருவத்தினர் இதனைப் பார்ப்பது நல்லதல்ல.
கர்ட் விம்மரின் எழுத்தாக்கத்தில் பல ஹாலிவுட் படங்களின் சாயல் நிச்சயம் தெரியும்.
அந்த ‘க்ளிஷே’க்களை தாண்டி ரசிகர்களை ஈர்க்க ஜேசமின் இருப்பே போதும் என்று நம்பியிருக்கிறார் இயக்குனர் டேவிட் அயர்.
கேப்ரியேல் பெரிஸ்டெய்ன் ஒளிப்பதிவு, டேவ் சார்டி – ஜாரெட் மைக்கேல் ப்ரையின் இசை, ஜெஃப்ரி ஓ பிரையன் படத்தொகுப்பு ஆகியன அதற்கு உதவுகின்றன.
பென் முன்ரேவின் தயாரிப்பு வடிவமைப்பில் கதாபாத்திரங்கள் தங்குமிடங்கள், சாலையோர பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவை மிளிர்கின்றன.
ஆனால், ஏற்கனவே வெளியான ஜேசமின் படங்களை விட இதன் பட்ஜெட் மிகக் குறைவு என்பதை கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டவிதம் பளிச்சென்று சொல்லிவிடுகிறது.
‘க்ளிஷே’ அதிகம்!
தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு சமூகத்தை விட்டு விலகி வாழும் நாயகன், ஒரு பிரச்சனைக்காக மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து சுயரூபத்தைக் காட்டும் கதைகள் ஹாலிவுட்டுக்கு புதிதல்ல. ஏன், ஜேசன் ஸ்டேதம் நடித்தவற்றில் பல படங்கள் அது போன்ற கதையமைப்பைக் கொண்டவைதான்.
அந்த பார்முலாவின் இன்னொரு வடிவம்தான் கேங்க்ஸ்டர்கள் சாதாரண மனிதர்களாக வாழ்வதாகக் காட்டுவது.
லியோ, தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள ‘சைந்தவ்’ போன்றவை அந்த வரிசையில் சேரும். அந்த படங்களின் கதையைக் கேட்டவுடனே, அவற்றில் ‘க்ளிஷே’ சதவிகிதம் எவ்வளவு என்று கணக்கிட்டுவிடலாம்.
மேலே சொன்னவற்றில் இருந்து ‘தி பீகீப்பர்’ படத்திலும் க்ளிஷேக்கள் அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அதையும் தாண்டி, மனதிலிருக்கும் கவலைகளை விட்டொழித்து ’ஹாயாக’ படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ‘தி பீகீப்பர்’ நல்லதொரு ஆக்ஷன் பட அனுபவத்தை வழங்கும்!
– உதய் பாடகலிங்கம்